

சிங் தான் கிங்
இந்தியாவில், ஆங்கில நகைச்சுவைப் புத்தகங்கள் விற்பனையில் சமீபகாலமாகப் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. ஆனால் நகைச்சுவை எழுத்துகளைப் பொறுத்தவரை குஷ்வந்த் சிங் இன்னும் வசூல் ராஜாவாகவே நீடிக்கிறார். டெல்லியில் உள்ள புத்தகக் கடைகளில் ஒரியண்ட் பதிப்பகம் வெளியிட்ட குஷ்வந்த் சிங் ஜோக் புக் தொகுப்புகளுக்கு இன்னும் வரவேற்பு இருக்கிறது. ஒவ்வொரு தொகுப்பும் குறைந்த பட்சம் டஜன் மறுபதிப்புகளைக் கண்டுள்ளன. பத்தாண்டுகளுக்கு முன்புவரை நகைச்சுவைப் புத்தகங்களுக்கு இந்தியாவில் வெகுமக்களிடம் ஆதரவு இருந்துவந்தது. ஒரு வரி நகைச்சுவைக் கதைகள் முதல் பெரிய கதைகள் வரை பேருந்துப் பயணங்களிலும் ரயில்களிலும் படிக்கப்பட்டு ரசிக்கப்பட்டன. ஆனால் தற்போது நகைச்சுவைப் புத்தகம் என்ற வகைமையே அரிதான உயிரினமாகிவரும் நிலையிலும், மரணமடைந்து இரண்டு ஆண்டுகளான பிறகும் குஷ்வந்த் சிங் எழுதிய புத்தகங்களுக்கு ஆதரவு குறையவில்லை என்பது ஆச்சரியமான விஷயம்.
கொச்சவ்வா பாவ்லோ அய்யப்பா கொய்லோ
ரஸவாதி நாவலுக்காகப் புகழ்பெற்ற பாவ்லோ கொய்லோவின் பெயர் மலையாளத் திரைப்படம் ஒன்றுக்குத் தலைப்பாகியுள்ளது. பாவ்லோ கொய்லோவின் கதைக்கும் இந்த மலையாளப் படத்துக்கும் எந்தத் தொடர்பும் கிடையாதென்றாலும், மலையாளிகளை பாவ்லோ கொய்லோ எப்படி ஈர்த்திருக்கிறார் என்பதைக் காண்பிக்கும் திரைப்படமாக இது இருக்கும் என்று நடிகை மைலா உஷா தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். தன் பெயரைக் கொண்டு வெளியிடப்பட்ட சுவரொட்டியை எழுத்தாளர் பாவ்லோ கொய்லோ உற்சாகத்துடன் ரீட்வீட் செய்துள்ளார். இது மலையாளிகளுக்கு கூடுதலான உற்சாகத்தை அளித்துள்ளது. இத்திரைப்படத்தின் இயக்குநர் சித்தார்த்த சிவா, ரஸவாதியின் கதையில் வரும் சம்பவங்களின் சில சாயல்கள் இப்படத்தில் உண்டென்று கூறியுள்ளார். இப்படத்தின் நாயகன் குஞ்சாக்கோ போபன். படம் ஓணம் அன்று வெளியிடப்படவுள்ளது.