நான் என்னென்ன வாங்கினேன் - நீயா நானா ஆண்டனி

நான் என்னென்ன வாங்கினேன் - நீயா நானா ஆண்டனி
Updated on
1 min read

தமிழ்த் தொலைக்காட்சிகளில் உரையாடல் நிகழ்ச்சி என்றால், வெற்று அரட்டை என்றிருந்த சூழலைத் தன்னுடைய ‘நீயா? நானா?’ மூலம் உடைத்து ஆரோக்கியமான உரையாடல் களமாக உருமாற்றியவர் இயக்குநர் ஆன்டனி. ஒருபக்கம் ‘நீயா? நானா?’; இன்னொரு பக்கம் அவர் புதிதாக இயக்கும் ‘அழகு குட்டி செல்லம்’ திரைப்படம் என மாறி மாறி ஓடிக்கொண்டிருக்கும் ஆன்டனி, இவ்வளவு நெருக்கடியான சூழலிலும் சென்னைப் புத்தகக் காட்சியை தவற விடவில்லை.

“மத்தவங்களுக்குப் புத்தகங்கள் எப்படியோ, எனக்கு அது போதை. ஒரு புத்தகத்தைக் கடையில வாங்குனா, வீட்டுக்குப் போய்தான் அதைப் பிரிச்சுப் படிக்க ஆரம்பிப்போம் இல்லையா, அப்படிப் போற நேரம் என்னால பொறுக்க முடியாது. அப்படி ஒரு போதை!

“அப்பாதான் வாசிப்போட முக்கியத்துவத்தை எனக்கு உணர்த்தினவர். ‘அம்புலிமாமா’ மூலமா வாசிப்பு ருசியை அறிமுகப்படுத்தினார். இன்னைக்கு ஒரு நாளைக்குக் குறைஞ்சது மூணு மணி நேரம் படிக்காம அந்த நாள் கழிய மாட்டேங்குது. அடிப்படையில வாசிப்பு ஒரு கண் திறப்புனு நான் சொல்வேன்.

“என்னோட வாசிப்பை ரெண்டு வகையா நான் பிரிச்சுக்குறேன். காலையில ஒரு மணி நேரம் பத்திரிகைகள் வாசிப்பு; இரவுல ரெண்டு மணி நேரம் நூல்கள் வாசிப்பு. பத்திரிகை வாசிப்பு இந்தச் சமூகத்தை நான் என்ன கண்கொண்டு பார்க்கணும்னு எனக்குச் சொல்லிக்கொடுக்குது. நூல்கள் வாசிப்பு – குறிப்பா இலக்கிய வாசிப்பு – சமூகத் தோட உளவியலை என்ன கண்கொண்டு பார்க்கணும் சொல்லிக்கொடுக்குது.

“என்னோட மனைவி மிஸ்பாவும் நல்ல வாசகி. ஆரம்பத்துல அவங்க தொழில் சம்பந்தமான புத்தக வாசிப்புல தான் ஆர்வமா இருந்தாங்க. இப்போ என்னை மாதிரியே இலக்கியம் அவங்களையும் பிடிச்சுக்கிடுச்சு. அன்னைக்கு எனக்கு எங்க அப்பா எப்படி வாசிப்புத் தீயை என்கிட்ட பத்தவெச்சாரோ, அதேபோல ஒரு தகப்பனா, இன்னைக்கு நான் என் குழந்தைங்ககிட்டேயும் அதே வாசிப்பை எடுத்துக்கிட்டுப் போய்ட்டு இருக்கேன்” என்றவர் தான் வாங்கியிருந்த புத்தகக் குவியலிலிருந்து ஆறு புத்தகங்களை எடுத்தார்: சு.வேணுகோபாலின் ‘கூந்தப்பனை’, குமார செல்வாவின் ‘குன்னிமுத்து’, சுகுமாரனின் ‘வெல்லிங்டன்’, உமர் ஃபாருக்கின் ‘வீட்டுக்கு ஒரு மருத்துவர்’, ‘ஆதவன் சிறு கதைகள்’, கார்த்திக் நேத்தாவின் ‘தவளைக்கல் சிறுமி’.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in