

புதையல் தீவு, குட்டி கடற்கன்னி, ஸ்விஸ் ராபின்சன் குடும்பம்… ஆர்.எல். ஸ்டீவன்சன், ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சன், ஜோகன் டேவிட் வைஸ் ஆகியோர் குழந்தைகளுக்காக எழுதிய உலகப் புகழ்பெற்ற நாவலாசிரியர்கள்.
இதுபோன்ற படைப்புகள் ஒவ்வொரு வயதினருக்கும் ஏற்ற வகையில் எளிமைப் படுத்தப்பட்டு சுருக்க வடிவங்கள், ஓவியங்கள், படக்கதைகள் எனப் பல்வேறு வகைகளில் ஆங்கிலத்தில் கிடைக்கின்றன.
இந்தக் கதைகள் 19-ம் நூற்றாண்டில் எழுதப்பட்டு, இன்றளவும் உலகெங்கும் உள்ள குழந்தைகளால் படித்துவரப்படுபவை. குறைந்தபட்சம் 135 ஆண்டு வயதுடைய இந்தக் கதைகள், இப்போது சுருக்க வடிவில் தமிழில் வெளியாகியுள்ளன.
எளிமையான மொழிநடையைக் கொண்டுள்ள இந்த நூல்கள், கோட்டோவியங்களுடன் வெளியாகியிருப்பது குழந்தைகளின் கற்பனைக்குத் தளம் அமைத்துக் கொடுக்கும்.
குழந்தைகளுக்கு நூல் வெளியிடுவதில் புதிதாகக் களம் கண்டுள்ள வானம் பதிப்பகம் இவற்றைச் செய்நேர்த்தியுடன் வெளியிட்டிருக்கிறது.