தொடுகறி: என்.பி.டி.யுடன் இணைந்து ஒரு புத்தகத் திருவிழா!

தொடுகறி: என்.பி.டி.யுடன் இணைந்து ஒரு புத்தகத் திருவிழா!
Updated on
2 min read

என்.பி.டி.யுடன் இணைந்து ஒரு புத்தகத் திருவிழா!

புத்தகக் காட்சியில் ‘நேஷனல் புக் ட்ரஸ்ட்’ (என்.பி.டி) கலந்துகொள்ளாதது பலருக்கும் ஏமாற்றத்தை அளித்தது. வருந்த வேண்டாம்! என்.பி.டி.யும் பெரம்பலூர் மக்கள் பண்பாட்டு மன்றமும் இணைந்து நடத்தும் புத்தகத் திருவிழா, பெரம்பலூரில் நேற்று தொடங்கியிருக்கிறது. பெரம்பலூரின் புதிய பேருந்து நிலையத்துக்கு அருகில் உள்ள நகராட்சித் திடலில் நடக்கும் இந்தப் புத்தகக் காட்சி பிப்ரவரி 5 வரை நடக்கவிருக்கிறது. இது பெரம்பலூரில் நடக்கும் 6-வது புத்தகக் காட்சி. புத்தகங்கள் மட்டுமல்ல விரிவான நிகழ்ச்சிகள் பலவும் உண்டு! பெரம்பலூர்வாசிகளும் சுற்றுவட்டாரத்தினரும் தவறவிட வேண்டாம்!

ஜெய்பூர் செல்ஃபி இது!

உலகின் மிக முக்கியமான இலக்கியத் திருவிழாக்களில் ஜெய்பூர் இலக்கியத் திருவிழாவும் ஒன்று. இலக்கியவாதிகள் மட்டுமல்லா மல் கலைத் துறை உள்ளிட்ட பிற துறைகளிலிருந்தும் பல்வேறு ஆளுமைகள், சிந்தனையாளர்கள் கலந்துகொள்ளும் இந்தத் திருவிழா கடந்த 19-ம் தேதி தொடங்கி 23-ம் தேதியன்று நிறைவுற்றது. தமிழ்நாட்டி லிருந்து எழுத்தாளர்கள் பெருமாள் முருகன், இமையம், பதிப்பாளர் கண்ணன், மொழிபெயர்ப்பாளர் சுப கிருஷ்ணசுவாமி, சுதா சதானந்த் (எடிட்டர், வெஸ்ட்லாண்ட்) ஆகியோர் கலந்துகொண்டார்கள். ஜெய்பூரிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட செல்ஃபி இங்கே!

மெரினா புரட்சி பதிவாகுமா?

முன்பெல்லாம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சம்பவம் ஒன்று நடந்தால் நவீனத் தமிழிலக்கியத்தில் அது பதிவாவது அரிதே. சுதந்திரப் போராட்டமே ஒருசில நாவல்களில் இடம்பிடிக்கப் பல பத்தாண்டுகள் காத்திருந்தது. இப்போது அப்படியில்லை. ‘பணமதிப்பு நீக்கம்’ பற்றி நாவல் வந்துவிட்டது. அடுத்து, ‘மெரினா புரட்சி’ நிகழ்ந்திருக்கிறதல்லவா! சூடு தணிவதற்குள்ளே இந்தப் புரட்சியையும் அதைத் தொடர்ந்த கலவரங்களையும் பதிவுசெய்ய வேண்டும் என்ற குரல்கள் எழுத்தாளர்களிடையே எழுந்துள்ளன. தமிழ் எழுத்தாளர்களின் வேகத்துக்கு ஒருசில வாரங்களில் ‘மெரினா புரட்சி’ பற்றி ஓரிரு நாவல்களையோ கவிதைத் தொகுப்புகளையோ எதிர்பார்க்கலாம்தானே!

ஆபரேஷன் வீரப்பன், புத்தகமாக!

சந்தனக் கடத்தல் வீரப்பன் தேடுதல் வேட்டை, அவரைச் சுட்டுக்கொன்றது போன்ற வற்றைப் பற்றித் தமிழகச் சிறப்பு அதிரடிப் படை யின் முன்னாள் தலைவர் விஜயகுமார் எழுதிய ‘வீரப்பன்: சேஸிங் த பிரிகண்ட்’ என்ற புத்தகம் தற்போது வெளியாகியிருக்கிறது. தமிழகம், கர்நாடகம், கேரளம் ஆகிய 3 மாநில போலீஸாருக்கு 20 ஆண்டுகளாக சிம்மசொப்பனமாக இருந்த வீரப்பனை, 2004-ல் ‘ஆபரேஷன் பட்டுக்கூடு’ என்ற பெயரில் நடத்திய தேடுதல் வேட்டையில் சுட்டுக்கொன்றனர் போலீஸார். இதில் வீரப்பனைச் சுட்டுக்கொன்றது பற்றி மட்டுமின்றி, அவரது வாழ்வில் நிகழ்ந்த முக்கிய சம்பவங்கள், கன்னட நடிகர் ராஜ்குமாரை கடத்தி 108 நாள் பணய கைதியாக வைத்திருந்தது போன்றவை பற்றியும் விஜயகுமார் எழுதியிருக்கிறாராம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in