

ஆகாயத்தைப்
போர்த்திக்கொண்டு பாடு லல்லா.
ஆடு, லல்லா, காற்றைத் தவிர
எதையும் உடுத்தாமல் ஆடு.
பாடு லல்லா
ஆகாயத்தைப் போர்த்திக்கொண்டு.
இந்த ஒளிரும் நாளைப் பார்!
இதைவிட அழகான, புனிதமான
ஆடைகள் இருக்குமா என்ன?
இந்தக் கவிதையை எழுதிய லல்லேஸ்வரி 14ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். காஷ்மீரின் குறிப்பிடத்தகுந்த பக்திக் கவிஞரில் ஒருவர். இவரது படைப்புகள் காஷ்மீர சூஃபி இலக்கியத்தின் முன்னோடியாகக் கருதப்படுகிறது. லல்லாவின் கவிதைகளின் மூலமாக வெளிப்படும் லல்லாவின் பிம்பம், ஆண்டாள், மீரா போன்றவர்களை ஒத்திருந்தாலும் லல்லா தனக்கென ஒரு பிரத்யேகமான உலகையும் கவிதையின் வழியாகவே கட்டமைத்திருக்கிறார்.
வாழ்நாளில் பெரும்பகுதியைத் தனிமையிலும் தேசாந்திரியாகவும் கழித்தவர் லல்லா. 12 வயதில் திருமணமான லல்லா, பிறகு கணவராலும் மாமியாராலும் துன்புறுத்தலுக்கு ஆளாகி ஒரு கட்டத்தில் வீட்டை விட்டு வெளியேறிச் சித்த ஸ்ரீகாந்த என்கிற சைவ ஞானியிடம் சிஷ்யையாகச் சேர்ந்தார். குருகுல வாசம் முடிந்த பிறகு அங்கிருந்து வெளியேறி, உலகை எதிர்கொண்டபோது சந்தித்த அவமானங்களை லல்லா தனது கவிதைகளில் பதிவுசெய்கிறார்.
அவர்கள் என் மீது அவமானங்களைச் சவுக்கடிகளாக வீசுகிறார்கள்.
சாபங்களால் எனக்குக் கீதம் இசைக்கிறார்கள்.
அவர்களது குரைப்புகளால் எனக்கு நேரப்போவது ஒன்றும் இல்லை.
ஆன்ம மலர்களை எனக்கு அர்ப்பணிக்க வந்தாலும்,
எனக்கு முக்கியமில்லை.
நான் கடந்து செல்கிறேன், எதுவும் படாமல்.
இதே தொனியில் லல்லாவின் வேறொரு கவிதை இது:
அவர்கள் என் மீது புழுதி வாரித் தூற்றட்டும்,
அல்லது எனக்கு அறிவுரை சொல்லட்டும்.
அவர்களது விருப்பப்படி என்னை அழைக்கட்டும்
எனக்குப் பக்தியின் அலைகளைப் பரிசளிக்கட்டும்.
நான் சலனப்படவில்லை.
அதனால் அவர்களுக்கு என்ன பயன்?
பக்தி மார்க்கத்தில் வந்த பிற பெண் கவிஞர்கள் போலவே லல்லாவின் கவிதைகளிலும் லல்லா கடவுளைக் காதலனாக ஏற்றுக்கொண்டு அவனை அடைவதையே லட்சியமாக வெளிப்படுத்துகிறார். கடவுளை நோக்கிய தனது பயணத்தில் ஆடைகளின் குறுக்கீடும் தேவையில்லை என்றே லல்லா ஆகாயத்தைப் போர்த்திக்கொள்கிறார். கடவுளின் பெருமையைப் பாடியபடி நிர்வாணமாக வீதி வீதியாக அலைந்து கொண்டிருக்கிறார் லல்லா. உடல் பற்றிய லல்லாவின் பார்வையும் தீவிரமானது. ஆடைகளைத் துறப்பது பற்றி ஒரு கவிதையில் இப்படிச் சொல்கிறார் லல்லா:
எனது தலைவன் ஒரேயொரு நிபந்தனை விதித்தான்.
புறம் மற. அகம் செல் என்றான் அவன்.
நான், லல்லா, அதை என் இதயத்தில் நிறுத்திக்கொண்டேன்.
அப்போதிலிருந்து நிர்வாணமாக நடனமாடுகிறேன்.
பக்தி பற்றிய மரபான சில சிந்தனைகளை லல்லாவின் கவிதைகள் எளிதில் புறந்தள்ளுகின்றன.
ஒரு வெள்ளத்திற்கு அணைகட்ட,
ஒரு காட்டுத்தீயை நிறுத்த,
காற்றில் நடக்க,
மரப்பசுவில் பால் கறக்க,
இதை எந்த வித்தைக்காரனும் செய்வான்
என்று சொல்லும் லல்லா, இன்னொரு கவிதையில் பட்டினி கிடந்து உடலைத் துன்புறுத்துவது இறைவனுக்கு உகந்ததல்ல என்றும் சொல்கிறார்.
லல்லாவின் கவிதைகள் சமீபத்தில்தான் ஆங்கில மொழிபெயர்ப்பில் புத்தக வடிவம் பெற்றன. ரஞ்சித் ஹோஸ்கோடேவின் மொழிபெயர்ப்பில் ‘ஐ லல்லா’ என்கிற தலைப்பில் பெங்குயின் வெளியீடாக சமீபத்தில் வெளியிடப்பட்டன. காஷ்மீரி மொழியில் லல்லா என்றால் பிரியத்துக்குரியவள் என்று பொருள். காஷ்மீரில் இந்து முஸ்லிம் இரு மதத்தினருக்கும் பிரியமான ஒரு பெண்ணாகவே லல்லா இப்போதும் இருக்கிறார்.
காற்றையும் ஆகாயத்தையும் போர்த்திக்கொண்ட லல்லாவின் பாடல் இப்போதும் இசைத்துக்கொண்டுதானிருக்கிறது.