Published : 25 Feb 2017 10:14 AM
Last Updated : 25 Feb 2017 10:14 AM

ஆவணப்படுத்துவதில் நமக்கு ஏன் அக்கறை இல்லை?

ஒரு சமூகத்தின் மிகச் சிறந்த ஆவணக் காப்பகம் நூலகம்தான். நூலகம் பல தலைவர்களை உருவாக்கியிருக்கிறது. குற்றவாளிகளைச் சீர்திருத்தியிருக்கிறது. விஞ்ஞானிகளைப் பட்டை தீட்டியிருக்கிறது. அறிவுச் சுரங்கமாக இருப்பதோடு, வரலாற்றை ஆவணப்படுத்தும் இடமாகவும் நூலகங்கள் இருந்துவந்திருக்கின்றன. தமிழ்நாட்டில் அத்தகைய‌ நூலகங்களின் நிலை இன்று பரிதாபத்திற்குரியது.

இந்தியாவைப் பொறுத்தவரை, சென்னையில் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்தது கன்னிமரா நூலகம். நாட்டில் உள்ள நான்கு 'தேசியக் களஞ்சிய நூலக’ங்களில் இதுவும் ஒன்று. இந்தியாவில் பதிப்பிக்கப்படும் நாளிதழ்கள், மாத, வார இதழ்கள், புத்தகங்கள் ஆகியவற்றின் ஒரு பிரதியை வாங்கி ஆவணப்படுத்த வேண்டிய பொறுப்பு இந்த நூலகத்துக்கு உண்டு. ஆனால், அந்த நூலகம் அந்தப் பொறுப்பைச் சரிவரச் செய்கிறதா? பதில் எதிர்மறையாகத்தான் இருக்கிறது. உதாரணத்துக்கு, 1967-ம் ஆண்டு முதல் 2001 வரை, தமிழிலும் வெளியான பத்திரிகை ‘யுனெஸ்கோ கூரியர்’. இந்தத் தமிழ் இதழை, கன்னிமரா நூலகத்தில் தேடினால் கிடைப்பதில்லை.

இன்று இந்தியாவில் பதிப்பிக்கப்படும் புதிய‌ புத்தகங்களில் எத்தனை புத்தகங்கள் இந்த நூலகத்தில் இருக்கின்றன என்பதும் சந்தேகத்துக்குரியது. கூடவே, பதிப்பகங்கள், நூலாசிரியர்கள், இதழ்களும் கூட தங்கள் புத்தகங்கள், இதழ்களின் பிரதிகளை நான்கு தேசியக் களஞ்சிய நூலகங்களுக்கும் அனுப்புவதில் ஆர்வம் காட்டுவதில்லை.

எந்த இதழ்களை வாங்குவது, எந்தப் புத்தகத்தை வாங்காமல் இருப்பது என்பதெல்லாம் நூலகத்தின் நிர்வாக முடிவு என்று ஒரு பேச்சுக்கு வைத்துக் கொண்டாலும்கூட, தற்போது நூலகங்களிலுள்ள இதர ஆவணங்களாவது பத்திரமாகப் பராமரிக்கப்படுகின்றனவா என்றால் அதுவும் சந்தேகம்தான். ஒட்டடை பிடித்த கூரைகள், போதிய வெளிச்சமில்லாத அறைகள், தூசி படிந்த மேஜைகள், மழையில் நனைந்து நைந்துபோன புத்தகங்கள் என்று மிகவும் பரிதாபத்துக்குரிய நிலையில் உள்ளன பல நூலகங்கள்.

நூலகத்தின் நிலை இப்படி என்றால், தமிழ்நாடு மாநில ஆவணக் காப்பகத்தின் நிலை இன்னும் மோசம். அந்தக் காப்பகத்தின் வராந்தாவில், வீடுகளில் துணி உலர்த்துவதற்கான கயிறு கட்டப்பட்டிருப்பது போல, கயிறுகள் கட்டப்பட்டிருக்கும். அதிர்ச்சியடையக் கூடாது. மழைக்காலங்களில் ஆவணங்கள் நனைந்துவிட்டால், அவற்றை உலர்த்துவதற்குத்தான் இந்தக் கயிறுகளாம்!

நிதிப் பற்றாக்குறை, ஆள் பற்றாக்குறை, இடப் பற்றாக்குறை என நூலக, ஆவணக் காப்பக‌ நிர்வாகிகள் என்று காரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். அவற்றையெல்லாம் கடந்து, தீர்வுகளைத் தேடுவதுதான் அழகு. புத்தகங்களைச் சேகரிப்பது ஒவ்வொருவரின் விருப்பம். ஆனால் ஆவணப்படுத்துதல் என்பது அடிப்படையில் அரசின் கடமை அல்லவா!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x