Last Updated : 18 Feb, 2017 10:04 AM

 

Published : 18 Feb 2017 10:04 AM
Last Updated : 18 Feb 2017 10:04 AM

என் குடும்பம்: சாருவின் உலகம்

எழுத்தாளனும் துறவியும் ஒன்று என நினைப்பவன் நான். துறவி எனில் ஜடாமுடி வளர்ப்பது அல்ல; ஆசாபாசங்களைத் துறப்பது. ஒட்டுமொத்த சமூகத்துக்குமாகத் தன்னை ஒப்புக்கொடுத்த ஒரு எழுத்தாளன், குடும்பம் என்ற இறுகிய அமைப்பில் எப்படித் தன்னை இருத்திக்கொள்ள முடியும்? ஆனாலும், இந்தியச் சமூகத்தில் பெண் துணை தேவையெனில் அதற்கு இருக்கும் ஒரே வழி குடும்பம். 1980-ல் ‘லிவிங் டுகெதர்’ என்ற பாணியில் முயற்சி செய்த கலக வாழ்க்கை பத்து ஆண்டுகளில் தோல்வியில் முடிந்ததால் அதற்குப் பிறகு தனியாகவே வாழ்ந்துவிடலாம் என்ற முடிவுக்கு வந்திருந்தேன்.

அரசுப் பணிக்குக்கூடச் செல்லாமல் ஊர் ஊராகச் சுற்றினேன். கையில் ஒரு பைசா இருக்காது. நண்பர்களின் இல்லங்களில் தங்குவேன். பிறகு அங்கிருந்து இன்னொரு ஊர். ஆறு மாதங்கள் இமயமலை வாசம். ஒரு ஆண்டு முழுவதும் நாடோடி மக்களோடு வாழ்க்கை. என் வாழ்வின் சம்பவங்கள் அனைத்தும் - இன்று வரை - ஒரு திடுக்கிடும் மர்ம நாவலின் பக்கங்களைப் போல் மாறிக்கொண்டே போகும். அப்போது அரசு வேலையில் திரும்பவும் சேர்ந்தேன். சேர்ந்த ஒரே வாரத்தில் அலுவலகத்தில் சக ஊழியராக இருந்த அவந்திகா தன் நாட்குறிப்புகளை என்னிடம் படிக்கக் கொடுத்தாள். அடுத்த வாரம் எங்கள் திருமணம்.

அவந்திகாவுக்கு இளம்வயதிலேயே திருமணம் ஆகி, குழந்தையின் பால்மணம் மாறுவதற்குள் கணவனை இழந்து சமூகத்தின் கோரப் பார்வைக்கு இலக்காகி இருந்தாள். “ஏன் பாப் ஹேர் வைத்திருக்கிறாய்?” என்றேன். “இடுப்புக்குக் கீழே தொங்கும் முடி. கைம்பெண் ஆனதும் மொட்டை அடித்துவிட்டார்கள். அதிலிருந்து நீண்ட முடியின் மீது ஆர்வம் போய்விட்டது” என்றாள். எங்கள் திருமணத்தின்போது மகன் கார்த்திக் ஓடி விளையாடிக்கொண்டிருந்தான். “நீ ஏற்கனவே மிகவும் சிரமப்பட்டுவிட்டாய்.

இன்னும் குழந்தைகளைப் பெற்றுக்கொண்டு பள்ளிக்கூடத்துக்கும் வீட்டுக்கும் உன்னை அலைய விட விருப்பமில்லை. நீ எழுத்தை மட்டுமே கவனி” என்றாள் அவந்திகா. இன்று வரை நான் ரேஷன் கார்டு, மின்கட்டண அட்டை போன்றவற்றைப் பார்த்ததுகூட இல்லை. குடும்பத்தில் என்னுடைய பங்கு என்பது சமையலில் உதவி செய்வது மட்டுமே. எல்லாவற்றையும்விட முக்கியமான விஷயம், ‘வீடு கட்டு, வீடு வாங்கு’ என்று சொல்லி என் வாழ்க்கையைச் சிரமப்படுத்தியதில்லை. அதற்காகவே அவளுக்கு ஆயுள் முழுதும் நன்றி சொல்லலாம்.

திருமணத்துக்கு முன்பு நான் அவளிடம் சொன்னேன், “நீயோ வைஷ்ணவ குலம். நானோ தீவிர அசைவம். ஓட்டலில் சாப்பிடுவதெல்லாம் எனக்கு சரிப்பட்டுவராது. அதனால் திருமணம் வேண்டாம், நண்பர்களாகவே இருந்துவிடுவோம்” என்று. “அதெல்லாம் பிரச்சினையே இல்லை” என்றாள். ருசி கூடப் பார்க்க மாட்டாள். மணத்திலேயே தெரிந்துவிடும். இன்று வரை அவந்திகா சமைக்கும் அளவுக்கு ருசியான அசைவ உணவை நான் சாப்பிட்டதே இல்லை. அவள் வைக்கும் வாத்துக் கறியும் கருவாட்டுக் குழம்பும் நளனால்கூட செய்ய முடியாது. (ஆமாம், நளன் சைவமா?)

ஆரம்பத்தில் சில ஆண்டுகள் நான் மூல வியாதியால் அவதியுற்றேன். அப்போது, தானே குப்பங்களுக்குச் சென்று பன்றிக் கறி வாங்கி வந்து சமைப்பாள். நத்தை சமைப்பாள். எனக்குக் கருவாடு பிடிக்கும் என்பதால் தானே மீனை வாங்கிக்கொண்டு வந்து கருவாடு போடுவாள். “ஏனம்மா இப்படி சிரமப்படுகிறாய்? கருவாடுதான் கடையில் கிடைக்கிறதே?” என்பேன். அதற்கு அவள் சொன்ன காரணத்தை மரணப் படுக்கையில் கூட மறக்க மாட்டேன். “உனக்கு ரத்த அழுத்தம் அதிகம். அதற்கு உப்பு பகை. கடையில் வாங்கினால் உப்பு அதிகம் இருக்கும். வீட்டில் நானே போட்டால் கொஞ்சமாகப் போடுவேன்.” (இத்தனை செய்தாலும் எனக்கு ஒரே ஒரு குறை உண்டு. வைணவர்களின் பிரசித்தி பெற்ற உணவான அக்கார அடிசில் செய்துகொடுத்ததில்லை!)

ஒரு எழுத்தாளனைக் கணவனாக ஏற்பதற்கு மிகுந்த தியாக உள்ளம் வேண்டும். ஏன்? விஷத்துக்கு விஷமே மருந்து. என் எழுத்தைப் படித்து பல நண்பர்களின் மன வியாதிகள் குணமடைந்திருப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், ஒருவித உச்சபட்சமான உன்மத்த நிலையிலேயே என்னுடைய பல படைப்பு கள் உருவாகின்றன. அந்த நேரத்தில் என்னை யாருமே நெருங்க முடியாது. ஒரு சாமியாடியின் மனநிலை அது. அதை சகித்துக்கொள்வதால் அல்ல; அதைப் புரிந்துகொண்டதால் அவந்திகா என் போற்றுதலுக்குரியவள் ஆனாள்.

அப்போதெல்லாம் எனக்கு நண்பர் கள் அதிகம். இரவு பத்து மணிக்குக்கூட பத்து பேர் சேர்ந்து வீட்டுக்கு வருவார் கள். காலை விடியும் வரை பேசிக் கொண்டிருப்போம். எல்லோருக்கும் கோழிக் குழம்பு வைத்து சுடச் சுட இட்லி செய்து தருவாள். அவந்திகாவின் இன்னொரு விசேஷம், அவள் என் மீது கோபம் கொண்டோ, சண்டை போட்டோ இதுவரை நான் பார்த்ததில்லை. நான் கத்தினால் கூட சிரித்துக்கொண்டு போய்விடுவாள். அதற்கு மேல் ஒருவருக்குக் கத்தத் தோன்றுமா என்ன?

குடும்பத்தின் அடுத்த உறுப்பினர் கார்த்திக். அம்மாவுக்கு ஏற்ற பிள்ளை. அதிர்ந்தே பேச மாட்டான். அவனுக்கு நான் வைத்திருக்கும் பட்டப் பெயர் ‘மகாத்மா’. எழுத்தாளனுக்கு மனைவியாக இருப்பது மட்டும் அல்ல; பிள்ளையாக இருப்பதும் சிரமமே. நான் அடுத்தவர் சுதந்திரத்தை மதிப்பவன் என்றாலும் வீட்டில் யாரும் தொலைக்காட்சி பார்க்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்.

அதனால் வீட்டை விட்டு ஓடி ரணகளம் செய்யாமல் தன்னுடைய ஈடுபாடுகளை விளையாட்டு, உலக சினிமா என்று பார்த்துக்கொண்டவன் அவன். இப்போது எங்கள் குடும்பத்தில் ஒரு புதிய உறுப்பினர் மராட்டிப் பெண் அனுராதா. இன்னும் இரண்டு மாதங்களில் கார்த் திக்கை மணக்க இருக்கிறாள் என்றாலும் இப்போதே எங்கள் குடும்பத்தோடு இணைந்துவிட்டாள். பிராணிகளை நேசிப்பவள்.

என் குடும்பம் மனிதர்களால் மட்டும் ஆனதல்ல. ஐந்து நாய்களும் இரண்டு பூனைகளும் உண்டு. அதைப் பற்றியெல்லாம் பக்கம் பக்கமாக என் நாவலில் எழுதியிருக்கிறேன்.

(அடுத்த வாரம்: என் நூல்கள் )
சாரு நிவேதிதா,
‘ஸீரோ டிகிரி’, ‘எக்ஸைல்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.
தொடர்புக்கு: charu.nivedita.india@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x