

மலையாளக் கவிதையில் நவீன முயற்சிகளுக்கு வழி காட்டியவர் டாக்டர் கே. அய்யப்பப் பணிக்கர். அவருடைய 'குருக்ஷேத்திரம்' என்ற நெடுங் கவிதைதான் நவீனத்துவத்துவ எழுத்தின் முன்னுதாரணம். கவிஞராக மட்டுமல்லாமல் விமர்சகராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் பண்பாட்டுத் தூதராகவும் செயலாற்றியவர். ஆங்கிலப் பேராசிரியராக நீண்ட காலம் பணியாற்றினார். மலையாள இலக்கியம் பற்றி ஆங்கிலத்திலும் உலக இலக்கியங்கள் பற்றி மலையாளத்திலும் எழுதினார். தமிழின் இலக்கியப் பார்வையாகவும் வாழ்க்கைப் பார்வையாகவும் கருதத் தகுந்த திணைக் கோட்பாட்டைப் பற்றி இந்திய இலக்கிய அரங்குகளில் விரிவாகப் பேசியவரும் அவரே.
அரை நூற்றாண்டுக்கும் மேலாக இலக்கியச் செயல்பாடுகளில் தீவிரமாக இருந்த அய்யப்பப் பணிக்கர் 2006 ஆம் ஆண்டு காலமானார். ஆனால் அவரது செல்வாக்கு இன்னும் மலையாள இலக்கியத்தில் உணரப் படுகிறது. அய்யப்பப் பணிக்கர் மறைவுக்குப் பின்னர் உருவாக்கப்பட்ட அறக் கட்டளை கடந்த 23, 24 தேதிகளில் திருவனந்தபுரத்தில் நடத்தியதேசிய கவிதைத் திருவிழாவின் போது இது வெளிப்படையாகவும் தெரிந்தது. மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, இந்தி, ஆங்கில மொழிகளைச் சேர்ந்த கவிஞர்கள் பங்கேற்ற இருநாள் நிகழ்ச்சியின்போது அய்யப்பப் பணிக்கர் என்ற கவிஞரின் மீது மலையாளிகள் கொண்டிருந்த மரியாதை புலப்பட்டது.
அய்யப்பப் பணிக்கர் ஃபவுண்டேஷனின் தலைவர் கவிஞர்.கே.சச்சிதானந்தனும் துணைத் தலைவர் டி. பி.சீனிவாசனும் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தனர். கவிதை வாசிப்பு, அய்யப்பப் பணிக்கரின் இலக்கியப் பங்களிப்புப் பற்றிய உரைகள், இரண்டு நாள் மாலையும் பணிக்கர் கவிதைகளின் காட்சிபூர்வமான வெளிப்பாடு என்று அமைந்த நிகழ்ச்சிகள் ஒரு கவிஞர் தொடர்ந்து நினைக்கப்படுவதன் அடையாளங்களாக இருந்தன. தமிழ் இலக்கியத்தில் உழலும் எனக்குச் செல்லப் பொறாமையையும் ஏற்படுத்தியது. தமிழில் யாராவது ஒரு எழுத்துக் கலைஞனை நாம் இந்த அளவு மரியாதையுடன் கொண்டாடுகிறோமா என்ற கேள்வியையும் எழுப்பியது.
தமிழ் மொழியின் சார்பில் கலந்து கொண்டவர்கள் ரவிகுமாரும் நானும். இரண்டாம் நாள் கவிதை வாசிப்பு முடிந்ததும் சச்சிதானந்தன் சொன்ன வார்த்தைகள் இந்தப் பொறாமையைக் கொஞ்சம் கலைத்தது. 'தமிழ்க் கவிதைகள் மிகச் சிறப்பானதாகவும் வலுவானதாகவும் இருந்தன' என்று அவர் சொன்ன சொற்கள் அப்போது பெய்து கொண்டிருந்த மழையை விடக் குளிர்ச்சியைக் கொடுத்தன.
அய்யப்பப் பணிக்கர் இயல்பில் கொஞ்சம் சங்கோஜி. அமெரிக்கப் பல்கலைக் கழகத்தில் பட்ட மேற்படிப்புக்காகச் சென்றபோது சக அமெரிக்க மாணவர்கள் அவரைச் சீண்டுவார்களாம். ''நீ ஏன் இவ்வளவு வெட்கப்படுகிறாய்?' பணிக்கரின் பதில் இதுவாக இருந்தது. ' நான் கூட வெட்கப்படவில்லை என்றால் வெட்கம் என்ற உணர்வுக்கு அமெரிக்காவில் புகலிடமே இருக்காதே'. பணிக்கருடன் அதே கால கட்டத்தில் அதே பல்கலைக் கழகத்தில் உடன் பயின்ற குஜராத்திக் கவிஞர் சிதன்சு யசஸ்சந்திரா இந்த நினைவு கூரலுடன் 'இந்திய இலக்கியம்' பற்றி நிகழ்த்திய உரை பார்வையாளர்களை ஆழமாகப் பாதித்தது. அதை விட என்னைப் பாதித்தது வேறு ஒருவருடன் நடந்த உரையாடல்.
நிகழ்ச்சியில் வழங்குவதற்கான தேநீர் கெட்டிலுடன் வந்த ஆட்டோ ஓட்டுநர் கேட்டார். ' என்ன நிகழ்ச்சி சார்?' 'அய்யப்பப் பணிக்கர் என்று ஒரு கவிஞர். அவர் நினைவாக நடக்கும் நிகழ்ச்சி. அவரை உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை' என்றேன். ஒரு நொடி என்னை ஏற இறங்கப் பார்த்துவிட்டு அவர் சொன்னார். 'வெறும் ஒரு திருடனான என்னைக் கள்ளன் என்று அழைத்தீர்களே - நீங்கள் கள்ளனென்று அழைத்தீர்களே' என்ற கவிதையை எழுதியவர்தானே, தெரியும் சார்'.
நான் வாயடைத்து நின்றேன். அவர் பதிலைக் கேட்டும், ஒரு கவிஞர் சாதாரண வாசகனின் நினைவில் இடம் பெற்றிருக்கும் அதிசயத்தை உணர்ந்தும்.