விடு பூக்கள்: பேராசிரியர் பூரணச்சந்திரனுக்கு சாகித்ய அகாடமி விருது

விடு பூக்கள்: பேராசிரியர் பூரணச்சந்திரனுக்கு சாகித்ய அகாடமி விருது
Updated on
2 min read

தமிழ் எழுத்தாளர் வண்ணதாசனுக்கான சாகித்ய அகாடமி விருது சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட அதேநேரம், தமிழ் மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த தமிழ் மொழிபெயர்ப்புக்கான (2016) சாகித்ய அகாடமி விருது பேராசிரியர் க. பூரணச்சந்திரனுக்கு வழங் கப்படுகிறது. மனு ஜோசப் ஆங்கிலத்தில் எழுதிய Serious Men என்னும் புகழ் பெற்ற நாவலை ‘பொறுப்புமிக்க மனிதர்கள்’ என்ற பெயரில் தமிழில் அவர் மொழி பெயர்த்திருந்தார். ‘எதிர் வெளியீடு’ வெளியிட்ட இந்த நூலே விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. விருதில் ரூ. 50,000 ரொக்கமும் செப்புப் பட்டயமும் அடங்கும்.

திருச்சியைச் சேர்ந்த தமிழ்ப் பேராசிரி யரான க.பூரணச்சந்திரன், இலக்கிய விமர்சனத் துறையில் நீண்ட காலமாக இயங்கிவருபவர். பணி ஓய்வுக்குப் பிறகு மொழிபெயர்ப்புப் பணிகளில் தீவிர மாக ஈடுபட்டுவருகிறார். இலக்கியக் கோட் பாடுகள், இதழியல் உள்ளிட்ட துறை களைச் சார்ந்து நேரடியாகப் பதினைந்து நூல்களை எழுதியுள்ளார். அருந்ததி ராயின் ‘நொறுங்கிய குடியரசு’, தனி நாயகம் அடிகளின் 'நில அமைப்பும் தமிழ்க் கவி தையும்', ஆக்ஸ்போர்டு பதிப்பகத்தின் மிகச் சுருக் கமான அறிமுக நூல்கள் உள்ளிட்ட முப்பத்தைந் துக்கும் மேற்பட்ட நூல் களை மொழிபெயர்த்துள் ளார்.

ஆந்திரக் கவிஞர் வரவர ராவின் ‘சிறைப்பட்ட கற்பனை’, வெண்டி டோனிகரின் ‘இந்துக் கள் ஒரு மாற்று வரலாறு’ ஆகியவற்றின் மொழிபெயர்ப்புக்காக இரண்டு முறை ஆனந்த விகடன் விருதையும் சல்மான் ருஷ்தீயின் புகழ்பெற்ற நூலான ‘நள்ளிரவின் குழந்தைகள்’ மொழி பெயர்ப்புக்காக சின்னப்ப பாரதி இலக்கிய அமைப்பு விருதையும் ஏற்கெனவே அவர் பெற்றுள்ளார். விருதுபெறும் பேரா சிரியருக்கு வாழ்த்துகள்.

ஆதி

சுகுமாரன் 60: கருத்தரங்கம்

தமிழ் இலக்கிய உலகில் 30 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து இயங்கிவருபவர் கவிஞர் சுகுமாரன். 1957-ல் கோயம்புத்தூரில் பிறந்தவர். குங்குமம், குமுதம் போன்ற இதழ்களில் பணியாற்றிய அனுபவம் கொண்ட சுகுமாரன் தற்போது ‘காலச்சுவடு’ இதழின் பொறுப்பாசிரியராக உள்ளார். இவரது ‘கோடைக்காலக் குறிப்புகள்’ கவிதைத் தொகுப்பு பெரிதும் வரவேற்பைப் பெற்றது. ‘வெல்லிங்டன்’ என்னும் நாவலையும் படைத்திருக்கிறார். வைக்கம் முகம்மது பஷீர், சச்சிதானந்தன், அடூர் கோபாலகிருஷ்ணன், சக்கரியா போன்ற மலையாள இலக்கிய ஆளுமைகளின் படைப்புகளைத் தமிழாக்கம் செய்துள்ளார். ‘அஸீஸ் பே சம்பவம்’, ‘தனிமையின் நூறு ஆண்டுகள்’, ‘பட்டு’ ஆகியவை குறிப்பிடத்தக்க மொழிபெயர்ப்புகள்.

இவருக்கு அறுபது வயதானதை ஒட்டி, இவரது கலை இலக்கியப் பங்களிப் பைக் கவுரவப்படுத்தும் வகையில் ஆத்மா நாம் அறக்கட்டளை ஒருநாள் கருத்தரங்கை நடத்த இருக்கிறது. இந்தக் கருத்தரங்கில் சுகுமாரனின் எழுத்துகள் பற்றிய அலசல் களும் விவாதங்களும் நடக்கவிருக்கின்றன. சென்னையில் வரும் மார்ச் 18 அன்று எழும்பூர் இக்சா மையத்தில் இந்த ஒருநாள் கருத்தரங்கம் நடைபெறுகிறது.

எழுத்தாளர்கள் வாழும்போதே அவர் களை அங்கீகரிப்பதும் கவுரவிப்பதும் தமிழ்ச் சூழலில் அண்மைக் காலம் வரை அரிதாகவே இருந்துவந்தன. சுந்தர ராமசாமி, அசோகமித்திரன் ஆகி யோருக்கு 60 வயது நிறைந்தபோது சுப்ரபாரதிமணியனின் ‘கனவு’ சிற்றிதழ் அவர்களுக்கான சிறப்பிதழ்களை வெளி யிட்டது. இதைத் தவிர எழுத்தாளர்கள் வாழ்நாளிலேயே அவர்களைக் கவுரவிக்கும் நிகழ்வுகள் தமிழில் குறைவாகவே இருந்துவந்தது. இந்தப் பின்னணியில் பார்க்கும்போது ஒரு படைப்பாளியை அங்கீகரிக்கும் விதத்தில் அவரது படைப்புகளை மையமாகக் கொண்டு கருத்தரங்கம் நடத்துவது ஆரோக்கியமான மாற்றம் என்று சொல்லலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in