Last Updated : 26 Mar, 2017 11:06 AM

 

Published : 26 Mar 2017 11:06 AM
Last Updated : 26 Mar 2017 11:06 AM

எளிய மனிதரின் சிநேகிதர்

முழுமையான எழுத்து ஆளுமையாக வாழ்ந்து மறைந்திருக்கிறார் அசோகமித்திரன். 1956-ல் கதைகள் எழுதத் தொடங்கி 2017 வரை எழுதி வந்திருக்கிறார். முதல் கதையில் வெளிப்பட்ட அதே ஆற்றலுடன் அறுபதாண்டுக் கால எழுதியிருக்கிறார்.

அசோகமித்திரன் கதை எழுதத் தொடங்கிய இந்த அறுபதாண்டுக் காலத்தில் பல்வேறு விதமான கோட்பாடுகள் இலக்கியத்துக்குள் விவாதிக்கப்பட்டு, பரிசோதித்துப் பார்க்கப் பட்டுள்ளன. ஆனால் அசோகமித்திரன் இந்தப் புதுப் பரிசோதனைகளுக்குத் தன் கதைகளை உட்படுத்தவில்லை. அதனால் அவரது தொடக்க காலக் கதைகள் ‘இலக்கிய அந்தஸ்து’க்கு வெளியே வைத்துப் பார்க்கப்பட்ட சூழலும் இங்கே இருந்தது. ஆனால், இது போன்ற எந்தப் புறச்சூழலையும் மனத்தில் கொள்ளாமல் அசோகமித்திரன் எழுதிவந்தார்.

இந்தக் கால இடைவெளிக்குள் தமிழ்ச் சமூகத்தில் அரசியல்ரீதியாக, சமூகரீதியாக நடந்த மாற்றத்தையும் அசோகமித்திரன் தன் கதைகள் வழியாக உள்வாங்கியிருக்கிறார். அதற்கு ஒரு படிமேல் சென்று அவர் எழுத வந்ததற்கு முற்பட்ட கால வரலாற்றையும் சொல்லியுள்ளார். கடந்துபோய்விட்ட காலத்தை ஒரு எளிய நடுத்தர வர்க்க வாழ்க்கையின் வழியாகச் சித்திரிப்பது அசோகமித்திரன் கதைகளின் முதன்மையான பண்பு எனலாம்.

தமிழின் தொடக்க காலச் சிறுகதைகளில் பல, வட்டாரக் கதைகளின் சொல்லல் முறையை ஆதாரமாகக் கொண்டவை. கதைகளுக்குள் ஸ்திரமான கதை சொல்லி, அவருக்கெனத் தனித்த அபிப்ராயங்கள் என்ற முறையில்தான் கதைகள் எழுதப்பட்டு வந்தன. சொல்லும் சம்பவத்தில், கதாபாத்திரங்களில், ஒரு சமூக பிரச்சினையில் என எவற்றைக் குறித்தும் கதைசொல்லி தன் அபிப்ராயங்களைச் சொல்லிக்கொண்டே செல்லும் அம்சம் இருந்தது. இவற்றிலிருந்து மாறுபட்டு திருத்தமான ஒரு கதைச் சம்பவம், அதைச் சொல்வதற்கான ஒரு மொழி என்ற எளிய திட்டத்துடன் அசோகமித்திரன் தன் கதைகளை எழுதத் தொடங்கினார். இவ்வளவுதான் அவரது தொழில்நுட்பம் எனலாம்.

20-ம் நூற்றாண்டு அமெரிக்க எழுத்தாளர்களான எர்னஸ்ட் ஹெமிங்வே, வில்லியம் ஃபாக்னர், ஜான் டாஸ் பஸாஸ் ஆகியோரின் எழுத்துகளே அசோகமித்திரனுக்கு முன்னுதாரணங்கள். ஆனால் - தமிழில் மொழிபெயர்ப்பு இலக்கியத்தின் பாதிப்பால் பின்னால் உருவான புனைவுகளைப் போல் - அன்னியத்தன்மை கொண்டவையல்ல அசோகமித்திரனின் கதைகள். தமிழ்நாடு, ஆந்திரா, அமெரிக்கா போன்ற பல நிலங்களைப் பின்புலமாகக் கொண்டு அசோகமித்திரன் கதைகள் எழுதியிருக்கிறார். எந்தப் பின்புலத்தில் எழுதினாலும் அந்த நிலத்தை எளிமையான சூழல் விவரிப்பில் துலக்கமாக்கிவிடும் ஆற்றல் அவரது எழுத்துக்கு உண்டு. நிஜாம் ஆட்சியிலிருந்த அன்றைய செகந்திராபாதை ‘18-வது அச்சக்கோடு’ நாவலில் இன்றும் காண முடியும். 1970-களின் அமெரிக்காவை, அங்கு புழக்கத்தில் இருந்த கார்களையும் ‘ஒற்றன்’ நாவலில் காணலாம். 70-களில் சென்னையில் நிலவிய தண்ணீர்ப் பஞ்சத்தை, 90-கள் வரை சென்னையில் பரவலாக இருந்த ஒண்டுக் குடித்தன கலாச்சாரத்தை ‘தண்ணீர்’ நாவல் மூலம் அறிந்துகொள்ள முடியும்.

அதே சமயம் கதைச் சம்பவத்தை விவரிக்கும் போது, கதைமாந்தர்களைச் சித்திரிக்கும்போது ஒரு சிறு சொல்லைக்கூடத் தளும்பச் செய்வதில்லை அவர். பல கதாபாத்திரங்கள் கறுப்பா, சிவப்பா, அவர்கள் அணிந்திருக்கும் ஆடை என்ன, சிகையலங்காரம் எப்படி இருந்தது போன்ற அலங்காரங்களைத் தவிர்த்திருப்பார். கதைச் சூழலை விவரிக்கும்போது, அது கதாபாத்திரங்களின் பார்வையில்தான் இருக்கும். அவர்களின் பார்வைக்குக் குறுக்கே அசோகமித்திரன் வர மாட்டார்.

அவரது கதை மாந்தர்கள் நடுத்தர வர்க்கத்தினர்; எளிமையானவர்கள். தங்களுக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கையை அவரது எழுத்தைப் போலவே மிகையுணர்ச்சி எதுவுமின்றிக் கடந்து செல்கிறார்கள். சென்னை போன்ற பெருநகரத்தில் அவர்கள் வசிக்கும் ஒண்டுக் குடித்தன வீட்டில் கவிந்து கிடக்கும் பகலிருட்டைப் போன்ற துயரம் அசோகமித்திரன் கதைகளில் வியாபித்துள்ளது. அவர்கள் கடைப்பிடித்து வரும் வாழ்க்கை நெறிகளும் அதனால் அவர்களுக்கு ஏற்படும் துன்பங்களும்தான் அசோகமித்திரனின் பெரும்பாலான கதைகளின் மையம். ஒரு நாளைப் போல் மாறாத மற்றொரு நாளுக்காகக் காத்திருக்கும் அவர்களின் பாடுகள்தான அவரது கதைகளின் ஆதாரம்.

நல்லது, கெட்டது போன்ற நெறிகளை வாழ்முறையாகக் கொண்ட இவர்களுக்கும் சமூக யதார்த்தத்துக்குமான இடைவெளியில்தான் அசோகமித்திரன் கதைகள் துளிர்விடு கின்றன. இந்த இடைவெளியால் உருவாகும் தாழ்வு மனப்பான்மையையும் கையாலாகாத் தனத்தையும் அசோகமித்திரன் பகடியால் கடக்கிறார். ‘பாவம் டல்பதடோ’ நாவலில் ஒரு எளிய நடுத்தரவர்க்க ஆள் ஒரு தீவிரவாதியிடம் மாட்டிக்கொள்கிறான். போலீஸ் துரத்துகிறது. தீவிரவாதியுடன் சேர்ந்து இருளில் தரையுடன் தரையாகத் தவழ்ந்து செல்ல வேண்டியிருக்கிறது. அவனது புலம்பலை அசோகமித்திரனின் பகடிக்கான முன்னுதாரண மாகச் சொல்லலாம்; “நான் இரண்டு வயதில் தான் நடக்க ஆரம்பித்தேன் என்பார்கள். ஆதலால் தவழும் அனுபவம் எனக்கு அதிக மாகத்தான் இருக்க வேண்டும். இருந்தபோதிலும் அந்த நள்ளிரவில் மீனம்பாக்கத்துக்கும் பல்லா வரத்துக்கும் இடையே ரயில் பாதையோரமாகக் கட்டாந்தரையில் ஊர்வது அவ்வளவு எளிதாக இல்லை.” இது அசோகமித்திரன் மொழியின் விஷேசமான பண்பு.

அசோகமித்திரனுக்குத் தீர்க்கமான அரசியல் பிடிபாடுகள் உண்டு; அவரது கதை மாந்தர்களும் அதைப் பேசுகிறார்கள். உதாரணமாக ‘மணல்’ நாவலில் சரோஜினிக்கு மருத்துவப் படிப்புக்கான சேர்க்கை கிடைக்காமல் போய்விடுகிறது. அது அவளது வாழ்க்கையையே புரட்டிப்போட்டு விடுகிறது. இந்தச் சம்பவத்துக்குப் பின்னாலுள்ள அரசியலைக் கதாபாத்திரங்களுக்கு இடையேயான பேச்சாகச் சொல்லிச் செல்வார். அரசியலை அவர் கோட்பாடு, கொள்கை என்று விவரிப்பதில்லை. அரசியல் சாமானியர்களின் அன்றாடத்தில் நிகழ்த்தக்கூடிய பாதிப்பாகவே கதை மாந்தர்களுக்கு இடையில் பகிரப்படுகிறது.

அரசியல், சமூக மாற்றங்கள் என எல்லா வற்றையும் ஒண்டுக் குடித்தன வீட்டின் சிறு ஜன்னல் வழியாகவே அசோகமித்திரன் பார்க் கிறார். இதன் மூலம் வாழ்க்கைக்கு வெளியேயும் உள்ளேயும் நடக்கும் மாற்றங்களை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் எனச் சொல்லியிருக்கிறார்.

ஒரு பிரம்மாண்டமான புரட்சியைச் சொல் வதற்கும், சாப்பாட்டுத் தட்டு தொலைந்துபோன சம்பவத்தைச் சொல்வதற்கும் எளிய மனிதர் களின் குரலையே விவரிப்பு மொழியாகத் தேர்ந்தெடுக்கிறார்.

எளிய வாசகர் நுழைவதற்கான எல்லாச் சாத்தியத்துடன் தன் கதைகளைத் திறந்து வைத்திருக்கிறார் அசோகமித்திரன். அந்த எளிய வீட்டின் கதவைத் திறந்து உள்ளே சென்று நாம் இப்போதும் அசோகமித்திரன் என்னும் நம் காலத்தின் மிகப் பெரும் எழுத்தாளனைத் தரிசிக்கலாம்.

தொடர்புக்கு: jeyakumar.r@thehindutamil.co.in

படம்: ஆர்.ரகு

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x