Last Updated : 25 Feb, 2017 10:20 AM

 

Published : 25 Feb 2017 10:20 AM
Last Updated : 25 Feb 2017 10:20 AM

கிண்டர்ஸ்லியும் தமிழ்ப் புலமை மரபும்

மொழி, கலை, இலக்கியங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய தமிழ்ப் பண்பாடு தொடர்பான காலனிய ஆய்வாளர்களின் ஆய்வுகள் பற்றிய மதிப்பீடுகளோ, பின்காலனியச் சூழலில் அந்த ஆய்வுகளின்மீது புதிய வெளிச்சங்களைப் பாய்ச்சும் கருத்தாடல்களோ தமிழில் அதிகமாக வெளிவரவில்லை. வெளிவந்துள்ள ஆய்வுகளுள் குறிப்பிடத் தக்கதாக ந. கோவிந்தராஜனின் இந்த நூலைச் சொல்லலாம்.

பயமுறுத்தாத எளிமையான மொழிநடை, விரிவான தரவுகள், ஆய்வு நேர்மை, ஆய்வுமுறை, புதிய ஆய்வுகளுக்கான திசைகளைக் காட்டுதல் போன்ற பண்புகளை இந்த நூல் ஒருங்கே கொண்டிருக்கிறது.

1796-ல் எலிசபத் ஹாமில்டன் என்பவர் எழுதி வெளியிட்ட ‘ட்ரான்ஸ்லேஷன் ஆஃப் த லெட்டர்ஸ் ஆஃப் எ ஹிண்டூ ராஜா’ ஆங்கில நூலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட ஒரு திருக்குறள் மேற்கோளாகத் தரப்பட்டுள்ளது. இந்தக் குறள் மொழிபெயர்ப்பு ‘ஸ்பெஸிமென்ஸ் ஆஃப் ஹிண்டூ லிட்டரேச்சர்’ (1794) என்ற நூலிலிருந்து எடுக்கப்பட்டது. இந்த நூலின் ஆசிரியர் நத்தானியல் எட்வர்ட் கிண்டர்ஸ்லி. இவர்தான் திருக்குறளின் முதல் ஆங்கில மொழிபெயர்ப்பாளர். இதுபோன்ற தகவல்களையும் ஆய்வின் மையப்பொருளையும் நூலின் முன்னுரையில் கோவிந்தராஜன் அறிமுகப்படுத்துகிறார்.

‘நத்தானியல் எட்வர்ட் கிண்டர்ஸ்லி 1779-ல் ஆங்கிலேய ஆட்சியில் புனித ஜார்ஜ் கோட்டையில் எழுத்தராகப் பணியில் சேர்ந்து 1790-ல் வணிக வாரியத்தின் மூத்த உறுப்பினராகப் பணியாற்றி 1792-ல் தென்னாற்காடு மாவட்டத்தின் ஆட்சியராகப் பதவி உயர்வு பெற்றார். 1800-ல் தன் தாயகம் திரும்பினார். 1794-ல் ‘திருவள்ளுவர் குறள்’ என அவரால் குறிப்பிடப்படுகின்ற திருக்குறளின் 11 அதிகாரங்களை முதன்முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். திருக்குறளின் மூலத்தை மொழிபெயர்க்காமல் சமணராகிய கவிராஜ பண்டிதர் பேச்சு மொழியில் வெளியிட்ட திருக்குறள் உரையைத்தான் மொழிபெயர்த்துள்ளார். இத்துடன் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட ‘நளராஜா வரலாறு’ என்பதையும் சேர்த்து ‘ஸ்பெஸிமென்ஸ் ஆஃப் ஹிண்டூ லிட்டரேச்சர்’ என்ற நூலை வெளியிட்டுள்ளார்.

கிண்டர்ஸ்லியின் மொழிபெயர்ப்புக்கு ஒரு நோக்கம் இருக்கிறது என்ற கருதுகோளைச் சுமந்துகொண்டு காலனிய காலத்துச் சமூக, பண்பாட்டு, அரசியல் வெளிகளிலும் காலனிய ஆய்வாளர்களின் சிந்தனை வெளிகளிலும் குறுக்கும் நெடுக்குமாகப் பயணம் செய்கிறார் கோவிந்தராஜன். “ஒரு பிரதியை முழுவதுமாக விளங்கிக்கொள்வது என்பதே அந்தப் பிரதியில் என்ன இல்லை என்பதைத் தெரிந்துகொள்வதுதான். கிண்டர்ஸ்லியின் பிரதியில் என்ன இல்லை என்ற விவாதத்தின் ஊடாக வெளிக்கொண்டுவரப்படுவதுதான் அவரது பிரதியில் என்ன இருக்கிறது என்பது” எனத் தன் ஆய்வுப் பார்வையைத் தெளிவுபடுத்துகிறார்.

சமஸ்கிருத உன்னதத்தையும் பிராமணிய இந்து சமயத்தையும் முன்னிலைப்படுத்தி கல்கத்தா சிந்தனைப் பள்ளியை உருவாக்கியவர் வில்லியம் ஜோன்ஸ்; தமிழின் தனித்தன்மையையும் பிராமணரல்லாத உயர்சாதியினரையும் சைவத்தையும் முன்னிலைப்படுத்தி சென்னைச் சிந்தனைப் பள்ளியை உருவாக்கியவர் எல்லிஸ். இந்த இரு ஆளுமைகளோடு, பேச்சுத் தமிழையும் படிப்பறிவில்லா மக்களையும் சமண மரபையும் முன்னிலைப்படுத்தி, அமைப்பற்ற நாட்டுப்புறவியல் நோக்கை அறிமுகம் செய்த கிண்டர்ஸ்லியை விரிவான முறையில் ஒப்பிட்டு விளக்குகிறார் கோவிந்தராஜன். இம்மூன்று ஆளுமைகளின் புலமை அதிகார அரசியலை ஆதாரங்களுடன் தர்க்கபூர்வமாக நெறிமுறையுடன் விளக்கியுள்ளார்.

இத்தகைய விளக்கத்தின் ஊடாக கிண்டர்ஸ்லியின் பிரதியில் உள்ள கருத்துக்களையும் இல்லாத கருத்துக்களையும் உணர்த்தி, அவர் காலத்துப் புலமை அதிகார அரசியலில் அவருடைய தனித்துவமான நிலைப்பாட்டை உணர்த்த முயற்சி செய்திருக்கிறார் கோவிந்தராஜன். பின்னிணைப்பில் தரப்பட்டுள்ள கிண்டர்ஸ்லியின் திருக்குறள் ஆங்கில மொழிபெயர்ப்பு எதிர்கால ஆய்வுகளுக்கு நல்ல தரவாக அமையக்கூடும்.

ந. கோவிந்தராஜனின் ஆய்வுக் கருத்துக்கள் பலவற்றின்மீது வேறுபட்டு விவாதிப்பதற்கான சாத்தியங்களும் நிறையவே இந்த நூலில் உள்ளன. இந்நூலை ஆழ்ந்து படிப்பவர்கள் அவற்றை விவாதிக்கக் கூடும்.

- இ. முத்தையா,
ஓய்வு பெற்ற பேராசிரியர்,
தொடர்புக்கு: i_muthiah@yahoo.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x