

எழுத்தாளர், பத்திரிக்கை ஆசிரியர், அங்கதப் பத்தியாளர், நாவலாசரியர், வரலாற்றாசிரியர் எனப் பல முகங்கள் கொண்ட குஷ்வந்த் சிங் குறித்து எல்லாருக்கும் சொல்வதற்கு ஒரு கதை இருக்கும். இந்தியா சுதந்திரம் பெற்று 50 ஆண்டுகளைக் கொண்டாடும் வகையில் ஒன்றாக இத்தாலிக்குப் பயணம் செய்தபோது அவரை நான் சந்தித்தேன்.
இந்தியாவின் முதுபெரும் எழுத்தாளரான அவரை அடிக்கடி சந்திப்பவர்களில் ஒருத்தியாக நான் இல்லாவிட்டாலும், அவரது குடும்பத்தினருடன் நெருங்கிய தொடர்பு இருந்ததால் அவரை எனக்குத் தெரிந்திருந்தது. அவரது மருமகன் ரவி தயாளிடம் நான் சிறிது காலம் பணிபுரிந்திருக்கிறேன்.
இத்தாலியில் நேரம் கிடைக்கும்போது குடும்பத்தினருக்காகவும், நண்பர்களுக்காகவும் பொருட்கள் வாங்கச் செல்லும்போதும், இத்தாலிய உணவுக்காக வெளியே போகும்போதும் குஷ்வந்த் சிங் எங்களுடன் சேர்ந்துகொண்டார். அப்போது உலகம் முற்றிலும் உலகமயமானதாக மாறியிருக்கவில்லை. எனது குட்டி மருமகள்களுக்காக ஒரு குறிப்பிட்ட வகை சாக்லேட்டைத் தேடிக் கிடைக்காமல் போனதை அவர் தெரிந்துகொண்டார்.
எனக்குத் தெரியாமலேயே, அவர் அங்குள்ள பல அங்காடிகளைத் தேடிச் சென்று, குறிப்பிட்ட சாக்லேட்டைக் கண்டுபிடித்துவிட்டார். நான் இந்தியாவுக்கு விமானம் ஏறக் காத்திருந்தபோது, ஒரு பை நிறைய ‘கிண்டர் ஜாய்' (இப்போது இந்தியாவில் சாதாரணமாகக் கிடைக்கிறது) சாக்லேட்டுகளைத் தந்து, ‘வயதான மாமா ஒருவர் கொடுத்துவிட்டதாக அந்தச் சிறுமிகளிடம் சொல்லுங்கள்' என்று சொன்னார்.
அவர் பிரியத்துடன் செய்த இந்தச் செயல் எங்களுக்குள் பெரியதொரு பந்தமாக எஞ்சி நிற்கிறது. எங்களில் பெரும்பாலானவர்கள், இதுபோன்ற குறிப்பிட்ட தொடர்புகள் மூலமே அவரை நினைவில் வைத்திருக்கக்கூடும்
எழுத்தால் நிறைந்த வாழ்க்கை
அவரது ஆரம்ப காலத்தில் எழுதிய கலை, இலக்கியம், இதழியல் எழுத்துகள் தொடங்கி அவருடைய வாழ்க்கைக் காலம் முழுவதும் அவர் எழுதிய எழுத்துகள், சர்தார்ஜி நகைச்சுவைகள், பத்திகள், புத்தகங்கள் அனைத்துமே, விஷமத்தனம் கொண்ட, நகைச்சுவை கொப்பளிக்கும், கூர்மையான விமர்சனம் கொண்ட, வெளிப்படையான, தைரியமான, தடாலடியான, நேசமான மனிதராகக் குஷ்வந்த் சிங்கை அடையாளம் காட்டுகின்றன.
அவரது புத்தகங்களில் ட்ரெய்ன் டூ பாகிஸ்தான் எப்போதுமே எனது பிரியத்துக்குரியது. இந்திய - பாகிஸ்தான் பிரிவினையைப் பற்றிய நெகிழ்ச்சியடையச் செய்யும் கதை அது. சீக்கியர்கள் பற்றி இரண்டு தொகுதிகளாக அவர் எழுதிய வரலாற்று நூலும் என்னைக் கவர்ந்தது. வரலாற்றியலாளரின் கண்ணுடன் இதழியலாளரின் பேனா எழுதிய இந்த நூல், தான் இருக்கும் புத்தக அலமாரிக்குப் பெருமை சேர்ப்பதாகும்.
அவரது மறைவு இலக்கிய உலகுக்கு இழப்புதான். அவர் நடத்திய இலக்கிய விருந்துகள், அன்றாடம் அவர் வீட்டில் பலருக்கு நடந்த உபச்சாரங்கள் ஆகியவற்றால் மட்டும் ஏற்படும் இழப்பல்ல அது. இளம் எழுத்தாளர்களை ஊக்கப்படுத்தியவர் என்பதால் மட்டுமல்ல. மிகச் சரளமாகவும் அநாயசமாகவும் பல்வேறு வகைமைகளுக்குள் புகுந்து 30க்கும் மேற்பட்ட நூல்களை அவர் எழுதியிருப்பதும் அவரது மறைவை ஈடுசெய்ய இயலாததாக ஆக்குகிறது.
மாறாத கீர்த்தி
நீங்கள் புனைவு எழுத்தாளராக இருக்கலாம், புனைவற்ற எழுத்தையும் படைக்கலாம். இதழியல் எழுத்து, நகைச்சுவைத் துணுக்குகள் என்று எழுதலாம். தெரிந்தவர்களைப் பாத்திரங்களாகச் சித்தரிக்கலாம். தெரியாத வர்களையும் சித்தரிக்கலாம். செக்ஸ் குறித்து ரசிக்கும்படியாகவும் அப்படி அல்லாமலும் எழுதலாம். என்றாலும் ஒருவர் தனக்கான அரசியல் நிலைப்பாட்டை எடுக்க முடியும் என்பதைக் குஷ்வந்த் சிங் காட்டினார். 1984ஆம் ஆண்டு பொற்கோயிலுக்குள் இந்திய ராணுவம் புகுந்ததைக் கண்டித்துத் தனக்கு அளிக்கப்பட்ட பத்மபூஷன் விருதைத் திருப்பிக் கொடுத்தார்.
வாழ்வை முழுமையாக ரசித்து வாழ்ந்த அவர் அமைதியான முறையில் மரணம் அடைந்தது மிகவும் பொருத்தமானதுதான். இந்திய இலக்கியம் மற்றும் பத்திரிகையுலகின் பிதாமகனுக்கு, அவர் தற்போது எங்கே இருந்தாலும் வாழ்க என்று கூறி கோப்பையை உயர்த்துவதே பொருத்தமான அஞ்சலியாக இருக்கும்.
- ஊர்வசி புட்டாலியா, ஜுபான் பதிப்பகத்தின் ஆசிரியர், வெளியீட்டாளர் மற்றும் இயக்குனர். பிஸ்னஸ் லைன், தமிழில்: ஷங்கர்