

சிறுவயதில் சித்திரக்கதைகள் படிப் பது குழந்தைகளது கற்பனை உலகத்தை விஸ்தரிக்கிறது. அவர்கள் பொதுவாக பள்ளியில் சுவாரசியமின்றி படிக்கும் அறிவியலையும், விஞ்ஞானக் கோட்பாடுகளையும்கூட சித்திரக் கதைகள் சுவாரசியமாக்க முடியும். அதற்கு காலேப் எல்.கண்ணன் எழுதி யிருக்கும் இந்த சித்தரக் கதை நூல்களே சாட்சி.
ஆர்க்கிமிடிஸ், மேரி க்யூரி, அலெக்சாந்தர் ஃப்ளெமிங், லூயி பாஸ்டியர் ஆகியோரின் சுருக்கமான வரலாறு, சித்திரக் கதைகளாகச் சொல்லப்பட்டுள்ளன.
அந்த விஞ்ஞானிகளின் பிறப்பு, இளமைப்பருவம், சமூக, வரலாற்று, அரசியல் சூழல், முக்கியமான கண்டு பிடிப்புகள், இறுதி வாழ்க்கை என்று இந்நூல் அமைந்துள்ளது. தங்கள் வாழ் நாள் முழுக்க சொந்த சுகங்களையும் முற்றிலும் துறந்து ரேடியத்தைக் கண்டுபிடித்த பியரி க்யூரி, மேரி க்யூரி தம்பதியினர் ரேடியத்தாலேயே உடல்நிலை பாதிக்கப்படுகின்றனர். பியரி க்யூரி மரணமடைகிறார். ஆர்க்கிமிடிஸ் விதி உருவான கதை தெளிவாகச் சொல்லப்படுகிறது.
எல்லா விஞ்ஞானிகளின் பங்களிப்பு களைச் சொல்லும் அதே நேரத்தில், அவர்களின் பங்களிப்புகள் எதிர்காலத்தில் வந்த விஞ்ஞானிகளுக்கு எப்படி பயன்பட்டன என்றும் கூறப்படுகிறது. கதைகளையும்,படங்களையும் சேர்த்து உருவாக்கியுள்ளார் ஆசிரியர் காலேப் எல். கண்ணன். இதைப்போல நவீன விஞ்ஞானத்துக்கு பங்களித்த ஆளுமைகள் அனைவரின் கதைகளும் சித்திரக் கதைகளாக வெளிவந்தால் குழந்தைகள் பெரிதும் பயன்பெறுவார்கள்.
32 பக்கங்கள் கொண்ட ஒவ்வொரு நூலின் விலையும் 50 ரூபாய்.
ஆர்க்கிமிடிஸ், லூயி பாஸ்டியர், மேரி க்யூரி, அலெக்சாண்டர் ஃப்ளெமிங்
ஆசிரியர்: காலேப் எல். கண்ணன்
வெளியீடு: வசந்தா பிரசுரம்
புதிய எண்.15/பழைய எண்.6, ஜெய்சங்கர் தெரு, மேற்கு மாம்பலம்,
சென்னை-33, தொலைபேசி:044-24742227
விலை: தலா 50 ரூபாய்