இது புதுமையின் வரலாறு

இது புதுமையின் வரலாறு

Published on

பெயரில் மட்டுமல்ல தம் புனைவுகளிலும் பெரும் புதுமைகளை மேற்கொண்டவர் எழுத்தாளர் புதுமைப்பித்தன். அவர் 42 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்திருந்தாலும் அவரது எழுத்துகள் அவருக்குத் தமிழ் இலக்கிய வரலாற்றில் முக்கியமான இடத்தைப் பெற்றுத்தந்திருக்கின்றன. இந்த அளவுக்குத் தமிழ் இலக்கிய உலகில் தனிக் கவனத்தைப் புதுமைப்பித்தனுக்குப் பெற்றுத்தந்ததில் ‘புதுமைப்பித்தன் வரலாறு’ என்னும் இந்நூலுக்குக் கணிசமான பங்கிருக்கிறது.

இது, புதுமைப்பித்தனது அனைத்து வாழ்க்கைச் சம்பவங்களையும் நிகழ்வுகளையும் விரிவாக விளக்கும் வரலாறு அல்ல; ஆனால், இந்த நூலின் வழியே புலப்படும் புதுமைப்பித்தனின் ஆளுமை வாசக மனத்தில் கல்வெட்டுப் போல பதிந்துவிடுகிறது. அதற்கு முக்கியக் காரணம், பள்ளத்தில் பாயும் தெள்ளிய நீரைப் போன்ற தொ.மு.சி. ரகுநாதனின் நடை. புதுமைப்பித்தனின் உருவம், பழக்கவழக்கம், பழகும் தன்மை என அவரது ஆளுமையின் அத்தனை பரிமாணங்களையும் திரட்டித் தந்துவிடும் முயற்சியை நூலில் உணர முடிகிறது.

1906 ஏப்ரல் 25-ல் திருப்பாதிரிப்புலியூரில் பிறந்த புதுமைப்பித்தன் 1948 ஜூன் 30-ல் திருவனந்தபுரத்தில் காலமானார். இந்த இடைப்பட்ட காலத்தில் பத்திரிகை, இலக்கியம், திரைப்படம் போன்ற காரணங்களுக்காகத் திருநெல்வேலி, திருவனந்தபுரம். பூனா எனப் பல்வேறு திசைகளில் வாழ்க்கை அவரை அலைக்கழித்திருக்கிறது. அவருக்கு எட்டு வயதானபோது அவருடைய தாயார் காலமானார். அன்னையின் பராமரிப்போ பாசமோ கிட்டாத நிலையில் பால்யத்தைக் கடந்த புதுமைப்பித்தனின் நெஞ்சில் தாயன்பு குறித்த ஏக்கம் நிரந்தரமாகவே தங்கிவிட்டது. அந்த ஏக்கத்தின் வெளிப்பாடுதான் தன் மகளுக்கு ‘பர்வதகுமாரி’ எனத் தாயாரின் பெயரைச் சூட்டவைத்திருக்கிறது. தந்தையுடன் சுமூக உறவு அற்ற அவரை மனைவியின் அன்புதான் மலரச் செய்திருக்கிறது. மனைவியை விட்டு வெகுதூரத்தில் இருக்க நேர்ந்த நாட்களில்கூட அவரை ஆற்றுப்படுத்தி அமைதிப்படுத்தும் ஆற்றல் கொண்டதாக இருந்திருக்கிறது அவருடைய அன்பு. எழுத்தாளராகப் பெரும் புகழைப் பெற்ற நேரத்தில் திரைப்பட முயற்சியில் ஈடுபட்டுப் பணமும் சம்பாதிக்க முயன்ற புதுமைப்பித்தனை அகாலத்தில் மரணம் ஆட்கொண்டுவிட்டது.

புதுமைப்பித்தனை மகத்தான எழுத்தாளராக இன்று கொண்டாடுகிறோம். ஆனால், வாழ்ந்த காலத்தில் புதுமைப்பித்தன் வாழ்வில் எதிர்கொண்ட துயரங்களைப் பக்கம்தோறும் பேசுகிறது இந்நூல். தினசரி வாழ்வை நடத்தவே திண்டாடியவர் அவர். எழுத்தைத் தொழிலாகக் கொண்ட எழுத்தாளரின் வாழ்வைக் காலமென்னும் கரையான் கொஞ்சம் கொஞ்சமாக அரிப்பதில்லை, சிறிதுகூட விட்டுவைக்காமல் மொத்தமாக அரித்துவிடுகிறது என்பதற்குச் சான்றாக அமைந்திருக்கிறது புதுமைப்பித்தனின் வாழ்க்கை.

புதுமைப்பித்தனின் எழுத்துகளை அறிந்தவர்களுக்கு அவரை அறிமுகப்படுத்தும் இந்நூல் விறுவிறுப்பாகச் செல்கிறது. சிறுகதை, நாவல் முயற்சி, மொழிபெயர்ப்புகள். கட்டுரைகள், விமர்சனங்கள் எனப் பெரிய ராஜாங்கத்தையே பதினைந்து ஆண்டுகளுக்குள் கட்டியெழுப்பியிருக்கிறார் புதுமைப்பித்தன். இப்படியொரு கலைமேதையின் வாழ்க்கை வரலாற்றை வெறும் 28 வயதில் எழுதி முடித்திருக்கிறார் தொ.மு.சி.ரகுநாதன். ‘புதுமைப்பித்தன் வரலாறு’ என்னும் இந்நூல் முதல் பதிப்பு கண்டது 1951-ல். முதலில் தமிழ்ப் புத்தகாலயம் வெளியிட்ட இந்நூலின் அடுத்தடுத்த பதிப்புகளை 1958-ல் ஸ்டார் பிரசுரமும் 1980-ல் மீனாட்சி நிலையமும் பின்னர் என்.சி.பி.எச். 1991-லும் வெளியிட்டிருக்கின்றன. கணக்குக்கு ஐந்தாவது பதிப்பான இந்நூலை, புதுமைப்பித்தன் படைப்புகளுக்குச் செம்பதிப்பை உருவாக்கியிருப்பவரும், தமிழின் குறிப்பிடத் தகுந்த வரலாற்றாய்வாளருமான ஆ.இரா. வேங்கடாசலபதியின் விரிவான முன்னுரையுடன் காலச்சுவடு பதிப்பகம் பதிப்பித்திருக்கிறது.

‘புதுமைப்பித்தனும் வாழ்க்கை வரலாற்றுக்கு ஏற்ற பொருள்’ என முன்னுரையில், புதுமைப்பித்தனின் வார்த்தைகளையொட்டிப் பதிப்பாசிரியர் சலபதி கூறியிருப்பது ரொம்பவும் பொருத்தமே. 04.03.1978 அன்று திருச்சி வானொலி நிலையத்தில் தொ.மு.சி. ரகுநாதனை சுந்தர ராமசாமி செய்த நேர்காணல் இந்நூலுக்கு முழுமையைக் கூட்டும் முனைப்பின் விளைவே. புதுமைப்பித்தனின் வாழ்க்கை வரலாற்றில் சில இடங்களில் காணப்படும் வெற்றிடங்களை இந்த நேர்காணல் நிரப்புவதால் புதுமைப்பித்தன் குறித்த முழுமையான சித்திரத்தைத் தீட்டுவதற்கு இது உதவுகிறது. இது தவிர, பின்னிணைப்பில் இந்த நூலில் பெயர் குறிப்பிடாத ஆளுமைகள் யார் யாரென்ற தகவலைத் தந்திருக்கிறார் சலபதி.

தமிழ் எழுத்தாளர்களுக்கு முறையான வரலாறு எழுதப்படாத சூழலில் ரகுநாதன் மூலம் கிடைக்கப்பெற்ற இந்த வரலாற்று நூல் சிறப்பான ஆக்கமாக இருப்பதால் இதை ‘வறண்ட சூழலில் பூத்த அத்தி’ என முன்னுரையில் சலபதி குறிப்பிடுவது மிகப் பொருத்தமே.

புதுமைப்பித்தன் நினைவு தினம் ஜூன் 30

புதுமைப்பித்தன் வரலாறு

தொ.மு.சி.ரகுநாதன்

பதிப்பாசிரியர்: ஆ.இரா. வேங்கடாசலபதி

விலை: ரூ. 250

காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்.,

669, கே.பி.சாலை, நாகர்கோவில் - 629001

தொலைபேசி: 04652278525

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in