Published : 03 May 2017 10:22 AM
Last Updated : 03 May 2017 10:22 AM

திசையில்லாப் பயணம் 4: ‘ஜெய மாருதி வாசகசாலை’

1945-ல், கும்பகோணம் சாரங்க பாணி கீழச் சன்னதித் தெருக் கோடியில் ஆராவமுதுக்குச் (பெருமாளைச் சொல்கிறேன்) சொந்த மான ஒரு மண்டபம் இருந்தது. கோயிலுக் குச் சொந்தமான பல மண்டபங்கள் அந்தக் காலத்திலேயே தனியார்வசம் போய்விட்ட காரணத்தால், ‘பெருமா ளுக்கு இன்னும் சொந்தமாக இருந்த மண் டபம்’ என்று சொல்ல வேண்டியிருக்கிறது. அப்போது இருந்த கோயில் நிர்வாகி படித்தவராக இருந்திருக்க வேண்டும். அந்த மண்டபத்தில் ஒரு வாசக சாலை நடத்த அனுமதித்திருந்தார்.

அந்தக் காலத்து தினசரிகள், வார, மாதப் பத்திரிகைகள் அனைத்தும் வரும். நிறையப் பேர் படிக்க வருவார்கள். சுதந்திரப் போராட்டக் காலம் அது. அந்த வாசக சாலையை நடத்துவதில் கி.ரா.கோபாலன் என்பவர் முக்கியப் பொறுப்பில் இருந்தார்.

கி.ரா.கோபாலன் இளம்வயதிலேயே மறைந்த ஒரு நல்ல எழுத்தாளர். ‘கல்கி’ இதழ் ஆரம்பித்த புதிதில் நடத் திய சிறுகதைப் போட்டியில் (அது தமிழ்ப் பத்திரிகை வரலாற்றில் முதல் போட்டியாகக்கூட இருக்கலாம்) முதல் பரிசு பெற்றவர். அந்தக் காலத்துப் பிரபல எழுத்தாளர்கள் பலர் கலந்து கொண்ட போட்டி அது.

க.நா.சுப்ரமணியம் கதை அனுப்பலா மென்று நினைத்தாராம். ‘‘அதுக்குள்ளே ரா.கி. (கல்கி) என்னைக் கூப்பிட்டு ஜூரியா இருக்கச் சொல்லிட்டார். ஒருவேளை நானும் கதை அனுப்பிச்சுடுவேன்னு பயந்துட்டாரோ என்னவோ’’ என்று க.நா.சு. பிற்காலத்தில் என்னிடம் சொல்லியிருக்கிறார்.

பரிசு பெற்ற கதையின் பெயர் ‘ஏழ்மை யில் இன்பம்’என்று நினைக்கிறேன். லேசான அங்கதச் சுவையுடன் வறுமை யைப் படம்பிடித்துக் காட்டும் கதை. புதுமைப்பித்தன் பாதிப்பாக இருக் கலாம்.

வாசக சாலையின் பெயர் ‘ஜெய மாருதி வாசக சாலை’. வாசக சாலையின் லோகோ அனுமன் சஞ்சீவி மலையைத் தூக்கிக்கொண்டு விண்ணில் பறப்பது போல் இருக்கும். அந்தப் படத்தை வரைந்தவரும் கோபாலன்தான்!

கி.ரா.கோபாலன் எழுத்தாளர் மட்டும் இல்லை; நல்ல ஓவியர். தமிழ் சாகித்தியங்களும் எழுதியிருக்கிறார். இதைப் பற்றி ஒரு முக்கிய செய்தியைப் பதிவு செய்தாக வேண்டும்.

அவர் ‘நித்திரையில் வந்து என் நெஞ் சில் இடங்கொண்ட’என்ற ஓர் இசைப் பாடலை இயற்றி அக்காலகட்டத்தில் மிகப் பிரபலப் பாடகராக இருந்த என்.சி. வசந்த கோகிலத்திடம் கொடுத்திருக் கிறார். பாட்டு நன்றாக இருந்ததால் இசைத் தட்டாக வெளியிட ஒப்புக் கொண் டார். ஆனால், இசைத்தட்டு வெளிவந்த போது, இயற்றியவர் பெயராக ‘சுத்தா னந்த பாரதி’ பெயர் இருந்தது.

கோபாலன் கோபத்துடன் வசந்த கோகிலத்தைப் பார்க்கப் போயிருக்கிறார். வசந்த கோகிலம் கணவர் ‘சாச்சி’ (சதாசிவம்) சொல்லியிருக்கிறார்: ‘ ‘உன் பேரை யாருக்குத் தெரியும்? அதுக்காக ரெக் கார்ட் கம்பெனி சுத்தானந்த பாரதியார் பெயரைப் போட்டிருக்கான். நல்லா விற்கணுமில்லையா? உனக்குப் பணம் வந்தாச்சு இல்லையா, பேசாமெ இரு. கேசு, கீஸுன்னு அலையாதே. டேய்… யார்றா அங்கே, இவருக்கு நூறு ரூபா கொடு. நானும் பணம் தர்றேன், போறுமா?’’

கோபாலன் இதைச் சொன்னது என் மனத்திரையில் இன்னும் அப்படியே நிழலாடுகிறது.

இதையொட்டி இன்னொன்றையும் சொல்ல வேண்டும்.

‘குசேலோபாக்கியானம்’என்ற ஒரு காவியம் 19-ம் நூற்றாண்டில் வெளி வந்திருக்கிறது. அதன் ஆசிரியர் ‘வல்லூர் தேவராசப் பிள்ளை’என்று இன்னும் தமிழ்ப் பல்கலைக்கழகப் பண்டிதர்கள் தம் இலக்கிய வரலாற்று நூல்களில் எழுதிவருகிறார்கள். அதன் உண்மை யான ஆசிரியர் யார் தெரியுமா? மகாவித் வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை. டாக்டர் உ.வே.சாமிநாத அய்யரின் ஆசிரியர்.

டாக்டர் உ.வே.சா. தாம் எழுதிய நூல் ஒன்றில் நயமாக இந்தச் செய்தியை ஆவணப்படுத்தியிருக்கிறார். மகாவித் வானுடைய மாணாக்கர்களில் வல்லூர் தேவராசப் பிள்ளை மிகவும் சாதாரண மானவர். அவருக்கும் மற்றவர்களைப் போல் நூல் எழுத வேண்டுமென்ற ஆசை. நல்லவர், பண்பானவர். ஆசிரியர் அவர் விருப்பத்தைப் பூர்த்திசெய்ய அவரிடம் சொன்னாராம், ‘‘சரி, நான் சொல்றேன். சொல்லச் சொல்ல எழுதிக்க..!’’

இதை உ.வே.சா. ஏன் சொல்ல வேண்டும்? நம் அரும்பெரும் பண்டைய தமிழ் நூல்களைச் சேகரித்ததோடு மட்டு மல்லாமல் அவற்றை அந்தந்த ஆசிரியர் களுடன் தொடர்புபடுத்தி அச்சிடுவதற் குப் பட்டபாடு அவருக்குத்தான் தெரியும்!

ஜெய மாருதி வாசக சாலையின் சார்பாக ஒரு கையெழுத்துப் பத்திரிகை யும் வெளிவந்தி ருக்கிறது. பத்திரிகையின் பெயர் நினைவில்லை. அச்செழுத்துப் போல் கையெழுத்துடைய ராகவன் என்ற இளைஞர் எழுதினார் என்ற நினைவு. கோபுலு, சாரதி (ஆனந்த விகடனில் பிற்காலத்தில் பெயர் பெற்றவர்) கி.ரா. கோபாலன் ஆகியோர் கைவண்ணம் அப்பத்திரிகையை அலங்கரித்தது.

நான் அப்போது குடந்தைக் கல்லூரி யில் இண்டர்மீடியட் படித்துக் கொண்டிருந்தேன். என் முதல் கதை அந்தப் பத்திரிகையில்தான் வந்தது. கதை நினைவில்லை. முதல் வரி நினைவிருக்கிறது.

‘மணி பன்னிரெண்டடித்தது. இரண்டு முட்களும் ஒன்றையொன்று தழுவிக் கொண்டிருந்தன. ஆனால் நான் மட்டும்?’

ஓர் இளம் பிராமண விதவைப் பெண்ணைப் பற்றிய கதை என்று நினைக்கிறேன். அப்போது சன்னதித் தெருவில் இளம் பிராமண விதவைக் கன்னிகளுக்குப் பஞ்சமில்லை. இதன் பாதிப்பாக இருந்திருக்கக்கூடும்.

மாதம் ஒரு முறை அந்தக் காலத்து வி.ஐ.பி. யாரேனும் கும்பகோணம் வந்தால், அவரை அரும்பாடுபட்டுக் கூப்பிட்டு வாசக சாலையில் பேசச் சொல்வதும் வழக்கம். ஒரு தடவை வி.எஸ்.சீனிவாச சாஸ்திரி பேசியிருக் கிறார். ஆனால், வாசக சாலையில் பேசவில்லை. வாசக சாலை சார்பாக போர்ட்டர் டவுன் ஹாலில் பேசினார். அவர் பேசியது நினைவிருக்கிறது: ‘‘என் சுயசரிதையைத் தமிழில் எழுதும் படிக் கேட்டார் கி.வா.ஜெகன்னாதன்.

முதலில் தயங்கினேன். ஏனெனில், எனக்குத் தமிழ் அவ்வளவு வராது. நீங்கள் எழுதுங்கள் நாங்கள் பார்த் துக்கொள்கிறோம் என்றார் கி.வா.ஜா. எழுதின பிறகுதான் தெரிந்தது, கலாச் சாரத் தொடர்புடைய இளமைப் பருவ வலங்கைமான் அனுபவங்களைக் கலாபூர்வமாக, ஆங்கிலத்தில் என் னால் சொல்லியிருக்க முடியுமா என்பது சந்தேகம்தான். காந்திஜி தம் சுயசரிதையை முதலில் குஜராத்தியில் ஏன் எழுதினார் என்று இப்போதுதான் புரிகிறது!’’

- பயணம் தொடரும்… | எண்ணங்களைப் பகிர: parthasarathyindira@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x