நான் எப்படிப் படிக்கிறேன்?- பழநிபாரதி, கவிஞர்

நான் எப்படிப் படிக்கிறேன்?- பழநிபாரதி, கவிஞர்
Updated on
2 min read

புத்தகங்களின் வாசனை சூழ வளர்ந்தவன் நான். அது என் அப்பாவின் வாசனையும்கூட. அவர் (சாமி பழனியப்பன்) பாரதிதாசன் கவிதா மண்ட லத்தைச் சேர்ந்த கவிஞர். அதனாலேயே எனக்கு அவர் பாரதி என்று பெயர் சூட்டினார். என் சின்னஞ்சிறு வயதில் அவர் ‘வாடா’ என்று என்னை அழைத்துக்கொண்டு போனால், அந்தப் பாதைகள் போய்ச்சேர்கிற இடம் அச்சகம், பதிப்பகம், நூலகம், பழைய புத்தகக் கடை இப்படித்தான் இருக்கும். அவர் ஒரு புத்தகம் வாங்கினால் எனக்கொன்றும் வாங்கித் தருவார்.

ஒருநாள் அப்பாவின் விரல் பிடித்துக்கொண்டே நடக்கும்போது, “கவிதை என்றால் என்ன?” என்று கேட்டேன். அவர் ஒன்றுமே பேசவில்லை. அந்நேரம் மிகுந்த மகிழ்ச்சியோடு அவர் என்னைப் பார்த்த முகம் கவிதைமயமானது. வீட்டுக்கு வந்ததும் பாரதியார், பாரதிதாசன் கவிதைகளை எடுத்துத்தந்து “படி” என்றார். அந்தப் ‘படி'கள்தாம் என்னை ஷெல்லி, கீட்ஸ், விட்மன், மாயகோவ்ஸ்கி, அன்னா அக்மதோவா, ஷார்ல் போத்லெர், பாப்லோ நெரூதா, ழாக் பிரெவர் இப்படித் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் உலகக் கவிஞர்களை எல்லாம் நான் காணும்படி என்னைக் கொண்டுவந்து சேர்த்திருக்கிறது.

கவிதைகளுக்குப் பிறகு நான் விரும்பி வாசிப்பது வாழ்க்கை வரலாறுகளைத்தான். அந்த ருசியை எனக்கு முதலில் ஊட்டியது கண்ணதாசனின் ‘வனவாசம்.’

இப்போது நான் வலியோடு வாசித்துக்கொண்டிருப்பது இரோம் ஷர்மிளாவின் வாழ்க்கையை. மணிப்பூர் ஆயுதப்படைச் சட்டம் வழங்கியிருக்கும் சிறப்பு அதிகாரத்தைக் கையிலெடுத்துக்கொண்டு, அப்பாவி மக்களைக் கொல்வதும், பெண்களைப் பாலியல் வன்முறைகளால் சிதைப்பதுமாக நடத்தும் அநாகரிகக் கொடுமைகளை எதிர்த்து, அவர் கடந்த 17 ஆண்டுகளாக உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்திவருகிறார். 28 வயதில் உண்ணாவிரதத்தைத் தொடங்கியிருக்கிறார்; இப்போது 45 வயது. உலகிலேயே மிக நீண்ட நாட்களாக நடந்துகொண்டிருக்கும் உண்ணா விரதப் போராட்டம் இதுதான். ஆயுதப் படைக்கு வழங்கியிருக்கும் அந்தச் சிறப்பு அதிகாரச் சட்டத்தை முழுவதுமாக விலக்குவதுதான் அவரது ஒரே கோரிக்கை. காந்தியின் வழியிலான உண்ணாவிரதப் போராட்டம் அவருடையது.

உடல் தளர்ந்துவிட்டது; உள்ளுறுப்புகள் பழுதடைந்துவிட்டன; மாதவிடாய் நின்றுவிட்டது; தலைமுடி சீவுவதில்லை; செருப்புகள் அணிவதில்லை; பற்கள் பஞ்சினால் சுத்தம் செய்யப்படுகின்றன. குழாய் வழியாக வலுக்கட்டாயமாகத் திரவ உணவைச் செலுத்திக்கொண்டிருக்கிறார்கள். இன்னும் உறுதி குலையாமல் இரோம் ஷர்மிளா சொல்கிறார்: “எனக்கு நம்பிக்கை இருக்கிறது. சத்தியத்துக்காக நான் போராடிக்கொண்டிருக்கிறேன். தாமதமானாலும் கண்டிப்பாக சத்தியம் வெல்லும் என்று நம்புகிறேன்.” எல்லாப் பெண்களையும் போல அவர் வாழ விரும்பவில்லை; எல்லாப் பெண்களுக்காகவும் வாழ வந்திருக்கிறார். தன் உடலையே போர்க்களமாக்கி, மன உறுதியை ஆயுதமாக்கி எல்லாருக்காகவும் அவள் போராடிக்கொண்டிருக்கிறார். அரசியல் மாறுகிறது; ஆட்சிகள் மாறுகின்றன. ஆனால், இரோம் சர்மிளாவின் கேள்வி மட்டும் மாறவேயில்லை.

மலையாளத்தில் பி. சிறீராஜ் எழுதி தமிழில் மு.ந. புகழேந்தி மொழிபெயர்த்திருக்கும் ‘இரோம் சர்மிளா’ நூலை

‘எதிர்' வெளியீடு கொண்டு வந்திருக்கிறது.

எனக்கு மகிழ்ச்சியைக் கொண்டாடவும் ஒரு புத்தகம் தேவைப்படுகிறது. துக்கத்திலிருந்து மீளவும் ஒரு புத்தகம் தேவைப் படுகிறது.

- கேட்டு எழுதியவர்: மு.முருகேஷ்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in