மதமல்ல, மார்க்கம்!

மதமல்ல, மார்க்கம்!

Published on

எழுத்தாளர் களந்தை பீர்முகம்மது, இஸ்லாமியரின் அரசியல், சமூகப் பிரச்சினைகளையும் அவர்களது கலை இலக்கிய படைப்புகளையும் பற்றிக் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் பல்வகைப்பட்ட இதழ்களில் எழுதிய 38 கட்டுரைகளின் தொகுப்பு. இந்தக் கால் நூற்றாண்டு காலமானது பாபர் மசூதி இடிப்பு, குஜராத் கலவரங்கள், கோவை குண்டுவெடிப்பு என்று இஸ்லாமியர் தொடர்ந்து அச்சுறுத்தல்களைச் சந்தித்த காலம் என்பதால் இந்தக் கட்டுரைகள் கூடுதல் முக்கியத்துவம் பெறுகின்றன.

பாபர் மசூதி பிரச்சினையில், சமரசத் திட்டங்களின் பின்னால் இருக்கும் காரணங்களை விளக்கிக் கூறும் பீர்முகம்மது, இஸ்லாமியரை உணர்ச்சிவசப்பட்ட நிலையில் வழிநடத்தும் நாடு தழுவிய அளவில் அரசியல் தலைமை அமையாமல் போனதை சமய நல்லிணக்கத்துக்கான நல்வாய்ப்பாகக் காண்கிறார்.

கல்வியறிவின்மையால் இட ஒதுக்கீடு வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொள்ள முடியாத நிலை, வறுமையும் விழிப்புணர்வற்ற நிலையும் குடும்பக் கட்டுப்பாட்டுக்கு எதிரான காரணமாய் அமைந்திருப்பது, மணவிலக்கு நடைமுறைகளில் பெண்களிடம் பேதம் காட்டும் போபால் பிரகடனம், பெண்களுக்கு வேலைவாய்ப்பு உரிமைகள் மறுக்கப்படுவது என்று பல விஷயங்களைப் பற்றி இந்நூலில் உள்ள கட்டுரைகள் பேசுகின்றன. குறிப்பாக கருத்தியல்ரீதியாக முரண்பட்டு மோதிக்கொள்ளும் அனைத்து மதங்களுமே பெண்களை அடிமைப்படுத்துவதில் ஓரணியில் நிற்கின்றன என்று பீர்முகம்மது சுட்டிக்காட்டுகிறார். அதே நேரத்தில் தமிழகத்தைப் பொறுத்தவரையில் 80-களில் உருவான நஜாத் இயக்கம் பெண்களை வழிபாட்டில் பங்கேற்க வைத்தது, தமிழ் முஸ்லிம்களின் முற்போக்கான முடிவு என்று வரவேற்கிறார்.

இஸ்லாமியம் மதமல்ல, மார்க்கமே என்று வலியுறுத்தும் களந்தை பீர்முகம்மது மார்க்க நெறிமுறைகளைக் காட்டிலும் அதற்கான காரணங்களின் அடிப்படையிலேயே நடைமுறை வாழ்க்கையின் சிக்கல்களுக்கு தீர்வு காண வேண்டும் என்று வேண்டுகிறார். உள்முரண்களை சுட்டவும் அவர் தயங்கவில்லை. வெளிநாட்டுப் பணியாளர்கள் அரபு மண்ணில் உழைப்புச் சுரண்டலுக்கு ஆளாவதையும் அவர் கவனப்படுத்துகிறார்.

பிரசங்கம் செய்யும் ஆலிம்கள் தமிழைக் கற்றுகொள்வதில் ஆர்வம் காட்ட வேண்டும், தமிழில் பேச்சாற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பது பீர்முகம்மதுவின் வேண்டுகோள். ஆலிம்களால் தமிழில் நல்லதொரு கவியரங்கை நடத்த முடிகிறபோது அதைக் கண்டு மகிழ்கிறார், அவர்களைப் புகழ்கிறார். தமிழ் முஸ்லிம்களின் படைப்பு முயற்சிகளில் பல, இலக்கியத்தின் நோக்கத்திலிருந்து விலகி நிற்பதற்காக வருந்தி, போதனை மட்டும் இலக்கியமாகிவிடாது என்று மீண்டும் மீண்டும் அவர் வலியுறுத்துகிறார். சூஃபியிசத்தின் வரலாற்றுப் பங்களிப்பை விவரித்து, அது அந்தந்த மண்ணுக்கான இஸ்லாமிய நடைமுறைகளுக்கு வழிகாட்டியதை நினைவுகூர்ந்து சூஃபியிசம் இஸ்லாத்துக்கு எதிரானதல்ல என்பதை உணர்த்துகிறார்.

இக்கட்டுரைகள் சிறுபான்மையினராக இருக்கும் முஸ்லிம்கள் சமூகரீதியில் சமய நல்லிணக்கத்தையும் அரசியல்ரீதியில் மதச்சார்பின்மையை முன்னிறுத்தும் அமைப்புகளோடு நல்லுறவையும் கடைப்பிடிக்க வேண்டுமென்ற அழுத்தமான அறிவுறுத்தலை ஆழ்ந்த அக்கறையுடன் கனிவான குரலில் கூறுகின்றன. உணர்ச்சிக் கொந்தளிப்பான நிலையில் முஸ்லிம் சமூகம் இருந்தால், அதன் விளைவு விரும்பத்தகாதவாறு அமைந்துவிடக்கூடும் என்ற பீர்முகம்மதுவின் கணிப்பு, தற்போதைய தமிழகச் சூழலுக்கு மிகவும் பொருத்தம்.

பாதுகாக்கப்பட்ட துயரம்

முஸ்லிம் சமூகம் பற்றிய கட்டுரைகள்

களந்தை பீர்முகம்மது

விலை: ரூ.190

காலச்சுவடு பதிப்பகம்,

நாகர்கோவில்- 629001.

9677778863

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in