Last Updated : 21 Dec, 2013 12:00 AM

 

Published : 21 Dec 2013 12:00 AM
Last Updated : 21 Dec 2013 12:00 AM

காமிக்ஸ் மீதான காதல்தான் இயங்கவைக்கிறது! - எஸ். விஜயன் சிறப்புப் பேட்டி

தமிழ் காமிக்ஸ் உலகில் லயன் காமிக்ஸ் நிறுவனத்தின் பங்களிப்பு மிகப் பெரியது. லயன் மற்றும் முத்து காமிக்ஸ் ஆசிரியர் எஸ். விஜயனுடனான சந்திப்பு காமிக்ஸ் உலகத்தின் தெரியவராத தொழில்முகத்தைக் காட்டுகிறது.

தமிழில் காமிக்ஸ் வெளிவந்த சூழல் பற்றிச் சொல்லுங்கள்?

ஐம்பதுகளில் சந்தமாமா குழுமத்திலிருந்து ஃபால்கன் என்ற பெயரில் காமிக்ஸ் வெளிவரத் தொடங்கியது. 60கள் வரை அது தொடர்ந்தது. அப்போது சந்தமாமாவில் எனது தந்தை சவுந்தர பாண்டியன் அப்ரெண்டி்சாகப் பணிபுரிந்தார். பத்தாண்டுகளுக்குப் பின்னர், லண்டனுக்கு சென்று ஃப்ளீட்வே பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்திடம் உரிமம் வாங்கி இரும்புக்கை மாயாவியைத் தமிழில் கொண்டு வந்தார். 1972இல் அது வெளிவந்தது. நல்ல வரவேற்பும் இருந்தது. முத்து காமிக்ஸின் அடையாளமாக இரும்புக்கை மாயாவி கதைகள் மாறின.

தமிழில் அந்தப் பெயரை வைத்தது யார்? ஏனெனில் மொழிபெயர்ப்பின் மூலம் வைக்கப்பட்ட அந்தப் பெயர் பலர் நினைவில் நீங்காத இடம் பிடித்தது...

அதன் ஆங்கிலப்பெயர் Steel Claw. மின்சாரக் கம்பியைத் தொட்டால் மாயமாக மறைந்து அதன் மூலம் சாகசத்தில் ஈடுபடும் நாயகன் அவன். ‘இரும்புக்கை மாயாவி’ என்ற பெயரை என் தந்தைதான் வைத்தார். அதே போல், ‘Phanthom' என்ற பாத்திரத்துக்கு தமிழில் ‘வேதாளம்’ என்று தந்தை பெயர் வைத்தார். இரும்புக்கையுடன் ஒரு படத்தை அட்டையில் போட்டால் அது விற்றுவிடும் எனும் அளவுக்கு அப்போது ஒரு நிலை இருந்தது.

தென்னிந்தியாவின் ஒரு மூலையில் தங்கள் நாட்டு கதாபாத்திரங்களுக்கு இத்தனை வரவேற்பு இருக்கிறது என்பதை பிரான்ஸ், இத்தாலி போன்ற நாடுகளின் காமிக்ஸ் வட்டம் அறிந்திருக்கிறதா?

சமீபத்தில், ஒரு சம்பவம் நடந்தது. வெளியாகவிருக்கும் காமிக்ஸ் பற்றி பேஸ்புக்கில் நாங்கள் தந்திருந்த தகவலைப் படித்துவிட்டு, இத்தாலி நாட்டு காமிக்ஸ் ரசிகர்கள், தமிழில் வெளியாகும் காமிக்ஸ்கள் வேண்டும் என்று ஆர்டர் கொடுத்திருக்கின்றனர். இந்தியா மாதிரியான ஒரு நாட்டில் ஏதோ ஒரு மூலையில் இத்தனை புத்தகங்கள் விற்பனையாவது குறித்து அவர்களுக்குப் பெருமை. எண்ணிக்கையில் பெரிய அளவில் இல்லாவிட்டாலும் இத்தனை ஆர்வமான காமிக்ஸ் ரசிகர்கள் இருப்பதில் அவர்களுக்கு மகிழ்ச்சி. மிகவும் பிரபலமான காமிக்ஸ் கதைகளைத்தான் நாங்கள் இங்கு வெளியிடுகிறோம். அவற்றுக்கான உரிமம் வாங்குவது என்பதெல்லாம் சாதாரணமான விஷயம் இல்லை. இங்குள்ள வாசகர்களின் வரவேற்பைப் புரிந்துகொண்டுதான் அவர்கள் உரிமம் தருகின்றனர். தங்கள் நாட்டு காமிக்ஸ் கதை பிறமொழியில் வந்திருப்பதை வாங்கிப் பார்ப்பதில் அவர்களுக்கு ஒரு ஆர்வம். இன்னொரு விஷயம், ஒரு காலத்தில் இரண்டு ரூபாய்க்கு வெளியான டயபாலிக் என்ற காமிக்ஸை இப்போது 20 ஆயிரம் ரூபாயிலிருந்து 80 ஆயிரம் ரூபாய் வரை விலை கொடுத்து வாங்க ஆட்கள் தயாராக இருக்கின்றனர்.

சாகசம் என்பதைத் தாண்டி பிற நாட்டு நிலவியல் அமைப்பு, உளவுத்துறை போன்ற நிறுவனங்களின் செயல்பாடு என்று பல விஷயங்களைப் பேசும் காமிக்ஸ் சிறுவர்களுக்கான கதை வடிவம் என்றே இங்கு பார்க்கப்படுகிறதே?

கதையைப் படங்களாகச் சொல்வது தான் காமிக்ஸ். சிறுவர்களுக்கானது பெரியவர்களுக்கானது என்பதெல்லாம் நாமாக ஏற்படுத்திக்கொள்ளும் உட்பிரிவுகள் தான். ரத்தப்படலம் என்ற கதைத் தொடரை 30 வருடங்களாக வெளியிட்டு வருகிறோம். அதன் நாயகனுக்குத் தன் பெயரே மறந்துபோய்விடும். தான் யார் என்பதைத் தேடி அவன் அலைவதுதான் கதை. இதை சிறுவர்களுக்கான கதை என்ற பிரிவில் அடக்கிவிட முடியாது. அதே சமயம், சிறுவர்களின் ரசனைக்கு ஏற்ற மாதிரியான காமிக்ஸ்களையும் நாங்கள் வெளியிடுகிறோம். தூத்துக்குடி வாசகர் ஒருவர், சிறு வயதிலிருந்தே கெளபாய் காமிக்ஸ் படித்து வளர்ந்தவர். காமிக்ஸில் அவர் பார்த்த அமெரிக்காவின் கிராண்ட் கேன்யன் பகுதி எப்படி இருக்கும் என்று பார்ப்பதற்காக அங்கு சென்று போட்டோ எடுத்து எனக்கு அனுப்பினார். “நான் இங்கே வந்து நிற்க காரணம் சிறு வயதில் படித்த கெளபாய் காமிக்ஸ்தான்” என்று போன் பண்ணி சொல்கிறார். அதே சமயம், வெளிநாட்டு வாசகர்கள் ஒரே வகை காமிக்ஸைத் தான் விரும்பிப் படிப்பார்கள். நம் வாசகர்கள் வெவ்வேறு வகை காமிக்ஸ்களுக்கு வரவேற்பு தருபவர்கள். தமிழில்தான் இத்தனை காமிக்ஸ் கதைகள் வெளியாகின்றன. இந்தியாவின் பிற மொழிகளில் அவ்வாறான நிலை இல்லை. இந்தியக் கதாபாத்திரங்கள், அமர்சித்ரா கதைகள்தான் பிற மாநிலங்களில் விற்பனையாகின்றன.

காமிக்ஸ்களை ஆங்கில மூலத்திலிருந்து மொழிபெயர்க்கிறீர்களா அல்லது பிரெஞ்சு போன்ற மொழிகள் தெரிந்தவர்கள் உங்கள் குழுவில் உண்டா?

பல நேரங்களில் ஆங்கிலத்தில் அல்ல. ஸ்பானிஷ், பிரெஞ்சு, இத்தாலியன் போன்ற மொழிகளிலிருந்து தமிழுக்கு நேரடியாகவே மொழிபெயர்க்க வெளியில் உள்ள ஆட்களைப் பயன்படுத்துகிறோம். பின்னர் அந்த மொழிபெயர்ப்பை செம்மையாக்கும் பணியை நானும், எனது தந்தையின் நண்பர் கருணையானந்தம் இருவரும் செய்கிறோம். சிலர், வேற்றுமொழிகளிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்துத் தருவார்கள். பின்னர் நாங்கள் அவற்றைத் தமிழாக்கம் செய்வோம். இதை மொழிபெயர்ப்பு என்று சொல்வதை விட நம் தன்மைக்கு ஏற்ப தழுவுதல் என்று சொல்வது தான் சரியானது. இதன் கடைசி வடிவத்தை நாங்கள் இருவரும் செய்தால்தான் எங்களுக்கு திருப்தி. இப்போது, குறிப்பிட்ட காலத்துக்குள் புத்தகத்தை சந்தைக்குக் கொண்டுவரவேண்டும் என்ற கட்டாயம் இருக்கிறது. அப்படியான ஒரு சூழலில் நான் எனது வேலை நேரத்தை அதிகரித்து அதன் இறுதிவடிவத்தை செய்வேன். வேறு ஆட்கள் செய்தால் வாசகர்கள் கண்டுபிடித்துவிடுவார்கள்.

மொழிமாற்றம் செய்யப்பட்ட வாசகங்களை காமிக்ஸ் குமிழ்களில் அடைப்பது சவாலான விஷயமாக இருக்கும். அதுகுறித்து சொல்லுங்கள்..

சில ஆங்கில வார்த்தைகளைத் தமிழில் ஒரே வார்த்தையில் சொல்லிவிட முடியாது. உதாரணத்துக்கு ’கொலைசெய்வீர் கனவான்களே’ என்ற ஒரு காமிக்ஸ் கதையை சமீபத்தில் வெளியிட்டோம். 19-ஆம் நூற்றாண்டில் நடக்கும் கதை அது. பிரபுக்கள், மேட்டுக்குடி மக்கள் வந்துசெல்லும் க்ரீன் மேனர் என்ற உயர்மட்ட க்ளப்பில் நடக்கும் கதை. அவர்கள் பேசுவது ‘விக்டோரியன்’ பாணி ஆங்கிலம். அதை தமிழில் மொழிமாற்றம் செய்வது அத்தனை சவாலாக இருந்தது. காமிக்ஸ் மீதான காதலும் அனுபவமும்தான் எல்லாவற்றையும் தாண்டி சிறப்பாக இயங்கவைக்கிறது.

தமிழில் டப் செய்யப்படும் ஆங்கிலப் படங்களில் உள்ளூர் வட்டார மொழி, சினிமா வசனங்கள் மற்றும் பாடல்களும் பயன்படுத்தப்படுகின்றன. காமிக்ஸ் உலகிலும் இதைக் கடைப்பிடிக்கிறீர்களா?

இல்லை. டெக்ஸ் வில்லர் முதல் பல காமிக்ஸ் பாத்திரங்கள் பேசும் பாணி தமிழ் வாசகர்கள் மனதில் பதிவாகிவிட்டது. இத்தனை வருடங்கள் அந்த மொழியை நாங்கள் கையாண்ட விதத்தில், திடீரென்று மாற்றம் இருந்தால் அது எங்களுக்கும் திருப்தியளிக்காது. வாசகர்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எனவே, நாங்கள் சமரசம் செய்வதே இல்லை.

காமிக்ஸ்களில் சில இடங்களில் ஓவியங்கள் முழுமை பெறாதது போல் இருக்கும். அவற்றை உள்ளூர் ஓவியர்கள் முழுமைப்படுத்தியிருப்பது நன்றாகத் தெரியும். இதற்கு என்ன காரணம்?

முன்பு நாங்கள் வெளியிட்ட காமிக்ஸ்களின் வடிவங்கள் இங்கே உள்ள வாசகர்களுக்கு ஏற்றவாறு அளவில் மாற்றம் செய்யப்பட்டன. பாக்கெட் சைஸ் என்ற ஒரு வடிவம் இங்கே முன்பு பிரபலமாக இருந்தது. அதற்கேற்ப மாற்றம் செய்தபோது ஓவியங்களின் அளவில் மாற்றம் செய்ய வேண்டிய கட்டாயம் இருந்தது. அப்போது இங்குள்ள ஓவியர்களை வைத்து அதை சரிசெய்வோம். எத்தனை முயன்றாலும் ஒரிஜினல் ஓவியத்துக்கும் அதன் extended வடிவத்துக்கும் வித்தியாசம் நன்றாகத் தெரியும். இப்போது அப்படியில்லை. தொழில்நுட்பம் மேம்பட்டு விட்ட இக்காலத்தில், வெளிநாட்டு காமிக்ஸ்களை அவற்றின் ஒரிஜினல் வடிவத்திலேயே இங்கேயும் தயாரிக்க முடிகிறது. அதேசமயம், சில கதைகளில் சற்று ஆபாசம் தொனிப்பதாக இருந்தால் ஒரிஜினல் பதிப்பாளர்களின் அனுமதியுடன் அவற்றை நீக்கிவிடுவோம்.

காமிக்ஸ்கள் கருப்பு வெள்ளையில் வரையப்படுகின்றனவா அல்லது வண்ணங்களில் வரையப்பட்டு கருப்பு வெள்ளைக்கு மாற்றம் செய்யப்படுகின்றனவா?

பெரும்பாலான ஐரோப்பிய காமிக்ஸ்கள் குறிப்பாக பிரெஞ்சு காமிக்ஸ்கள் வண்ணங்களில் தயாராகின்றன. இத்தாலி காமிக்ஸ்கள் முன்பு கருப்பு வெள்ளையில் தான் தயாராகின. தற்போது, வண்ணங்களில் அவர்கள் கவனம் செலுத்துகின்றனர். ஒரிஜினலாக கருப்பு வெள்ளையில் தயாரான காமிக்ஸ்கள் பின்னர் வண்ணங்களுக்கும் மாற்றப்படுகின்றன. இங்கே நாங்களே கருப்பு வெள்ளை காமிக்ஸ்களை வண்ணத்துக்கு மாற்றியிருக்கிறோம்.

சிவகாசியில் இருந்துகொண்டு இதெல்லாம் சாத்தியப்படாமால் எப்படி? எல்லாமே அங்கே கிடைக்கின்றன.

தமிழில் நேரடியாக காமிக்ஸ் தயாரிக்கும் திட்டம் உண்டா?

நம்மிடம் பல திறமைசாலிகள் உள்ளனர். காமிக்ஸ் தயாரிக்கும் அளவுக்கு திறமையான கலைஞர்களுக்கு நேரமும், நல்ல சம்பளமும் தர வேண்டும். ஆனால், அதற்கான வருவாய் இல்லை என்பதால் இப்போதைக்கு அது சாத்தியமில்லை. வெளிநாடுகளில் அதற்கான வாய்ப்புகள் நிறைய. உதாரணத்துக்கு ஒரு டெக்ஸ் வில்லர் கதை சராசரியாக 140 பக்கம், ஒரு பக்கத்துக்கு ஐந்து அல்லது ஆறு ஓவியங்கள் என்றால், அதற்குப் போதுமான அவகாசம் ஓவியர்களுக்குக் கிடைக்கிறது. ’பிரளயத்தின் பிள்ளைகள்’ என்ற கிராபிக் நாவலில் வரைந்த ஓவியர் அதற்காக எடுத்துக்கொண்ட காலம் நான்கு வருடங்கள். இத்தனை வருடங்கள் அவர் ஒரே ப்ராஜெக்டில் வேலை செய்ய முடியும் என்றால், அந்த சுதந்திரமும் நல்ல சம்பளமும் தரும் அளவுக்கு அந்த நாடுகளின் காமிக்ஸ் உலகங்கள் லாபத்துடன் செயல்படுகின்றன. இங்கே அது இல்லை.

சந்தையுலகில் தமிழ் காமிக்ஸ் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன?

இது மிகவும் சவாலான விஷயம் தான். ஏனெனில் ஒரு காலத்தில் முன்னணி பத்திரிக்கை நிறுவனங்கள் காமிக்ஸ் தயாரிப்பில் ஈடுபட்டாலும் பெரிய லாபம் இல்லை என்று ஒருகட்டத்தில் ஒதுங்கிக்கொண்டன. சிறிய அளவிலான வணிகம் என்பதால் சில பிரச்சினைகள் உள்ளன. நல்ல தரத்துடன் செய்வதால் அதற்கான விலையும் தற்போது சற்றே அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்பு 10 ரூபாய்க்கு கருப்பு வெள்ளையில் காமிக்ஸ்கள் விற்கப்பட்டன. தற்போது, 50 ரூபாய் மற்றும் 100 ரூபாய்க்கு முழுக்க வண்ணங்களில், தரமான தாளில் சிறப்பாக காமிக்ஸ்கள் மற்றும் கிராபிக் நாவல்கள் வெளியிடுகிறோம். காமிக்ஸை இன்னும் அதிக அளவில் சந்தைப்படுத்துவதில் தற்போது முனைந்திருக்கிறோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x