

தி இந்து நாடக விழாவில் இடம்பெற்றிருக்கும் மூன்று தமிழ் நாடகங்களில் ‘வண்டிச்சோடை’ நாடகத்துக்கு ஒரு சிறப்புண்டு. தமிழின் சமகால நாடக ஆளுமைகளில் முக்கியமானவரான ந. முத்துசாமி 1968-ல் எழுதிய நாடகம் இது. கூத்துப்பட்டறைக் குழுவின் சார்பாக ஆகஸ்ட் 28 அன்று இந்நாடகம் முதன்முறையாக ‘தி இந்து’ நாடக விழாவில் மேடையேறவிருக்கிறது.
‘வண்டிச்சோடை’ நாடகத்தைத் திரிபான தர்க்கங்களைப் (Perverted logic) பேசும் நாடகம் என்று சொல்லலாம். தொடக்கத்திலிருந்து முடிவுவரை இந்த நாடகம் புதிர்களுடன் அற்புதமான கற்பனை வெளியில் பயணப்படுகிறது. “மருத்துவத் துறை இப்போது முழுக்க முழுக்க வியாபாரம் ஆகிவிட்டது. பாரம்பரியமான இந்திய நாட்டு வைத்தியம் ஒரு காலத்தில் செழிப்பானதாக இருந்தது. அது குரு - சிஷ்ய என்ற அமைப்பால் எப்படிச் சரிவைச் சந்தித்தது என்பதை இந்நாடகம் பதிவுசெய்கிறது” என்கிறார் இந்நாடகத்தின் இயக்குநர் ஆர். பி. ராஜநாயஹம்.
குரு-சிஷ்ய அமைப்பு மட்டுமல்லாமல் கடைமட்டத் தொழிலாளர்கள் வழிவழியாக எப்படிச் சுரண்டப்படுகிறார்கள் என்பதையும் ‘வண்டிச்சோடை’ நாடகம் அலசுகிறது. தார்ச் சாலை போடும் தொழிலாளர்கள், போரில் பலிகொடுக்கப்படும் சிப்பாய்கள், கட்சிக்காக உயிரைக் கொடுக்கும் தொண்டர்கள் போன்றவர்களை விழிப்படைய வைக்கும் கேள்விகள் இந்நாடகத்தில் இடம்பெற்றிருக்கின்றன. தனிமனித வழிபாடு என்பது எப்படி இந்தச் சமூகத்தைப் பாதிக்கிறது என்பதை இந்நாடகம் வலிமையுடன் பேசியிருக்கிறது. “பொதுவாக, எதிர்காலத்தை நோக்கி வயதையடைவதைப் பற்றி நாம் யோசிப்போம். இறந்த காலத்தை நோக்கி வயதையடைந்தால் என்ன என்ற பயணத்தை ‘வண்டிச்சோடை’ மேற்கொள்ளவிருக்கிறது. கிட்டத்தட்ட ஒரு ‘கலைடோஸ்கோப்’ அனுபவத்தைப் பார்வையாளர்களுக்கு இந்நாடகம் கொடுக்கும்” என்கிறார் ராஜநாயஹம்.
உருமாற்றம் என்னும் அம்சம் இந்த நாடகத்தின் முக்கியமான திருப்புமுனையாக இருக்கும். ஓர் ஆடு, ஆட்டுக்காரனாக மாறுகிறது. மூலிகைச் செடிகளைத் தொடர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கும் ஓர் ஆடு மனித சிரஞ்சீவியாக மாறிவிடுகிறது. “இப்படி, இந்த நாடகத்தில் எழுதப்பட்டிருக்கும் கற்பனை என்பது நம்முடைய அவநம்பிக்கையை உடைத்தெறிவதாக இருக்கும். இந்த நாடகம் நேரடியாக எந்தவொரு விஷயத்தையும் விளக்கியிருக்காது. ஆனால், மறைபொருளாக இந்நாடகத்தில் பல விஷயங்கள் பொதிந்திருக்கின்றன. பார்வையாளர்களுக்கு ஒரு விஷேசமான அனுபவத்தை ‘வண்டிச்சோடை’ நாடகம் அளிக்கும் என்கிறார் இயக்குநர் ராஜநாயஹம்.
தமிழ் நாடகங்கள் நடைபெறும் இடம்:
அருங்காட்சியக அரங்கம் (Museum Theatre), எழும்பூர்
நிகழ்ச்சிகள்:
ஆகஸ்ட் 26 : ஆயிரத்தியோரு இரவுகள்
ஆகஸ்ட் 27 : முந்திரிக்கொட்ட
ஆகஸ்ட் 28 : வண்டிச்சோடை
‘தி இந்து தியேட்டர் ஃபெஸ்ட்’ நாடகங்களைப் பார்க்க நுழைவுச்சீட்டுகளுக்கு:
thehindu.com/tickets2016
மேலும் தகவல்களுக்கு:
thehindu.com/theatrefest