Last Updated : 19 Oct, 2013 03:10 PM

 

Published : 19 Oct 2013 03:10 PM
Last Updated : 19 Oct 2013 03:10 PM

தாகூரின் காதலி

சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் சுனில் கங்கோபாத்தியாய் மறைந்தார். 'நவீன வங்காள மொழியின் புதிய சுரணையுணர்வை முன் வைத்தவர் என்று பாராட்டப்பட்டவர் சுனில். அவரது வாழ்க்கையும் படைப்புகளும் எப்போதும் சர்ச்சைகளின் மையப் புள்ளிகளாக இருந்தன. உயிருடன் இருந்தபோது இருந்த சர்ச்சைகள் அவரது இறப்பிலும் தொடர்ந்தன. தனது இறப்புக்குப் பின்னர் எந்தச் சடங்குகளும் கூடாது என்று முன்னர் அறிவித்திருந்தபடியே அவரது உடல் எரியூட்டப்பட்டது. வெளித் தோற்றத்தில் புதுமை விரும்பிகளும் அடிமனத்தில் மரபுக் காவலர்களாகவும் இருக்கும் பெரும்பான்மை வங்காளிகள் நடுவே அதுவும் சர்ச்சைக்கிடமானது.

சுனில் கங்கோபாத்தியாவைக் கடுமையாக விமர்சிக்கக் காரணமாக இருந்த நாவல் ' ரானு ஓ பானு'. கடவுளரை விமர்சனம் செய்யும் நாவலைப் பொறுத்துக்கொள்ளத் தயாராக இருந்த வங்காளிகள் கடவுளை விட மிகுந்த பக்தியுடன் ஆராதனை செய்யும் தங்கள் மகா கவியைப் பற்றிய நாவலுக்குக் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்தார்கள். நாவலின் மையப் பாத்திரம் மகா கவி ரவீந்திர நாத தாகூர். தலைப்பே தாகூர் பக்தர்களுக்குக் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தங்கள் மகா கவியை மையப் பாத்திரமாகக் கொண்ட நாவலின் தலைப்பு ' பானு ஓ ரானு' என்றுதான் இருக்க வேண்டும். சுனில் கங்கோபாத்தியாய் வேண்டுமென்றே ஒரு சாதாரணப் பெண்ணின் பெயரை முதலில் வைத்திருக்கிறார். இது குருதேவரை அவமதிப்பது என்று சீறினார்கள்.

ஆனால், ரானு என்பது ஒரு சாதாரணப் பெண்ணின் பெயர் அல்ல. தாகூருக்கிருந்த எண்ணிறந்த தோழிகளில் ஒருவரின் பெயர். பிற பெண்களின் அடையாளத்தையும் பூர்வ கதையையும் கவிஞரின் எழுத்துகளிலிருந்து ஊகிக்க முடியும். நிரூபிக்கவும் முடியும். ரானுவின் பெயரை ஊகிப்பது சிரமம். ரானு தனது பத்தாவது வயதில் அறுபது வயதான தாகூரை முதல் முதலாகச் சந்திக்கிறாள். கவிதை ஆர்வம் ததும்ப நடமாடும் அந்த வெகுளிச் சிறுமி அவரைக் கவர்கிறாள். அந்தச் சந்திப்புக்குச் சிறிது காலம் முன்பு காலமான தனது மகள் மாதுரிலதாவின் பிரதிபலிப்பாகவே ரானுவைக் காண்கிறார். தொடர்ந்து தனது அன்புக்குரியவர்கள் மறைந்து போனதாலும் விலகிப் போனதாலும் மனதுக்குள் காயங்களைத் தாங்கிக்கொண்டு தாகூர் வாழ்ந்த நாட்கள் அவை. பகிரங்கப்படுத்த முடியாத தனிமை உணர்வில் திணறிக்கொண்டிருந்தவரை அவளுடைய அண்மை ஆறுதல்படுத்துகிறது. அவளுடைய இலக்கிய ஆர்வம் வியப்படையச் செய்கிறது. அவள் தன்மீது கொண்டிருக்கும் மரியாதை பரவசமளிக்கிறது. சாந்தி நிகேதனில் தன்னுடன் வசிக்கும் ரானு சொந்த ஊரான பெனாரசுக்குத் திரும்பி எழுதும் கடிதங்கள் அவரைக் குதூகலப்படுத்துகின்றன.

தான் இழந்த இளமையை அவள் மூலம் திரும்ப அடைகிறார். சிறுமியாக அவளிடம் தோன்றிய வாஞ்சை அவள் பருவமடைந்த பின்னர் ஏதோ ஒரு கணத்தில் காதலாக மாறுகிறது. ரானுவுக்கும் அப்படியே. உலகம் போற்றும் மகா கவிஞன் தனது புன்னகையில் மெல்லிய ஒளியில் பிறர் கண்ணுக்குத் தென்படாத சுடர் விடுவதைப் புரிந்துகொள்கிறாள். ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் 'கவிஞனுக்கும் தேவதை'க்கும் இடையிலான நெருக்கம் நீள்கிறது. மிகப் பெரும் செல்வந்தரும் தாகூரின் புரவலருமான சர். பிரேன் முகர்ஜியின் மனைவியாகிறாள் ரானு. இருவரிடையே நிலவிய நெருக்கம் மறைகிறது. அந்த மறைவுடன் நாவல் முற்றுப் பெறுகிறது.

தனது நாடகமொன்றின் மையப் பாத்திரத்துக்குத் தாகூர் சூட்டிய பெயர் 'பானு சிம்மன்'. அந்தப் பெயரின் சுருக்கமான 'பானு'தான் தலைப்பில் தாகூரின் பெயராகக் குறிப்பிடப் படுகிறது.

சுனில் கங்கோபாத்யாயா தாகூரின் அறியப்படாத காதலைக் கண்டெடுத்திருப்பது கற்பனையிலிருந்தல்ல; உண்மையிலிருந்து. கையெழுத்துப் பிரதியாகத் திருமதி ரானு முகர்ஜி வைத்திருந்த தன் வரலாற்றிலிருந்துதான். அந்த வரலாற்றில் இரண்டு மனங்களின் காதல் மட்டுமல்ல; அவர்கள் வாழ்ந்த காலத்தின் நிகழ்வுகளும் பதிவாகியிருக்கின்றன. சுனில் கங்கோபாத்தியாய் நாவலின் கதையோட்டத்துக்குக் கொடுத்திருக்கும் அதே முக்கியத்துவத்தை உண்மை நிகழ்வுகளை இணைப்பதில் அளித்திருக்கிறார். உணர்ச்சிகரமான வாசிப்புக்குரிய நாவலைப் படித்து முடிக்கும்போது எல்லா உயிர்களின் துடிப்புகளையும் தன் வாயிலாக வெளிப்படுத்திய பெருங் கவிஞர் மாற்ற முடியாத தனிமையில் அமர்ந்திருப்பதையும் அவரைத் தழுவிக்கொள்ள வாசகனின் கை நீளுவதையும் பார்க்கலாம்.

'ரானு ஓ பானு' ( வங்க நாவல் ) 2004

சுனில் கங்கோபாத்யாயா

ஆங்கிலத்தில் : ஷீலா சென்குப்தா

வெளியீடு; ஸ்ருஷ்டி பப்ளிஷர்ஸ் அண்ட் டிஸ்டிரிபியூட்டர்ஸ், நியூ டெல்லி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x