

தமிழ் இலக்கியத்தில் வீரிய மிக்க படைப்புகளாக இமையத்தின் எழுத்துகளை அடையாளப்படுத்த முடியும். இந்த வீரியத்தின் தன்மை என்னவாக இருக்கிறது? சமகாலம் குறித்த தீவிர வேட்கையைக் கொண்டுள்ள அவரது எழுத்துகள், சமகாலம் குறித்த எந்தவொரு மதிப்பீட்டையும் முன்வைக்காமல், அதில் காணப்படுகின்ற முரண்களை நோக்கி வாசகரைக் கவனப்படுத்துவதாக உள்ளன. இமையத்தின் வீரியத்துக்குக் காட்சிவடிவம் கொடுக்கும்வகையில் ‘ஆகாசத்தின் உத்தரவு’ என்ற கதையை நாடக வடிவில் நிகழ்த்திக் காட்டினார் பேராசிரியர் ராஜி.
நவீனத் திருமுதுகுன்றம் இலக்கிய வட்டம் சார்பில், விருதாசலம், டேனிஸ் மிஸன் நடுநிலைப்பள்ளி வளாகத்தில் 2016 ஜூலை 31 அன்று இந்நாடக நிகழ்வு நடைபெற்றது. ‘ஆகாசத்தின் உத்தரவு’ நாடகம், ஒரு செயின் திருடனின் கதையாக, திருடப்போகுமுன் குலசாமியின் உத்தரவுக்குக் காத்திருக்கும் அவனுள் விரியும் அவன் வாழ்க்கையையும், அதன் மூலம் சமூக முரண்களையும் பேசுகிறது.
‘கருத்த நிறமுடைய ஒரு ஆள்’, ‘அந்த ஆள்’ என்று பெயரிடப்படாத அந்தக் கதைமாந்தரின் கதையாக நாம் காணும் ‘அவனது’ அவல வாழ்க்கை இரண்டு காரணங்களுக்காக முக்கியத்துவம் பெறுகிறது. முதலாவதாக, தன்னைப் பற்றியும், தனது ‘திருட்டு’ தொழில் பற்றியும் அவன் கொண்டுள்ள கருத்து, சமூகத்தின் கருத்திலிருந்து விலகியதாக இல்லாமல், அதற்கு இணையானதாக (வாத, எதிர்வாதமாக) உள்ளது. அது ஒரு தனிமனித புலம்பலாகவோ, அவனது தொழிலை நியாயப்படுத்துவதாகவோ இல்லை. இங்குதான் தனிநபரின் கதை என்பது ஒரு சமூக நிகழ்வாகிறது.
இரண்டாவதாக, கதைசொல்லியின் குரல் ‘அந்த ஆளின்’ கதையைச் சொல்லுவதன் மூலம், ‘அந்த ஆளின்’ மீதான அனுதாபமாகவோ, குற்றமாகவோ சொல்லாமல் விலகிய குரலாக இருக்கிறது. இதன் மூலம் வாசகர்களான நாமும் கதைசொல்லியுடன் இணைகிறோம், கதையில் பங்கேற்கிறோம். இதை எவ்வாறு நிகழ்த்திக் காட்டுவது என்ற பிரச்சினையை ராஜி லாவகமாகக் கையாள்கிறார்.