ஆங்கில மேடையேறும் சூடாமணி கதைகள்

ஆங்கில மேடையேறும் சூடாமணி கதைகள்
Updated on
1 min read

ஆர். சூடாமணியின் படைப்புகள் முதன்முறையாக ஆங்கிலத்தில் நாடகமாக விருக்கின்றன. இந்தியாவின் முன்னோடி ஆங்கில நாடகக் குழுக்களில் ஒன்றான ‘தி மெட்ராஸ் பிளேயர்ஸ்’ இந்த முயற்சியை முன்னெடுத்திருக்கிறது. ‘சூடாமணி’என்ற பெயரிலேயே நடக்கவிருக்கும் இந்த நாடகத்தின் கதையாக்கத்தை நிகிலா கேசவன் உருவாக்கியிருக்கிறார். ‘தி மெட்ராஸ் பிளேயர்ஸ்’ நாடகக் குழுவின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவரான பி.சி. ராமகிருஷ்ணா இந்நாடகத்தை இயக்குகிறார். ஓய்வுபெற்ற நீதிபதியான பிரபா தேவனின் மொழிபெயர்ப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘சீயிங் இன் தி டார்க்’ (Seeing in the Dark) என்ற சூடாமணியின் சிறுகதைத் தொகுப்பு இதைச் சாத்தியப்படுத்தியிருக்கிறது. சென்னை அருங்காட்சியக அரங்கத்தில் செப்டம்பர் 23,24, 25 என மூன்று நாட்கள் ‘சூடாமணி’ நாடகம் நடக்கவிருக்கிறது.

‘புவனாவும் வியாழக் கிரகமும்’, ‘சோப னாவின் வாழ்வு’, ‘நான்காம் ஆசிரமம்’, ‘அடிக்கடி வருகிறான்’, ‘திருமஞ்சனம்’, ‘பிம்பம்’, ‘விருந்தாளிகளில் ஒருவன்’ என்ற ஏழு சிறுகதைகளை இணைத்து இந்த நாடகத்தை உருவாக்கியிருக்கிறார் நிகிலா கேசவன். “‘சீயிங் இன் தி டார்க்’ தொகுப்பில் இருந்து நானும், இயக்குநர் பி.சி. ராமகிருஷ்ணாவும் ஐந்து கதைகளைத் தேர்ந்தெடுத்தோம். இது தவிர இரண்டு கதைகளைப் புதிதாக பிரபா தேவனை மொழிபெயர்க்கச் சொல்லிக் கேட்டு வாங்கினோம். இந்த ஏழு கதைகளையும் நாடகமாக எப்படி இணைக்கலாம் என்று யோசித்துபோது, சூடாமணியையே கதை சொல்லியாக இணைக்கலாம் யோசனை வந்தது. இந்த யோசனை எல்லோருக்கும் பிடித் திருந்தது. இப்படித்தான், ‘சூடாமணி’ நாடகம் உருவானது” என்கிறார் நிகிலா கேசவன். அவரே இந்நாடகத்தில் ‘சூடாமணி’ கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்.

“சூடாமணியின் இந்தச் சிறுகதைகள் பெரும்பாலும் 70களில் எழுதப் பட்டவை. ஒரேயொரு சிறுகதை மட்டும் 90களில் எழுதப்பட்டது. ஆனால், அந்தக் கதைகள் இன்றும் நவீனத்தன்மையுடன் விளங்குகின்றன. நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பெண்களின் திருமண வாழ்க்கையைச் சுற்றிச் சூழலும் இந்தக் கதைகள் நுணுக்கமான பெண்ணியப் பார்வையை வெளிப்படுத்துகின்றன. அதனால், இன்றைய நாடகப் பார்வையாளர்களுக்கு இந்நாடகம் பொருத்தமானதாக இருக்கும்” என்கிறார் பி.சி ராமகிருஷ்ணா.

பத்தொன்பது நடிகர்களுடன் களமிறங்கும் ‘சூடாமணி’ ஒன்றரை மணி நேர நாடகம். “என்னுடைய மொழிபெயர்ப்பு வெளியாகி சரியாக ஓராண்டில் அது நாடக வடிவம் பெற்றிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது” என்கிறார் பிரபா ஸ்ரீதேவன்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in