Last Updated : 11 Feb, 2017 10:58 AM

 

Published : 11 Feb 2017 10:58 AM
Last Updated : 11 Feb 2017 10:58 AM

நல் வரவு: வரலாறும் வகுப்புவாதமும்

சிவன் சொத்து, கோவி. லெனின், விலை: ரூ.120 நக்கீரன் வெளியீடு, சென்னை: 600 014.

நடராஜரின் ஐம்பொன் சிலை உள்ளிட்ட பல கடவுள் சிலைகள் தஞ்சாவூரில் ஒரு வயலில் 1951-ல் கிடைத்தன. 1961-ல் அந்த நடராஜர் சிலை அமெரிக்காவில் இருக்கிறது என்று நிரூபித்தார் இங்கிலாந்து நாட்டு ஆய்வாளர் ஒருவர். நீண்ட சட்டப் போராட்டத்துக்குப் பிறகு 25 ஆண்டுகள் கழிந்து இது இந்தியா திரும்பியது. இது போலப் பல சிலைகள்; பல கதைகள். அவற்றை நேரில் சென்று ஆய்வு செய்து எழுதியுள்ளார் லெனின். சிவன் சொத்து குலநாசம் என்பது பழமொழி. பழங்காலக் கடவுள் சிலைகள் மக்களின் சொத்து. அவை எப்படிக் கடத்தப்படுகின்றன, சர்வதேச நாடுகளில் உள்ள கலைப்பொருள்களுக்கான வணிகத்தில் எப்படி மாட்டிக்கொள்கின்றன என்பதை விளக்குகிறது இது.

வரலாறும் வகுப்புவாதமும், பேரா. அருணன், பேரா. தஸ்தகீர்,
டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மத், விலை:ரூ.80,
இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட், சென்னை-600012, தொடர்புக்கு: 044-26624401

இன்றைக்கு வகுப்புவாதம் பெரிய சக்தியாய் தன்னைக் கூர்தீட்டிக்கொண்டு எழும் சூழலில், மிகத் தேவையான வரலாற்று உண்மைகளைச் சரியான மொழியில்,தெளிவான புள்ளிவிவரங்களோடு பதிவு செய்கிறது இந்நூல். கேள்வி-பதில் வடிவிலான கலந்துரையாடலில் பகிர்ந்துகொள்ளப்பட்ட வரலாற்று உண்மைகளை, வகுப்புவாதம் எப்போது தொடங்கியது?, திரிக்கப்பட்ட வரலாற்றைப் பாடப்புத்தகத்தில் ஏன் வைக்க வேண்டும்?, பாபர் மசூதியின் உண்மை வரலாறு என்ன?, இந்திய விடுதலைப் போராட்டத்தில் முஸ்லிம்களின் பங்கு என்ன? என்பவை உள்ளிட்ட 25 தலைப்புகளில் சிறப்பாகத் தொகுத்திருக்கிறார்கள்.

மதுரமான நகரினில் சிவபெருமான், ப்ரீத்தா ராஜா கண்ணன், விலை ரூ.225,
ஜெய்கோ பப்ளிஷிங் ஹவுஸ், மும்பை.

சிவனின் திருவிளையாடல்களை எளிமையான தமிழில் இனிமையாக வழங்கியிருக்கும் நூல். ஐராவதத்துக்குத் தந்த விமோசனம், மீனாட்சித் திருமணம், சிவதாண்டவம், வைகை நதியின் பிறப்பு, எழுகடலை அடக்கிய லீலை, நான்மாடக் கூடலான கதை, தம்பிரான் தோழருக்காக அளித்த சாட்சியம், மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் பங்கேற்ற பாங்கு, நரிகளைப் பரிகளாக்கிய லீலை என்று சிவனின் லீலா விநோதங்களை சுவாரசியமாக ஆசிரியர் எழுதியிருக்கிறார். புத்தகம் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

ஐயனார் கோயில் குதிரைவீரன், தாரமங்கலம் வளவன், விலை:ரூ.200
காவ்யா, சென்னை-600024, தொடர்புக்கு: 044-23726882

தனது பணியின் பொருட்டு இந்தியாவின் பல மாநிலங்களில் கதாசிரியர் வாழ்ந்தபோது, தன்னைப் பாதித்த நிகழ்வுகளின் நீட்சியாக எழுதிய கதைகள் இவை. இணைய இதழ்களிலும் வெகுஜன இதழ்களிலும் எழுதப்பட்ட 30 சிறுகதைகளின் தொகுப்பிது. வாசிக்கத் தொடங்கிய கணத்திலேயே சட்டென முடிந்துவிடும் குறுங்கதைகளாகவே அனைத்துக் கதைகளும் இருக்கின்றன. பெரும்பாலான கதைகள் வெறுங்கதைகளாக இல்லாமல் வாழ்வின் விழுமியத்தைப் பேசுகின்றன. கதைகளில் ஊடும் பாவுமாய் ஓடும் மனிதநேயம் வாசிப்பில் நம்மைக் கவனப்படுத்துகின்றன.

அதற்குத் தக (குறிஞ்சி மலர்-1) -தொகுப்பு: ஜெ. இராதாகிருஷ்ணன், செந்தில் பாலா,
இரா.இராகுலன், விலை:ரூ.100, நறுமுகை, செஞ்சி-604202, தொடர்புக்கு: 9486150013

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியைச் சேர்ந்த இலக்கிய ஆர்வலர்கள், பொங்கல் திருநாளில் ‘குறிஞ்சி விழா’ எனும் பெயரில் பல்வேறு பண்பாட்டு கலை நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள். அத்தோடு நில்லாமல்,தமிழகம் முழுவதுமுள்ள 40 படைப்பாளிகளின் கட்டுரை, சிறுகதை, கவிதை, நூல் அறிமுகமெனத் தொகுத்து ‘குறிஞ்சி மல’ராகவும் தந்திருக்கிறார்கள். புதுவை இரா. அன்பழகனின் அட்டை ஓவியமும், திண்டுக்கல் தமிழ்ப்பித்தன், மதியழகன் சுப்பையா, வெங்கடேசன் மாரி ஆகியோரின் கோட்டோவியங்களும் மலருக்குக் கூடுதல் மணம் சேர்க்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x