

புராணங்களிலிருந்து உந்துதல் பெற்று நாவல்களை எழுதிவருபவர் ஆனந்த் நீலகண்டன். இவரது ‘அசுரா: டேல் ஆஃப் தி வான்கிவிஷ்டு’ முதலான நாவல்கள் பரபரப்பாக விற்பனையானவை. இம்முறை, புராணத்தில் அல்லாமல் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படத்திலிருந்து தன் நாவலுக்கான உந்துதலைப் பெற்றிருக்கிறார் ஆனந்த். ‘பாகுபலி’ படத்தின் வீச்சால் கவரப்பட்ட ஆனந்த், முக்கியமாக, சிவகாமி என்ற பாத்திரத்தால் உந்துதல் பெற்று இந்த நாவலை எழுதியிருக்கிறார். பாகுபலி திரைப்படம் நிகழும் கதைப் பரப்புக்கு முந்தைய கதையை சிருஷ்டித்துத் தனக்கான பாகுபலியை ஆனந்த் உருவாக்கியிருக்கிறார்.
மகிழ்மதி மகாராஜா, ஐந்து வயது சிவகாமியின் முன்னாலேயே அவளின் தந்தையை ராஜத் துரோகி என்று கொன்று விடுகிறார். அந்த நாட்டை என்றாவது ஒரு நாள் அழிப்பேன் என்று சபதம் செய்யும் சிவகாமி, தனது பதினேழாவது வயதில், சிதிலமடைந்த தன் மூதாதை யர் மாளிகைக்குச் சென்று ஒரு கையெழுத்துப் பிரதியை மீட்கிறாள். தனது தந்தை நிரபராதியா அல்லது துரோகியா என்னும் ரகசியம், பைசாச மொழியில் எழுதப்பட்ட அந்த நூலில் உள்ளது.
நூலின் ரகசியத்தைக் கண்டறியும் போராட்டத்தில் ஈடுபடும் சிவகாமி, பல உண்மைகளை அறிகிறாள். ஊழல் அதிகாரிகளும், புரட்சியாளர்களும் மகிழ்மதி சாம்ராஜ்யத்தைக் குறிவைத்து சதிகாரர்களுடன் கைகோத்ததை உணர்கிறாள். வஞ்சகமும் சூழ்ச்சியும் சாம்ராஜ்யத்தில் தலைவிரித்து ஆடுவதைக் காண்கிறாள். லட்சியக் கனவுகளோடு இருக்கும் பிரபு பணத்துக்காகவும் பதவிக்காகவும் எதையும் செய்யவும் அஞ்சவில்லை. அடிமை வியாபாரத்தைத் தகர்க்க எழுபது வயது பெண்மணியின் தலைமையில் ஒரு ரகசியக் குழு போராடுகிறது. தங்கள் உரிமைகளுக்காக போராடும் (வனத்தில் வாழும்) பழங்குடியினர் கூட்டம், முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னர் புனித மலையிலிருந்து விரட்டப் பட்டு, அதை அந்த மன்னனிடமிருந்து கைப்பற்றத் திட்டம் தீட்டுகின்றனர். தனது கடமையின் மீதும். கொள்கைகளின் மீதும் அசாத்திய நம்பிக்கை கொண்ட இளம் அடிமையாக, அகம்பாவம் கொண்ட இளவரசனுக்குச் சேவகம் செய்யும் பணியில் மாட்டிக்கொள்ளும் கட்டப்பாவின் பாத்திரம் இந்த நாவலில் விரிவாக எழுதப்பட்டிருக்கிறது. பரமேஸ்வரன், பட்டராயர், பிரகன்நளா, கந்ததாசன், காமாட்சி போன்ற மறக்க முடியாத பாத்திரங்கள், பிரம்மாண்டமான கதைக் களம் என்று சுவாரசியமாகப் பயணிக்கும் நாவல் இது. எஸ்.எஸ். ராஜமௌலியின் பாகுபலிக்கு ஏற்ற முன் கதை.
சிவகாமி பர்வம்
ஆனந்த் நீலகண்டன்
தமிழில்: மீரா ரவிசங்கர்
விலை: ரூ.290
வெளியீடு: வெஸ்ட்லேண்ட் பப்ளிகேஷன்ஸ், சென்னை-95.
044-66076000
கே. சுந்தரராமன், தொடர்புக்கு: sundararaman.k@thehindutamil.co.in