கடவுளின் நாக்கு 47: மவுனக் காட்சிகள்!

கடவுளின் நாக்கு 47: மவுனக் காட்சிகள்!
Updated on
3 min read

மருத்துவமனை ஒன்றின் பார்வையாளர்கள் பகுதியில் காத்திருந்தேன். அங்கிருந்த தொலைக்காட்சி மவுனமாக ஓடிக்கொண்டிருந்தது. அதன் முன்னே நாற்பது, ஐம்பது பேர் கலக்கமான முகத்துடன் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். சத்தமே இல்லாமல் தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பார்ப்பது முற்றிலும் அபத்தமாக இருந்தது. அதுவும் நகைச்சுவைக் காட்சிகளைச் சத்தம் இல்லாமல் பார்ப்பது பேரபத்தம். ஆனால், ஒருவர்கூட அதைப் பொருட்படுத்தவே இல்லை, எதற்காக இப்படி மவுனமாக ஓடும் தொலைக்காட்சி தேவைப்படுகிறது? தன் வேதனையை மறைத்துக்கொள்ள ஏதாவது ஒரு காட்சி தேவையாக இருக்கிறதா அவர்களுக்கு?

வீட்டில் இப்படி ஐந்து நிமிஷங்கள் தொலைக்காட்சியைச் சத்தமில்லாமல் வைத்து இவர்களால் பார்க்க முடியுமா என்ன?!

மனதில் ‘நாற்பது இன்ச் மவுனம்’ என்றொரு சொல் எழுந்து ததும்பிக்கொண்டிருந்தது. மருத்துவமனையில் காத்திருப்பது என்பது மிகவும் நெருக்கடியானது. யார் நோயாளி? யார் பார்வையாளர்கள் எனத் தெரியாது. எல்லோரது முகத்திலும் கவலை படிந்திருக்கிறது. உடலின் குரலைக் கேட்க மறந்தவர்களுக்கு உடல் தன் இருப்பை வலிமையாக காட்டிக்கொள்கிறது.

பரபரப்பான நகர வாழ்க்கையில் இருசக்கர வாகனங்கள்கூட முறையாக பராமரிக்கப்படுகின்றன. கார்களை ஒழுங்காக சர்வீஸ் செய்து வைத்துக்கொள்கிறார்கள். ஆனால், உடலை ஒருபோதும் கட்டுக்குள் வைத்துக்கொள்வது இல்லை. உடலும் மனமும் புத்துணர்வு கொள்ளவேண்டும் என்பதை எவரும் யோசிப்பதே இல்லை. நோயுற்ற பின்பே யோகா, தியானம், உணவுக் கட்டுப்பாடு, இயற்கை உணவு எனத் தேடி ஓடுகிறார்கள்.

அவசரமும் பதற்றமும் இல்லாத ஒரு மனிதனைக்கூட மாநகரில் காணவே முடியவில்லை. நகரம் சத்தங்களால் நிரம்பி வழிகிறது. மனிதர்கள் இயற்கையைத் தேடி ஓடுவதற்கு முக்கியமான காரணம், அங்கே செயற்கையாக உருவாக்கப்பட்ட எந்த சத்தமும் இல்லை என்பதுதான்!

சத்தமே இல்லாமல் இருக்க முடியாத நிலைக்கு நகரவாசிகள் பழக்கப்படுத்தப்பட்டு விட்டார்கள். ஏன் சத்தமோ, காட்சியோ ஏதோ ஒன்று நமக்கு எப்போதும் தேவைப்படுகிறது? முக்கியமான காரணம், மவுனமாகக் கண்களை மூடியிருந்தால் நம்மைப் பற்றி யோசிக்கத் தொடங்கிவிடுகிறோம். தன்னைப் பற்றி நினைத்துக்கொண்டால் பலருக்கும் தாழ்வு மனப்பான்மை அதிகரித்துவிடுகிறது. அதனால்தான் ஏதாவது ஒரு காட்சி, அல்லது இசையில் தன்னை மறைத்துக்கொள்ள முயற்சிக்கிறார்கள்.

உண்மையில் தன்னை அறிவதும், தன் நிறைகுறைகளை ஆராய்வதும் ஒவ்வொருவரும் முனைந்து செய்யவேண்டிய செயல். தனிமை கொள்வது அவசியமானதுதான். ஆனால் தனிமையை சுகிக்கவும் தனித்திருக்கவும் நாம் பயம் கொள்கிறோம். அது துறவிகளுக்கானது என நினைக்கிறோம். அது வெறும் கற்பிதம்!

மருத்துவமனையில் கண்களை விரித்து வைத்தால் கதைகள் எழுதுவதற்கான நூறு விஷயங்கள் கண்முன்னே நடக்கின்றன. கடைசி வரிசையில் ஒரு பெண் தனியே அமர்ந்து கண்ணீர் சிந்திக்கொண்டிருக்கிறாள். ஆறுதலாக யாரும் ஒரு வார்த்தை சொல்லவில்லை. அவளது விசும்பலை நேர்கொள்ளாமல் தலை திருப்பிக்கொள்கிறார்கள். அவளுக்கு என்ன துயரமோ? கண்ணீரால் வேதனையைக் கரைத்துக்கொண்டிருக்கிறாள்.

உதடு கிழிந்த மூன்று வயது சிறுமி ஒருத்தி, கையில் ரப்பர் பந்து வைத்தபடியே உட்கார்ந்திருக்கிறாள். ஒரு முதியவரின் கைகள் தானே நடுங்கிக் கொண்டிருக்கின்றன. முக்காடு போட்ட ஒரு பெண் கையில் பைபிள் வைத்து முணுமுணுத்துக் கொண்டிருக்கிறார். யாரோ சத்தமாக போனில் ஹெல்த் இன்சூரன்ஸ் கம்பெனியோடு சண்டைபோட்டுக் கொண்டிருக்கிறார்கள். 10 நாட்கள் மருத்துவமனை காத்திருப்புப் பகுதியில் ஒருவன் இருந்தால்போதும், மனதின் ரவுத்திரம், வன்மம், கோபம் எல்லாம் தானே ஒடுங்கிப் போய்விடும்.

முடிவே இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் பிரம்மாண்டமான நதி என்பது நமது உடலின் ரத்த ஓட்டம்தான். அந்த நதியின் குரலை நாம் பொருட்படுத்துவதே இல்லை. ரத்த வேகம்தான் எல்லா செயல்களுக்கும் காரணம் என்கிறார்கள். ஆனால், குருதியைக் கண்ணால் பார்க்கக்கூட பலருக்கும் பயமாக இருக்கிறது.

எத்தனை வயதானாலும், எவ்வளவு வசதி, எவ்வளவு அதிகாரம் இருந்தாலும் வலியை எதிர்கொள்ளத்தானே வேண்டும். வலி யாருக்கும் கருணை காட்டுவது இல்லை. வலியின் முன்பு அனைவரும் சமமே. உண்மையில் வலி கற்றுத்தருகிறது. வலியின்போது வரும் கண்ணீர் நமக்கு சில பாடங்களைப் புகட்டுகிறது. மருத்துவமனையைவிட்டு வெளியே வந்தவுடன் அந்தப் பாடங்களை நாம் மறந்துவிடுகிறோம்.

அங்கோலா நாட்டின் நாட்டுப்புறக்கதை ஒன்று மனிதர்களுக்கு ஏன் நோய் உருவானது என்பதைப் பற்றிக் கூறுகிறது.

உலகில் மனிதர்கள் படைக்கப்பட்டபோது அவர்களுக்கு நோயோ, வலியோ எதுவும் கிடையாது. இயற்கையோடு இணைந்து உறுதியான உடலோடுதான் வாழ்ந்தார்கள். மரணம் இல்லாத வாழ்க்கை என்பதால் மனிதர்கள் எதற்கும் அச்சம் கொள்ளவில்லை. பூமியில் கொண்டாட்டத்துடன் வாழ்ந்து வந்தார்கள்.

ஒருமுறை கடவுள் பூமிக்கு வந்தபோது மனிதர்களில் ஒருவன், ‘நீங்கள் எங்களைவிட எந்த விதத்திலும் உயர்ந்தவர் இல்லை; உங்களை ஏன் வணங்க வேண்டும்?’ என கேலி பேசினான். இதனால் கோபம் அடைந்த கடவுள், மனிதர்கள் தன்னை உணர்வதற்காக ‘நோயும், சாவும் உண்டாகட்டும்’ என சாபம் கொடுத்தார். அதன் பிறகே மனிதர்கள் நோயுறத் தொடங்கினார்கள். இறந்து போனார்கள். ஆகவேதான் நோயுற்ற மனிதன் தன்னை தண்டித்த கடவுளிடம் மன்னித்துக் கொள்ளும்படி மன்றாடுகிறான் என்கிறது கதை.

மதம் நோயைக் காட்டி மனிதனை பயம்கொள்ள வைக்கிறது. விஞ்ஞானம் ‘நான் இருக்கிறேன், அச்சம் வேண்டாம்’ என தைரியம் தருகிறது. இரண்டுக்கும் இடையில் மனிதர்கள் ஊசலாடிக்கொண்டே இருக்கிறார்கள்.

வாழ்க்கை சிலருக்கு நோயின் வழியாகவே பாடம் கற்றுத்தருகிறது. நோய் தீர்ப்பது குறித்தும், நோய் வந்தால் செய்யவேண்டிய சடங்குகள் குறித்தும், நோயில் இருந்து தற்காத்துக்கொள்ள கடவுளுக்கு செய்யப்படும் பூஜைகள் குறித்தும், உலகெங்கும் விதவிதமான கதைகள் உலவுகின்றன. வாதைக்கு என்று தனியாக ஒரு கடவுளே இந்தியாவில் இருக்கிறார். நோய் வரப்போவதாக நினைத்து, பயப்படும் குணத்தை கதைகள் கேலி பேசுகின்றன. நலமடைந்த மனிதன் எவ்வளவு நன்றியுள்ளவனாக நடந்துகொள்ள வேண்டும் என்பதையும் கதைகள் சுட்டிக்காட்டுகின்றன.

‘வாயைக் கட்டிக்கொள்’ என்று பெரியவர்கள் சொல்வார்கள். அது உணவு விஷயத்துக்கு மட்டுமல்ல; பேச்சு விஷயத்திலும்தான். இரண்டையும் இன்று கைவிட்டுவிட்டார்கள் என்பதே நோயுறுவதற்கான முதல் காரணம்.

- கதைகள் பேசும்… | எண்ணங்களைப் பகிர: writerramki@gmail.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in