

இளங்கோ கிருஷ்ணனின் கவிதைகள் பெரும்பாலும் மனிதனின் வியாகூலத்தைப் பிரதிபலிக்கின்றன. ஜாலியாய் எழுதிச் சென்ற கவிதைகளும் இருக்கின்றன. “பூட்ஸ் அணிந்த சிறுமி” என்ற கவிதையின் சாரத்தைப் பார்ப்போம்.
சற்றைக்கு முன் பளபளக்கும் கருப்பு பூட்ஸ் சத்தமிட, குதிரைச்சதை மென்மையாய் அதிர, துள்ளித் துள்ளிச் சென்று கொண்டிருக்கிறாள், ஒரு சிறுமி. பால்யத்தின் துடிப்பிற்குச் சொந்தமான ஒட்டமும் நடையும் கலந்த நகர்தல், அவளின் பூட்ஸ்க்குள் சிக்கிக்கொண்டது. அந்தச்சிறுமி எவ்வளவு நேரமாய் நொண்டிக் கொண்டிருப்பாள்.
அது மாரிக்கால மாலைப் பொழுதின் சித்திரத்தை கோரமாக்கிக் கொண்டிருக்கிறது. சிறுகல்லோ, மரத்துண்டோ, இரும்புக்கட்டியோ, கால்களை உதறி உதறி நடப்பதும், நிற்பதும், நொண்டுவதுமாய் எவ்வளவு போராட்டம். யாராலும் கழட்ட இயலாத ஒரு பூட்ஸை யார் அவளுக்கு மாட்டிவிட்டது. முடிவற்ற இந்தச் சாலையில் எவ்வளவு தொலைவில் இருக்கிறது அவள்வீடு என்று கவிதை முடிகிறது. ‘யாராலும் கழட்ட முடியாத’ என்ற சொல்லும் ‘முடிவற்ற சாலை’ என்ற சொல்லும், இக்கவிதைக்கு பூட்ஸைக் கடந்த வேறு பரிமாணங்களைத் தருகிறது.
“எங்கள் ஆறு” என்ற கவிதையைத் தருகிறேன்.
எங்களுக்கும் ஒர் ஆறுண்டு
வெறுமணல் பரப்பாய் விரிந்துகிடக்க
ஒணான்கள் முட்டையிட
கள்ளிகள் பிழைத்திருக்க
பிள்ளைகள் விளையாட
பெண்டுகள் ஒதுங்கிட
பன்றிகள் மேய்ந்திருக்க
வானத்தில் மேகமுண்டு
சூரியனில் மழையுண்டு
காகமோ குருவியோ
நிழல் ஒதுங்க
ஆறெங்கும் முள் மரமுண்டு
எங்களுக்கும் ஒர் ஆறுண்டு
ஆற்றுக்கோர் ஊருண்டு
ஊருக்கோர் சனமுண்டு
வாழ்வைப் போல் ஒன்றுண்டு
இக்கவிதை நீரற்ற ஆற்றைச் சித்தரித்து, அதனுடன், ஊரையும், வாழ்வையும் இணைக்கிறது. சித்தரிப்பு கவனமாகவும், அழகாகவும் உருவாக்கப்பட்டுள்ளது.
“அநாதரவு” என்ற கவிதை ஒரு குழந்தையைப் பற்றித் துயரம் கொள்கிறது. நினைவு தப்பி மதுவிடுதியிலேயே விழுந்து கிடப்பவனுக்கு அருகில் அமர்ந்திருக்கிறது, அவன் தூக்கி வந்த குழந்தை. தன் பெயரும் அறியாத அதன் நடை, கனியாத பாதங்கள், திரும்பிச் செல்லும் வழிதெரியாதவை. விழுந்து கிடப்பவனோ மதுவின் வசியத்தால் எளிதில் திரும்ப இயலாத ஒரு தேசாந்திரத்திற்கு வழி நடத்தப்பட்டான். நேரம் செல்லச் செல்ல பீதியில் அழத் துவங்கிவிட்ட அதன் அநாதரவு தொடர்பாக செய்யக்கூடியது ஒன்றும் இல்லை அனுதாபங் கொள்வதும், காத்திருப்பதும் தவிர என்று கவிதை முடிகிறது. இதில் “தன் பெயரும் அறியாத அதன் நடை கனியாத பாதங்கள்” என்ற சொல்லாட்சி கவனத்தை ஈர்க்கக்கூடியது.
“ஞாயிறு போற்றுதும்” கவிதையில் கவிஞர் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளைக் கொண்டாடுகிறார். நினைத்தால் குளிப்போம். விரும்பினால் வீட்டை நீங்குவோம். எங்கள் பெண்களின் முகங்கள் திவ்ய மலராய் பூத்திருக்கிறது. வானத்தை அண்ணாந்து பார்க்கலாம். பக்கத்து வீட்டுக்காரருடன் அன்பாய்ப் பேசலாம். பறவைகளை ரசிக்கலாம். வாசல் மரங்களுடன் பேசலாம். அடுத்தவர் குழந்தைகளைக் கொஞ்சலாம். சொந்த வேலைகளைச் செய்யலாம். நூலகத்திற்கும், பூங்காவிற்கும், கடற்கரைக்கும், திரையரங்குகளுக்கும் செல்லும் பாதைகள் திறந்து கொள்கின்றன. இன்று விடுமுறை. இன்றை நாங்கள் நேசிக்கிறோம். இன்றில் பூமி நிலைக்கட்டும். இவ்வாறும் இன்னும் பலவாறும் ஞாயிறைக் கொண்டாடுகிறார். சிறியவர் முதல் பெரியவர் வரை விடுமுறையினால் அடையும் மனநிலையை இளங்கோ கிருஷ்ணன் ஈர்க்கும் விதத்தில் சித்தரித்துள்ளார்.