Last Updated : 25 Mar, 2017 08:59 AM

 

Published : 25 Mar 2017 08:59 AM
Last Updated : 25 Mar 2017 08:59 AM

கரையாத நிழல்

நவீனத் தமிழ் உரைநடை இலக்கியத்தில் மிக முக்கியமான பங்களிப்பு செய்தவர் அசோகமித்திரன். அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக எழுத்துலகில் இயங்கியவர் அவர். தொடர்ச்சியான செயல்பாட்டில் மிக விரிவாகவே தமது எழுத்துக்களை முன்வைத்திருக்கிறார் என்பதே அவரை மிக முக்கியமான படைப்பாளியாக நிலைநிறுத்துகிறது.

அசோகமித்திரனின் ஆக்கங்கள் அனைத்தையும் மேலோட்டமாக வாசிக்கும் ஒருவருக்கு உடனடியாகப் புலப்படும் ஓர் அம்சம், அதன் எளிமை. அவர் கையாளும் சொற்கள் எளிமையானவை. அவரது நடை, ஜோடனைகள் இல்லாதது. உரக்க ஒலிக்காத குரலே அவர் கதைகளில் வெளிப்படுவது. ஆனால், இந்த எளிமையின் ஆழத்தில் பொருள்படுவது வாழ்வின் அவிழ்க்க இயலாப் புதிர்கள். அறிய முடியாத மர்மங்கள். இதை ஒரு வாசகர் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், அசோகமித்திரனின் எழுத்துக்களையே தொடர்ந்து வாசிப்பதுதான் வழி. இந்தப் படைப்பாக்க முறை முற்றிலும் அவருக்கே உரியது. நவீனப் புனைவிலக்கியத்துக்கு அவரது கொடை இதுவே.

எளிமையான எழுத்து முறைக்குத் தமிழில் முன்னோடிகள் இருக்கிறார்கள். கு.ப. ராஜகோபாலன், கு. அழகிரிசாமி போன்றவர்களை இந்தப் போக்கின் எடுத்துக்காட்டுகளாகச் சொல்லலாம். அசோகமித்திரனையும் அவர்களுடைய வரிசையில் வைத்துப் பார்க்க முடியும். ஆனால், அசோகமித்திரனின் எளிமைக்கு அப்பால் தெரியும் தீவிர உணர்வுகளே அவரைத் தனித்துக் காட்டுகின்றன. இது அவரது எழுத்தின் இயல்பு மட்டுமல்ல; அவர் வாழ்ந்த வாழ்க்கையின் குணமும்கூட. அவரது தோற்றம் எளிமையானது. எழுத்தாளர் என்ற நிலையில் சமூகம் சின்னதாகப் புருவம் உயர்த்தி லேசாக வியந்து பார்க்கும் பார்வைக்கு முற்றிலும் மாறுபட்டவர். சாதாரணமானவர். அவரை அணுகுவது சுலபம். அவரது எழுத்துக்கள் பெரும் பத்திரிகைகளிலும் பொதுப் பார்வைக்கே எட்டாத சிற்றிதழ்களிலும் வெளிவந்திருக்கின்றன. ‘யாரும் பார்க்கக் கூடச் செய்யாத பத்திரிகைகளுக்கெல்லாம் எதற்காக உங்கள் படைப்புகளைக் கொடுக்கிறீர்கள்?’ என்று ஒருமுறை கேட்டபோது சொன்னார். ‘என்னை நம்பிக் கேட்கிறார்களே, அவர்களை எப்படி ஏமாற்றம் அடையச் செய்வது? அதுதான் எழுதிக் கொடுத்துவிடுகிறேன்’.

எளிமையும் சாதாரணத்தன்மையும் அவருக்கு இயல்பாகவே அமைந்தவை. எனினும் அதிலும் சமரசம் மேற்கொள்ளாதவராகவே இருந்தார். பத்திரிகைகளின் தேவைக்காக எழுத்தை மலினப்படுத்தாமல் தனது தரத்திலேயே நின்றவர். வாழ்விலும் அதையே பின்பற்றினார் என்று சொல்ல முடியும்.

மலையாளக் கவிஞர் பாலசந்திரன் சுள்ளிக்காடு இருபது ஆண்டுகளுக்கு முன்பு, ஆலுவாயில் அனைத்திந்திய இலக்கியத் திருவிழா ஒன்றை நடத்தினார். அதற்கு அழைக்கப்பட்டிருந்த தமிழ் இலக்கியவாதிகளில் அசோகமித்திரனும் ஒருவர். அவரது எளிமையான தோற்றம் காரணமாக வட மாநிலங்களிலிருந்து வந்திருந்த இலக்கியவாதிகள் அவரை யாரோ ஒருவர் என்ற எண்ணத்தில் கடந்து போனார்கள். விழாவில் கலந்துகொள்ள வந்திருந்த நட்சத்திர எழுத்தாளர்களான யூ. ஆர். அனந்தமூர்த்தி. தகழி சிவசங்கர பிள்ளை, எம்.டி. வாசுதேவன் நாயர் போன்றோர் அசோகமித்திரனைத் தேடி வந்து நலம் விசாரித்தபோதுதான் அவர்களுக்கு அவரது அருமை புரிந்தது. அவரைக் கடந்து போன எழுத்தாளர்களிடம் தானும் எழுத்தாளனே என்று அவர் அறிமுகப்படுத்திக்கொண்டிருக்கலாம். அவர்களது கண் மலர்வதையோ, இதழ் புன்னகையில் அரும்புவதையோ பார்த்திருக்கலாம். “ஏன் சார் அதைச் செய்யவில்லை?” என்று அசட்டுத்தனமாகக் கேட்டதும் “எல்லாரும் எழுதுகிறார்கள். நானும் எழுதுகிறேன். அதில் எடுத்துச் சொல்லிக்கொள்ள என்ன இருக்கு? ரைட்டரும் சாதாரணமான ஆள்தானேப்பா?” என்று சாதாரணமான பதிலைத்தான் சொன்னார். சாதாரணமாகச் சொல்லப்பட்ட அசாதாரணமான பதில் இது. இதுவே அவரது எழுத்துகளிலும் துலங்குகிறது.

புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனமொன்றில், சுமாரானது என்றாலும் நிரந்தரமான வேலையில் இருந்தவர் அசோகமித்திரன். எழுத்தின் மீதுள்ள காதலால் முழு நேர எழுத்தாளர் ஆனவர். ஆங்கிலம் தவிர அவர் எழுதிய படைப்புகள் பெரும்பாலும் சிறிய அளவிலான இதழ்களிலேயே வெளிவந்தன. அதன் வாயிலாகக் கிடைத்திருக்கும் ஊதியம் முட்டில்லாத அன்றாட வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிப்பதாக நிச்சயம் இருந்திருக்காது. எனினும் தனது வறுமையைக் குறித்தோ சொந்தத் துயரங்களைக் குறித்தோ அவர் ஒரு சொல் சொன்னதில்லை. எழுதியதுமில்லை. எழுத்தாளனாகத் தன்னை சமூகம் கொண்டாடவில்லை என்று குறைப்பட்டுக்கொள்ளவும் இல்லை. எல்லாத் தொழிலையும் போல எழுத்தும் ஒரு தொழில்; அதை நேர்மையாகவும் அர்ப்பணிப்புடனும் செய்வதே தனது கடமை என்று வாழ்ந்து காட்டினார். அவரது இயல்பில் மேன்மையானது இந்த சுயநிர்ணயம் எனலாம்.

அசோகமித்திரனின் படைப்பு முன்வைக்கும் உலகம் சாதாரணமானது. அதில் நடமாடும் மனிதர்கள் எளியவர்கள். அவர்களது எளிய செயல்களே அவரது கதைகளுக்கு மையங்களாகின்றன. ஆனால், எளிய செயல்களில் உள்ளோடியிருக்கும் ஆழமான சிக்கல்களை, வியப்புகளை, மகிழ்ச்சிகளை, வலிகளை அசாதாரணமான வகையில் வெளிப்படுத்தினார்.

அவரது கதைமாந்தர் எல்லோரும் சலிப்பூட்டும் வாழ்க்கையைத் தொடர்பவர்கள். பெரும்பாலும் பெரும் கனவுகளோ பேராசைகளோ இல்லாதவர்கள். வயிற்றுக்காகவும் தன்மதிப்புக்காகவும் போராடுகிறவர்கள். அவர்களது அன்றாடச் செயல்களில் அவர்களே அறியாத நுண் ரகசியங்களையே அவர் கதையாக மாற்றினார். வெற்றி பெற்ற மனிதர்களின் கதைகளை அல்ல; தோல்வியில் துவண்டும் வாழ்க்கையை மீட்க விரும்புகிறவர்களே அவரது மனிதர்கள். பிழைப்புக்காக ஆந்திரத்திலிருந்து மெட்ராஸுக்கு வந்து கார் ஓட்டக் கற்றுக்கொள்ளும் சிறுவன் மல்லையாவின் செயலில் என்ன சுவாரசியமான கதை இருக்க முடியும்? தட்டுத்தடுமாறி ஓட்டப் பழகிய கார் அவனுடைய கட்டுப்பாட்டுக்குள் வந்ததும் அவன் பெறும் தன்னம்பிக்கை அசோகமித்திரனிடம் கதையாகிறது. அகில இந்தியப் புகழ்பெற்ற திரை நட்சத்திரமான சத்யன் குமாரின் பளபளப்பும் படாடோபமுமான வாழ்க்கையின் வெற்றிக் கதையை அசோகமித்திரன் நாவலாக்கவில்லை. அவனுடைய தார்மீகச் சறுக்கலையே, குற்ற உணர்வையே நாவலில் சித்தரிக்கிறார்.

இவை மேலோட்டமான உதாரணங்களே. எளிமையை நுட்பமாகவும் சாதாரணத்தை அசாதாரணமாகவும் பாவனைகள் இல்லாமல் இலக்கியமாக்கியவர் என்பதே அசோகமித்திரனை இலக்கிய உலகம் மதிக்கவும் நினைவில் வைத்திருக்கவுமான காரணமாக இருக்கும். ‘சிக்கனமும் நுட்பம் கொண்டதுமான உரைநடைக்காகவும் கீழ் மத்தியதர வர்க்க மானுடர்களின் சலிப்பாகத் தென்படும் வாழ்க்கைச் சிக்கலுக்குள் ஊடுருவிப் பார்க்கும் திறனுக்காகவும் அசோகமித்திரன் போற்றப்படுவார்’ என்று எழுத்தாளர் அரவிந்த் அடிகா குறிப்பிடுவது இதற்குச் சான்று.

- சுகுமாரன், தமிழின் மூத்த கவிஞர்களில் ஒருவர், ‘பூமியை வாசிக்கும் சிறுமி’ முதலான நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: nsukumaran@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x