தொடுகறி: விருது மறுப்புக்கு விருது!

தொடுகறி: விருது மறுப்புக்கு விருது!
Updated on
1 min read

சாகித்ய அகாடமியின் ‘யுவ புரஸ்கார்’ விருதை ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான போராட்டத்தின்போது திருப்பிக் கொடுத்தவர் எழுத்தாளர் லக்‌ஷ்மி சரவணக்குமார். சாகித்ய அகாடமி விருதைத் திருப்பித் தருபவர்களுக்கு அதன் விருதுத் தொகையைவிட மூன்று மடங்கு தொகையைத் தருகிறேன் என்று அதற்கு முன்னே எழுத்தாளர் விநாயக முருகன் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தார். தான் அறிவித்தபடி விநாயக முருகன் லக்‌ஷ்மி சரவணக்குமாருக்குத் தொகையைத் தந்திருக்கிறார். அந்தத் தொகையைக் கொண்டு, தை எழுச்சி பற்றிய கட்டுரைகள், சாட்சியங்களின் தொகுப்பை லக்‌ஷ்மி சரவணக்குமார் புதிதாகத் தொடங்கிய மோக்லி பதிப்பகம் வெளியிடவிருக்கிறதாம்.

கவிதைக்கொரு திருவிழா!

எவ்வளவோ இலக்கிய நிகழ்வுகள் நடந்தாலும் எல்லாவற்றிலும் ஓரங்கட்டப்படுவது கவிதையாகத்தான் இருக்கும். ஆனால், கடந்த ஞாயிறு அன்று கோவையில் ‘சொல் புதிது, பொருள் புதிது’ என்ற தலைப்பில் கவிதையைக் கொண்டாடும் நிகழ்வொன்று நடத்தப்பட்டிருக்கிறது. கவிஞர்கள் கலாப்ரியா, சக்தி ஜோதி, முனைவர் ஜெயந்த பாலகிருஷ்ணன் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசினார்கள். கவிதைக்கும் மக்களுக்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைக்க இதுபோன்ற நிகழ்வுகள் நிறைய நடக்க வேண்டும்.

கார்டியனின் கவிதைப் பதிவுகள்

முக்கியமான நிகழ்வுகள் குறித்து கார்டியன் இதழ் அவ்வப்போது கவிஞர்களிடம் கவிதைகள் எழுதிக் கேட்டு அதை ஒரு தொடராகப் பிரசுரிக்கும் வழக்கம் கொண்டிருக்கிறது. சமீபத்தில், பருவ நிலை மாற்றத்தைப் பற்றி ஆங்கிலத்தின் முக்கியமான 20 கவிஞர்களிடம் கவிதைகளைக் கேட்டுப் பிரசுரித்தார்கள். அது மட்டுமல்லாமல் அந்தக் கவிதைகளைப் பிரபலங்களிடம் கொடுத்து வாசித்து இணையதளத்தில் பதிவேற்றினார்கள். சமீபத்தில் பணமதிப்பு நீக்கம், மெரினா புரட்சியைத் தொடர்ந்து எண்ணெய்க் கசிவு, வன்கொடுமைக் கொலைகள் என்றெல்லாம் தமிழகமும் இந்தியாவும் ஏராளமான வாய்ப்புகளை வழங்கிக்கொண்டிருக்கின்றன. இதுபோன்ற சமயங்களில் பிரபலங்களைக் கொண்டு தமிழின் முக்கியமான கவிஞர்களின் கவிதைகளை வாசிக்கச் சொல்லும் முயற்சியை தொலைக்காட்சிகள் மேற்கொள்ளலாமே!

‘பிரேக்கிங் நியூஸ்’ எழுத்தாளர்கள்

இப்போதெல்லாம் நிமிடத்துக்கு இரண்டு முறை ‘பிரேக்கிங் நியூஸ்’ என்று சொல்லிச் சொல்லித் தொலைக்காட்சிகள் பொதுமக்களுக்கு மட்டுமல்லாமல் எழுத்தாளர்களுக்கும் ‘பிரேக்கிங் நியூஸ்’ போதையை ஏற்றியிருக்கின்றன. ஃபேஸ்புக்கில் நிமிடத்துக்கு இரண்டு நிலைத் தகவல்கள் என்ற கணக்கில் அரசியல் நிலவரங்களைப் பற்றிய உடனடிச் செய்திகள், உடனடிக் கருத்துகள் என்று ஃபேஸ்புக் செய்தியாளர்களாகப் பலரும் மாறிவிட்டார்கள். ‘கருத்து சொல்வது தேவைதான்; ஆனால், இவ்வளவு கருத்துகளை நாடு தாங்காதப்பே’ என்று விழிபிதுங்க வைக்கிறார்கள். ‘அரசியலை அரசியல்வாதிகள் பார்த்துக்கொள்ளட்டும், நீங்கள் கொஞ்சம் எழுதப் போங்களேன்’ என்ற குரல்கள் ஆங்காங்கே ஒலிக்க ஆரம்பித்திருக்கின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in