Last Updated : 02 Jan, 2017 11:02 AM

 

Published : 02 Jan 2017 11:02 AM
Last Updated : 02 Jan 2017 11:02 AM

புத்தக வெளிச்சத்தில் விழித்திருந்த நள்ளிரவு

நவம்பரில் பண மதிப்பு நீக்கம், டிசம்பரில் வார்தா புயல் என மாதந்தோறும் ஏதாவதொரு தாக்குதலில் சிக்கிய மக்களை மெல்ல மீட்டெடுத்து, அறிவியக்கத்தின் பக்கமாய் அழைத்துவர 'தி இந்து' தமிழ் நாளிதழ் இரண்டாம் ஆண்டாய் முன்னெடுத்ததே 'புத்தகங்களோடு புத்தாண்டு இயக்கம்'.

'தி இந்து' சென்ற ஆண்டே விடுத்த அழைப்பை ஏற்று, பதிப்பகங்களும் புத்தகக் காதலர்களும் சேர்ந்து புத்தக இரவைக் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்த ஆண்டும் அப்படியான 'புத்தக இரவு உண்டா?' என்கிற வாசகர்களின் எதிர்பார்ப்பு பொய்க்காமல், சென்னையிலும் தமிழகத்தின் சில முக்கிய நகரங்களிலும் பல்வேறு புத்தகக் கடைகள் விடிய விடிய திறந்திருந்தன. வாசகர்களும் ஏராளமானோர் வந்திருந்து புத்தகங்களை ஆர்வமாய் வாங்கிச் சென்றனர். பல புத்தக நிலையங்களில் புத்தக வெளியீடு, புத்தக அறிமுகம், வாசகர் கலந்துரையாடல் என பல்வேறு நிகழ்ச்சிகளும் சேர்ந்தே களைகட்டின.

புத்தகப் புத்தாண்டே வருக…

சென்னை மயிலாப்பூரிலுள்ள பரிசல் புத்தக கடையில் மாலை 6 மணிக்கே 'புத்தக இரவு' கலை, இலக்கிய, திரைப்படச் சந்திப்பரங்கமாகத் தொடங்கிவிட்டது.

'பேசும் புத்தகங்கள்' எனும் தலைப்பில் பத்திரிகையாளர் ஞாநியின் உரையோடு தொடங்கிய 'புத்தக இரவு' நிகழ்வில், இயக்குநர் பா.ரஞ்சித், சைதை ஜெ உள்ளிட்டோர் பங்கேற்று கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர். வண்ணதாசன் உள்ளிட்ட எழுத்தாளர்களின் நூல் அறிமுகங்கள் நடைபெற்றன. 'தமிழ்ச் சிறுகதை நூற்றாண்டு' எனும் தலைப்பில் 'தி இந்து' இணைப்பிதழ்களின் ஆசிரியர் அரவிந்தன் உரையாற்றினார். ஓவியர் டிராட்ஸ்கி மருது, இயக்குநர் கவிதாபாரதி, ஆவணப்பட இயக்குநர் ஆர்.பி.அமுதன் ஆகியோர் கலந்துரையாடினர். கி.அ.சச்சிதானந்தன் 'இடைவெளி' காலாண்டிதழை வெளியிட்டு பேசும்போது, “இந்த புத்தக இரவு எனும் நிகழ்வு எனக்கு இளைஞர்கள்மேல் மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இப்படியான சந்திப்புகளைப் புத்தாண்டின் முதல் நாளிலிருந்தே செய்ய முன்வந்திருப்பது நல்ல தொடக்கம்” என்றார். கனடாவைச் சேர்ந்த எழுத்தாளர் தேவகாந்தன், இயக்குநர் ஜெ.வடிவேல், மோகன், பொன்.சுதா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 'பரிசல்' செந்தில்நாதன் நிகழ்வை ஒருங்கிணைத்தார்.

உயிர்ப்பான எழுத்தாளர் - வாசகர் சந்திப்பு

உயிர்மை பதிப்பகத்திலும் புத்தாண்டு புத்தகக் கொண்டாட்டம் களை கட்டியது. சாருநிவேநிதா, தமிழச்சி தங்கபாண்டியன் விநாயக முருகன், அபிலாஷ், சரவணன் சந்திரன், வெய்யில், ஷங்கரராம சுப்பிரமணியன், பிரபு காளிதாஸ் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட எழுத்தாளர்களும் கவிஞர்களும் வந்திருந்தனர். வாசகர்கள் எழுத்தாளர்களோடு உரையாடியதோடு, அவர்களுக்குப் பிடித்தமான புத்தகங்களிலும் கையெழுத்துப் பெற்றுச் சென்றனர்.

“இந்த 'புத்தகங்களோடு புத்தாண்டு' எனும் சொல்லா டலை முன்மொழிந்து, அதை ஒரு இயக்கமாக்கிய 'தி இந்து'வுக்கு நன்றி” என்றார் கவிஞர் மனுஷ்யபுத்திரன்.

நட்பின் பரிசாக புத்தகங்கள்…

“நண்பர்களையும் அழைத்து வந்து, நீ என்ன புத்தகம் வேணும்னாலும் வாங்கிக்க. இது என்னோட புத்தாண்டுப் பரிசு என்று பலரும் சொன்னது நெகிழ்ச்சியாக இருந்தது…” என்றார் 'டிஸ்கவரி புக் பேலஸ்' உரிமையாளர் வேடியப்பன்.

நாச்சியாள் சுகந்தியின் கவிதை நூல், பிரபஞ்சனின் கட்டுரை நூல்கள், எஸ்.ராமகிருஷ்ணனின் சிறுவர் நாவல் வெளியீடு என்று தொடர்ந்தன நிகழ்வுகள். முதல் நாள் மாலை 3 மணிக்குத் தொடங்கிய நிகழ்வுகள், புத்தாண்டு விடியலில் காலை 4 மணிக்குத்தான் முடிவுக்கு வந்தன.

மற்றொரு இரவல்ல இது…

பொள்ளாச்சி எதிர் வெளியீடு புத்தகக் கடையும் விடியும்வரை திறந்திருந்தது. எழுத்தாளர் ராஜன்குறை, கவிஞர் பெருந்தேவி ஆகியோர் வருகை தந்தனர்.

“கடந்த இரண்டு நாட்களாகவே வாசகர்கள் இந்த வருஷமும் கடை திறந்திருக்குமான்னு கேட்க ஆரம்பிச் சிட்டாங்க. சில நண்பர்கள் போன்லேயே ஆர்டர் கொடுத் தாங்க. வாசகர்கள் கூட்டம் கூட்டமா நள்ளிரவில் வந்து புத்தகம் வாங்கிக்கிட்டுப் போனாங்க. ஒரே நாள் இரவில் 52 ஆயிரம் ரூபாய்க்கு நூல்கள் விற்றன என்பது சாதாரண நிகழ்வல்ல” என்றார் அனுஷ்.

கவிதையால் வரவேற்பு…

சென்னை தேனாம்பேட்டையிலுள்ள பாரதி புத்தகாலயத்தில் கவிஞர்கள் இரா.தெ.முத்து, தமிழ் மணவாளன், நா.வே.அருள், பாரி கபிலன் ஆகியோர் கவிதையாலேயே புத்தாண்டை வரவேற்றனர்.

“இதுவரை இல்லாத வகையில் புத்தாண்டின் முதல் நாள் சிறப்புத்தள்ளுபடியாக 50 சதவீத தள்ளுபடியில் நூல்களை வழங்கினோம். முதல் நாளே ரூ.2 லட்சத்திற்கும், புத்தக இரவில் மட்டும் ரூ.1 லட்சத்திற்கும் புத்தகங்கள் விற்பனையாகியுள்ளன…” என்றார் பாரதி புத்தகாலய உரிமையாளர் க.நாகராஜன்.

புதிய வாசலும் புதிய பயணமும்…

“சென்னையில் அம்பத்தூர், ஸ்பென்ஸர் பிளாசா ஆகிய இரு இடங்களில் மட்டுமில்லாமல், தமிழகத்திலுள்ள பத்துக்கும் மேற்பட்ட ஊர்களில் என்சிபிஹெச்.சின் கிளைகள் இரவு முழுக்க திறந்திருந்தன. எல்லா ஊர்களிலும் பல்லாயிரம் வாசகர்கள் வருகை தந்து புத்தகங்களை வாங்கிச் சென்றிருக்கிறார்கள். 'தி இந்து' தொடங்கியிருக்கும் இந்த அறிவுக் கொண்டாட்டத்தில் நாங்களும் எப்போதும் இணைந்திருப்போம்…” என்றார் என்சிபிஹெச் பொதுமேலாளர் இரத்தினசபாபதி.

அறிவுத்தீ எங்கும் பரவட்டும்

பாரதி புத்தகாலயம், உயிர்மை, டிஸ்கவரி புக் பேலஸ் என பல இடங்களில் நடைபெற்ற புத்தக இரவு நிகழ்வுகளிலும் சுற்றிச் சுழன்றபடி பங்கேற்றுப் பேசியுள்ளார் இயக்குநரும் எழுத்தாளருமான பாரதி கிருஷ்ணகுமார்.

”புத்தாண்டின் முதல் நாளை புத்தகங்களோடு கொண்டாடுவோம்; புத்தகங்களோடு தொடங்குவோம் என்று 'தி இந்து' முன்னெடுத்த இந்த முயற்சி வீண்போகவில்லை. அறிவின் தேக்கத்தை, தயக்கத்தை உடைக்கும் ஒரு நிகழ்வாக இந்த 'புத்தக இரவு' மாறியிருக்கிறது. ஒரு சமூக விழிப்புணர்விற்கான தூண்டுதலை இந்த புத்தாண்டு புத்தகக் கொண்டாட்டம் தந்துள்ளது. இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ள அனைவர் சார்பாகவும் 'தி இந்து'வுக்கு நெகிழ்வான நன்றி…” என்றார் பாரதி கிருஷ்ணகுமார்.

சென்னையில் மட்டுமல்ல, திண்டுக்கல், சேலம், ஈரோடு, கோவை, திருச்சி, விழுப்புரம், வேலூர், மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருநெல்வேலி ஆகிய ஊர்களிலும் நள்ளிரவிலும் புத்தகக் கடைகள் திறந்திருந்தன. புத்தாண்டின் சிறப்புத் தள்ளுபடியாக 10 முதல் 50 சதவீத தள்ளுபடியில் புத்தகங்கள் கொடுக்கப்பட்டன.

வலிய தீயை காற்று வளர்க்கும்

எந்த ஒரு நல்ல செயலுக்குமான வரவேற்பென்பது தாமதமாகத்தான் கிட்டும் என்று சொல்வார்கள். ஆனால், 'தி இந்து' முன்னெடுத்துள்ள இந்த 'புத்தகங்களோடு புத்தாண்டு இயக்கம்' தொடங்கிய இரண்டாம் ஆண்டிலேயே வாசகர்களாலும், எழுத்தாளர்களாலும், பதிப்பகங்களாலும் இவ்வளவு பெரிய வரவேற்பினைப் பெற்றிருப்பது நல்ல மாற்றமாக அமைந்திருக்கிறது.

மகாகவி பாரதி எழுதினான்:

“காற்று மெலிய தீயை அவித்து விடுவான்.

வலிய தீயை வளர்ப்பான்” என்று.

இந்த அறிவுத்தீயை காற்று மட்டுமல்ல; மக்களும் சேர்ந்தே வளர்த்தெடுப்பார்கள்.

- மு.முருகேஷ் | தொடர்புக்கு: murugesan.m@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x