Published : 21 Jan 2017 10:25 AM
Last Updated : 21 Jan 2017 10:25 AM

தொடுகறி: திருப்பியளிப்பைத் தொடங்கிவைத்தவர்!

திருப்பியளிப்பைத் தொடங்கிவைத்தவர்!

ஜல்லிக்கட்டு தடையை எதிர்த்துத் தமிழக மெங்கும் போராட்டங்கள் உச்சம் பெற்றுவரும் நேரத்தில் அறிவுலகத்திலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஒரு போராட்டத்தைத் தொடங்கிவைத்திருக்கிறார் இளம் எழுத்தாளர் லட்சுமி சரவணக்குமார். கடந்த ஆண்டு தான் பெற்ற இளம் எழுத்தாளருக்கான ‘யுவ புரஸ்கார்’ விருதை சென்னை சாகித்ய அகாடமி அலுவலகத்தில் திருப்பியளித்திருக்கிறார். திருப்பியளிப்புப் போராட்டத்தை அவர் தொடங்கிவைத்திருக்கிறார், மற்றவர்கள் தொடர்வார்களா?

‘பழம்பெரும்’ தொடர்ச்சி!

என்னதான் புதுப்புது எழுத்தாளர்கள் வந்து குறுகிய காலத்தில் விற்பனையில் சக்கைப்போடு போட்டாலும் (அதாவது ஆயிரம் பிரதிகள் என்ற உச்சம்) மூத்த எழுத்தாளர்கள் இன்னும் தாங்கள்தான் ‘ராஜாக்கள்’ என்று தொடர்ந்து நிரூபித்துக்கொண்டிருக்கிறார்கள். கி.ராவின் ‘ருசியான கதைகள்', ‘கோபல்ல கிராமம்’, சிறுகதைகள் உள்ளிட்ட புத்தகங்கள் இன்னும் சீராக விற்பனையாகிக்கொண்டிருக்கின்றன. தி. ஜானகிராமன், சு.ரா., அசோகமித்திரனின் ஒட்டுமொத்தப் படைப்புகளையும் வாசகர்கள் விரும்பி வாங்கிச் செல்கிறார்கள். தஞ்சை ப்ரகாஷ், கரிச்சான் குஞ்சு, எம்.வி. வெங்கட்ராம் போன்றோர் படைப்புகளும் வாசகர்களிடம் புது ஆர்வத்தைத் தூண்டியிருக்கின்றன.

கலக்குங்க பெரியார்!

புத்தகக்காட்சியில் விற்பனையில் முதலிடம் பிடித்த ‘பெரியார் இன்றும் அன்றும்’ புத்தகத்தைத் தொடர்ந்து இன்னுமொரு பெரியார் தொகுப்பும் புத்தக உலகத்தை ஆள வருகிறது. பெரியாருடைய எழுத்துக்களின் மொத்தத் தொகுப்புதான் அது. பசு. கவுதமனின் பெருமுயற்சியில் பெரியாரின் எழுத்துக்கள் ‘நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வர வேண்டும்?’ என்ற தலைப்பில் 5 தொகுப்புகளாக என்.சி.பி.எச். வெளியீடாக வரவிருக்கின்றன. மொத்தம் 3,700 பக்கங்களுக்கு மேல் பெரிய வடிவத்தில் வெளியாகவிருக்கும் இந்தத் தொகுப்பின் விலை ரூ. 4,500. முன்வெளியீட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.2000-க்கு பிப்ரவரி 15 வரை என்.சி.பி.எச்.சின் அனைத்துக் கிளைகளிலும் பதிவுசெய்துகொள்ளலாம்.

பேலியோவுக்கு சாகித்ய விருது பார்சல்!

பேலியோ டயட் ஆர்வலர் சங்கர் இலக்கியவாதிகள் மத்தியில் ரொம்பவும் பிரபலம்! அவரைப் பின்பற்றிப் பல எழுத்தாளர்கள் எடை குறைத்து ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. எழுத்தாளர்களுக்கு இப்படிப் பெரும் சேவை செய்துவரும் அவருக்கு அடுத்த ஆண்டு சாகித்ய அகாடமி விருது வழங்கினால் என்ன என்று கொளுத்திப்போட்டிருக்கிறார் போகன் சங்கர்! விருதுகளைத் திருப்பியளிக்கும் காலகட்டத்தில் விருதுக்கு ஒருவரைப் பரிந்துரைத்திருக்கிறார் போகன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x