

தீவிர இலக்கியத்துக்கான வெளியை இன்று இடைநிலை இதழ்களும், வார, தினசரி இதழ்களும் எடுத்துக்கொண்டுவிட்டன. இந்த இரு இதழ்களின் இடைவெளிக்குள் சிற்றிதழ்களின் நோக்கம் கேள்விக்குரியதாக மாறியிருக்கிறது. இந்தப் பின்ணணியில் இன்றைய காலகட்டத்தின் சாத்தியங்கள், சாத்தியமின்மைகள் குறித்த திடமான பார்வையுடன் ஒரு பரிசோதனையாக வெளிவந்திருக்கிறது ‘இடைவெளி’ இதழ்.‘மாற்று வெளி’ மூலம் வாசக கவனம் பெற்ற பரிசல் செந்தில்நாதன் இதன் ஆசிரியர். திடகாத்திரமான இலக்கியச் சிந்தனைகொண்ட பேராசிரியர் பிரவீண் பஃறுளி பொறுப்பாசிரியர். இந்த இதழுக்காக அவர் மேற்கொண்ட கவிஞர் சபரிநாதன் நேர்காணல், வாசகர்களுக்கு நவீன கவிதை குறித்த திடமான அபிப்ராயத்தை ஏற்படுத்துகிறது. ஸ்பானிய எழுத்தாளரான ஜார்ஜ் லூயீ போர்ஹேயின் இரு கவிதைகளை ராஜாஜியுடன் இணைந்து இதழுக்காக மொழிபெயர்த்துள்ளார். ஜீ.முருகனின் சிறுகதை இதழுக்குச் சிறப்புச் சேர்த்துள்ளது. கதை விவரிப்பில், வடிவமைப்பில் புதுமை படைத்திருக்கிறார். பாம்பு ஒரு படிமமாகக் கதைக்குள் நெளிந்து, இறுதியில் எழுந்து படமெடுக்கிறது. கவிஞர் ராஜமார்த்தாண்டனுக்குக் கவிஞர் பிரமிள் எழுதிய கடிதங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளன.
இவை அல்லாமல் குமார் அம்பாயிரம், பெருந்தேவி, எம்.கோபாலகிருஷ்ணன், சீனிவாசன் நடராஜன், குட்டி ரேவதி ஆகியோரின் பங்களிப்புகளும் உள்ளன. நேர்காணல், கதை, கவிதை, மொழிபெயர்ப்பு, இலக்கிய மதிப்பீடு ஆகிய சிற்றிதழுக்கான அம்சங்களுடன் இந்த இதழை வடிவமைத்துள்ளனர். நவீன காலத் தமிழ் இலக்கியப் போக்கை இந்த இதழைக்கொண்டு கொஞ்சம் நாடி பிடித்துப் பார்க்க முடியும்.
-ஜெய்