Published : 25 Mar 2017 09:22 AM
Last Updated : 25 Mar 2017 09:22 AM

அசோகமித்திரன் குரல்

அசோகமித்திரன் எழுதுவதில் எந்த விஷயம் மிகவும் சவாலானது என்று நினைக்கிறீர்கள்? அந்த மாதிரி சவால் என்று ஏதாவது இருக்கிறதா?

சில பேர் சொல்றாங்க, ‘இது சவால், அது சவால்’னு. எழுதறதுல சவால்னு என்ன இருக்கு? வாழ்க்கையை நடத்துறதுதான் சவால். வாழ்க்கையில எதிர்ப்படும் சின்னச் சின்ன விஷயங்கள்தான் சவால். திடீர்னு ஆயிரம் ரூபா, ஐந்நூறு ரூபா நோட்டு செல்லாதுங்கறாங்க, ஆதார் கார்டு அது இதுனு என்னென்னமோ வேணும்றாங்க. இதெல்லாம்தான் சவாலா இருக்கு.

(சமீபத்திய பேட்டி ஒன்றிலிருந்து…)

நான் எங்கே ஓடிக்கொண்டிருக்கிறேன்? ஒரு ரெயிலைப் பிடிக்க; இந்த ரெயில் நிலையத்தில் பிளாட்பாரத்தில் நகர ஆரம்பித்துவிட்ட ஒரு ரெயிலைப் பிடிக்க. நான் ரெயிலைப் பிடிக்க வேண்டும். அல்லது அது என்னை விட்டுப் போய்விட வேண்டும். இந்த இரண்டுதான் சாத்தியம். இதற்கு எவ்வளவு நேரம் ஆகப்போகிறது? அரை நிமிடம். அதிகம் போனால் ஒரு நிமிடம். ஆனால் இதென்ன மணிக்கணக்காகச் சிந்தனைகள்? எத்தனை சிந்தனைகள், எவ்வளவு எண்ணங்கள்! எண்ணங்கள் என்பது வார்த்தைகள். வார்த்தைகள் காலத்துக்கு உட்பட்டவை. இவ்வளவு நேரத்தில் அதிகபட்சம் இவ்வளவு வார்த்தைகளே சாத்தியம் என்ற காலவரைக்கு உட்பட்டவை. ஆனால் மணிக்கணக்கில் எண்ணங்களை ஓட விட்டுக் கொண்டிருக்கிறேன்! கடவுளைக்கூடக் கொண்டுவந்துவிட்டேன்! கடவுள் காலத்துக்கு உட்பட்டவரா?

எனக்குத் தெரியாது. எனக்கு காலமே என்னவென்று தெரியவில்லை. செய்கையே காலம். அல்லது ஒரு செய்கைக்கும் அடுத்ததற்கும் உள்ள இடைவெளி. செய்கை, இடைவெளி இரண்டும் கலந்ததே காலம். அல்லது இரண்டுமே இல்லை. என்னைப் பொறுத்ததுதான் காலம். என் உணர்வுக்கு ஒன்றை விடுத்து அடுத்தது என்று ஏற்படும்போதுதான் காலம். அப்படியென்றால் என்னைப் பொறுத்தவரையில் ரெயில் நின்று கொண்டிருக்கிறது. அது கிளம்பிவிடவில்லை நான் அதைப் பிடிப்பதற்கு அதைத் துரத்திக்கொண்டு போக வேண்டியதில்லை.

- (‘காலமும் ஐந்து குழந்தைகளும்’ சிறுகதையிலிருந்து…)

இந்த ஆளு சத்தம் போடாமதான் படிச்சுண்டு இருக்கான். படிச்சுண்டே இருக்கான். நானும் காத்திண்டே இருக்கேன். இவன் படிக்கிற பக்கத்திலே பாதிலே ஒரு பாங்க் பாலன்ஸ் ஷீட். ஒரு எண்கூட எட்டு இலக்கத்துக்குக் குறைஞ்சு கிடையாது. எட்டு, ஒன்பது, பத்து, பதினொண்ணு கூட இருக்காப்போல இருக்கு. பதினொரு இலக்கத்து எண்ணை ரூபாயாக் கற்பனை பண்ணிக்கூடப் பாக்க முடியலை. இதுவே பட்ஜெட் தாளாக்கூட இருக்கலாம். அப்பவும் பத்து, பதிணொண்ணு, பன்னெண்டுன்னு பெரிய பெரிய எண்கள். அவன் பத்து இலக்கத்துலே போட்டாலும் ஒண்ணுதான். இருபது இலக்கத்துலே போட்டாலும் ஒண்ணுதான். இவ்வளவு ரூபாயைப் பற்றி நிஜமாத் தெரிஞ்சவங்க நிச்சயம் இருப்பாங்க. அவங்க எப்படி இருப்பாங்க ? என் மாதிரி இருக்கமாட்டாங்க. இந்த ஆள் மாதிரி கூட இருக்க மாட்டாங்க. இலவசப் பேப்பர் பறக்கப் பறக்கப் படிச்சுட்டுப் போறவங்களுக்கு மூணு இலக்க எண் தெரிஞ்சாலே பெரிய விஷயம். இது பிச்சைக் காசு. பிச்சைக்காரங்களுக்குப் பிச்சைக்காசு பத்தித்தான் தெரியும். லட்சம் கோடியெல்லாம் பள்ளிக்கூடத்திலே பரீட்சை பாஸ் பண்ணற அளவுக்குத் தெரிஞ்சாப் போதும். அவ்வளவுதான் தெரியும் வேறே.

(‘எண்கள்’ சிறுகதையிலிருந்து…)

காபிக் கோப்பை மீது உட்கார வந்த ஒரு ஈயைச் சட்டென்று விரட்டினான். அரைக் கோப்பை அளவு மிஞ்சியிருந்த காபிமீது லேசாக ஏடு பரவ ஆரம்பித்திருந்தது. இந்த காபியைத் தான் குடிக்கப் போவதில்லையே, ஏன் ஈயை விரட்டினோம் என்று அவனுக்குத் தோன்றியது. ஓர் ஈ எத்தனை நாட்கள் உயிர் வாழ்ந்திருக்கும்? பத்து நாட்கள்? இருபது நாட்கள்? ஒரு மாதம்? அந்தக் குறுகியகால வாழ்க்கையில் ஒரு கணம், அதன் ஒரு வாய் உணவு, பெரும்பங்கைத்தான் வகிக்க வேண்டும். அவனால் இப்போது சாக்கடையில் கொட்டப்பட இருக்கும் அந்த காபி எத்தனை ஜீவ ராசிகளின் முழு ஜீவித ஆதாரமாக இருக்கக்கூடும்? எவ்வளவு எளிதில் சிருஷ்டி தர்மத்தை, ஓருயிர் தான் வாழவேண்டும் என்று மேற்கொள்ளும் இயக்கத்தை, தன்னால் ஒரு சலனம் கூட இல்லாமல் புறக்கணிக்க முடிகிறது, துஷ்பிரயோகம் செய்ய முடிகிறது? மனிதனுக்கும் மனிதனுக்கும்கூட இப்படித்தானோ? காந்தி இதற்குத்தான் மீண்டும் மீண்டும் தான் ஆங்கிலேயரை வெறுக்கவில்லை, ஆங்கிலேயரைத் துவேஷிக்கவில்லை என்று கூறிக்கொண்டாரோ?

(‘காந்தி’ சிறுகதையிலிருந்து…)

காலத்தின் நீளம்

யாருக்கு நினைவிருக்குமோ என்னவோ

மவுண்ட் ரோடு பச்சை சிவப்பாக

மாறும் விளக்கில்லாத

மவுண்ட் ரோடாக இருந்த காலமது.

நடுத்தெரு போலீஸ்காரனுக்கு

இருட்டில் விளக்கே தொப்பி

அவனும் எட்டு மணிக்குப்

போய் விடுவான்.

விளக்குத் தொப்பி மட்டும் இருக்கும்.

இன்னும் சிறிது நேரம்.

நான் நடுத் தெருவில்

எதிரே வெகுவேகமாக லாரி ஒன்று.

அதுவும் நடுத் தெருவில்.

எனக்கு என்னென்ன மனச்சுமைகள்.

தக்க தருணத்தில் சைக்கிளைச்

சிறிது ஒடித்துச்

சுமை தாங்கி வரும் அந்த லாரியில்

மோதினால்

இருட்டில் யாருமில்லா அந்தத்

தார்ப்பரப்பில்

யாருக்குத் தெரியும்?

யாருக்குத் தெரிந்தாலென்ன? பின்

எனக்குத் தெரியாதே-

அந்த ஒரு கணத்தில்-

கணமா? அது கணத்தில்

ஐந்தில் பத்தில் நூறில் ஆயிரத்தில்

ஒரு பங்குதானிருக்கும்.

அந்தக் கால அணுவில்

என்னை சைக்கிளை

ஒடித்துப் போகாமலிருக்க

எது செய்தது?

எது செய்ததோ அந்தக் கால

அணு இப்போது இருபது

ஆண்டுக்கும் மேல் நீண்டு விட்டது.

இன்னும் நீண்டு கொண்டேயிருக்கும்-

நான் இருக்கும்வரை.

நானிருக்கும் வரை காலமே அணு.

(கவிதைகள் மீது ஒட்டுதலைக் காட்டிக்கொள்ளாத அசோகமித்திரன் அபூர்வமாக எழுதிய கவிதை இது, ‘இன்று’ நாவலிலிருந்து…)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x