

ரஸ்கின் பாண்டின் எழுத்து சிறுவர்களையும் பெரியவர்களையும் ஒருசேரக் கவரக்கூடியது. மலைவாசஸ்தலங்களின் ராணி என்றழைக்கப்படும் மிசௌரியின் இன்னொரு அடையாளமாக அங்கேயே வாழ்ந்துவரும் ரஸ்கின் பாண்ட் கடந்த வெள்ளிக்கிழமை தனது 83-வது பிறந்தநாளை அங்குள்ள கேம்பிரிட்ஜ் புத்தகக் கடையில் கொண்டாடினார். இந்தப் புத்தகக் கடை 1952-ம் ஆண்டு லக்ஷ்மண் தாஸ் அரோராவால் தொடங்கப்பட்டது. அக்காலத்திலிருந்து ரஸ்கின் பாண்ட் அடிக்கடி இங்கு வருகைதந்ததால் பாண்டின் ரசிகர்களுக்கு இந்தப் புத்தகக் கடை சுற்றுலாத் தலமாகவே மாறிவிட்டது.
சனிக்கிழமை தோறும் பின்மதியம் 3.30-க்கு வாசகர்களைக் காண வருகைதருவார் ரஸ்கின் பாண்ட். ரசிகர்களுடன் உரையாடல், புத்தகத்தில் கையெழுத்துகள், புகைப்படங்கள் என்று பொழுதுபோகும். சனிக்கிழமைகளில் பள்ளி, கல்லூரி மாணவர்களும் இவரைப் பார்க்க ஏராளமாக வருகின்றனர். மிசௌரிக்கு வர இயலாத பாண்டின் வாசகர்கள், கேம்பிரிட்ஜ் புத்தகக் கடையைத் தொடர்புகொண்டால் போதும், அவரது கையெழுத்திட்ட புத்தகங்களை கூரியர் அனுப்பும் சேவையையும் அரோராவின் குடும்பத்தினர் தொடர்ந்து செய்துவருகின்றனர். 1960-களின் பின்பகுதியில், ரஸ்கின் பாண்ட் தினசரி இந்தக் கடைக்கு வந்து புதிய புத்தகங்களை வாங்கிப் போயிருக்கிறார்.
2003-ம் ஆண்டிலிருந்துதான் புத்தகக் கடையிலேயே பாண்டின் பிறந்த நாளைக் கொண்டாடும் பழக்கம் ஆரம்பித்துள்ளது. ரஸ்கின் பாண்டின் புதிய புத்தகங்களின் வடிவமைப்பிலேயே கேக் வெட்டி வாசகர்கள் முன்னிலையில் கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்த நாளில் பிறந்த வாசகர்கள் யாராவது விருப்பப்பட்டால் ரஸ்கின் பாண்டுடன் சேர்ந்து கேக் வெட்டவும் அனுமதியுண்டு.
ரஸ்கின் பாண்டின் புதிய புத்தகமான ‘லுக்கிங் பார் தி ரெய்ன்போ: மை இயர்ஸ் வித் டாடி’ இந்தப் பிறந்த நாள் நிகழ்வில் வெளியிடப்பட்டது. “இந்தச் சிறிய புத்தகம் என் தந்தைக்கு மரியாதை செலுத்தும் விதமாக எழுதப்பட்டது. குறுகிய காலத்தில் எனது வாழ்க்கையை அர்த்தபூர்வமானதாக்க எத்தனையோ செய்தவர். எல்லாக் குழந்தைகளும் அவரைப் போன்ற தந்தையைப் பெற வேண்டும். அவரைப் பற்றி நான் முன்னரும் எழுதியிருக்கிறேன். ஆனால், இத்தனை நீளமாக எழுதியதில்லை. அவருடன் நான் கழித்த இரண்டு ஆண்டு அனுபவங்களைச் சுற்றிய கதை இது” என்கிறார் பாண்ட்.
கேம்பிரிட்ஜ் புத்தக நிலையம் இன்னும் பல பிறந்த நாள் விழாக்களை ரஸ்கின் பாண்டுக்காகக் கொண்டாடட்டும்.
- வினுபவித்ரா