Published : 19 Oct 2013 03:46 PM
Last Updated : 19 Oct 2013 03:46 PM

ஆதியூர் அவதானி சரிதம்

இலக்கிய வரலாற்று நூல்களில் எல்லாம் ‘முதல் தமிழ் நாவல் பிரதாப முதலியார் சரித்திரம்’ என்பதாகவே குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால் ‘முதல் தமிழ் நாவல்’ என்னும் அடையாளத்துடன் 1994ஆம் ஆண்டு ‘ஆதியூர் அவதானி சரிதம்’ என்னும் நூல் வெளியாகியுள்ளது. ‘வித்துவான் சேஷையங்கார் இயற்றியது’ என்று ஆசிரியர் பெயர் காணப்படுகிறது. இதைப் பதிப்பித்தவர்கள் தமிழ் நவீன இலக்கிய வரலாற்று முன்னோடிகளாகிய ‘சிட்டி, சிவபாதசுந்தரம்’ ஆகியோர்.

‘தமிழ் நாவல் நூறாண்டு வரலாறும் வளர்ச்சியும்’, ‘தமிழில் சிறுகதை வரலாறும் வளர்ச்சியும்’ ஆகிய நூல்களை எழுதியவர்கள் இவர்கள். இவ்வரலாற்று நூல்களை எழுதுவதற்காகப் பலவிதமான தேடல்களை நிகழ்த்தியவர்கள். நூல்கள் வெளிவந்த பின்னும் முடிவு பெறாத தேடலின் மூலமாகக் கண்டடைந்த ஒன்றுதான் ‘ஆதியூர் அவதானி சரிதம்.’ 1875ஆம் ஆண்டு வெளியான நூல் இது. லண்டனில் உள்ள பிரிட்டிஷ் மியூசியம் நூலகத்தில் இந்நூலின் பிரதியைக் கண்டு நகலெடுத்தவர் சிவபாதசுந்தரம் அவர்கள். விரிவான முன்னுரை ஒன்றையும் எழுதி கோவை விஜயாப் பதிப்பகம் மூலமாக நூலை வெளியிட்டனர்.

இவர்களுக்கு முன்னரே இதைத் தமிழின் முதல் நாவல் என்று சொன்னவர் ஒருவர் உண்டு. 1976ஆம் ஆண்டு ஜூலை – செப்டம்பர் மாதப் ‘புலமை’ இதழில் ‘ஆதியூர் அவதானி பாட்டு நாடோடி இலக்கியத்தில் ஒரு திருப்பம்’ என்னும் தலைப்பில் கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது. அதை எழுதியவர் பெரும்தமிழறிஞராகிய மு.இராகவையங்காரின் பேரன் ஜெ. பார்த்தசாரதி என்பவர்.

இந்நூலை இயற்றிய தூ.வீ.சேஷையங்கார் பேராசிரியராகப் பணியாற்றியவர் என்று தெரிகிறது. ‘சென்ற நூற்றாண்டில் கீர்த்தி வாய்ந்த பேராசிரியராகவும் பொறியியல் வல்லுநராகவும் வாழ்ந்து வந்தார் என்பது தவிர அதிக விவரங்கள் கிடைக்கவில்லை’ என்பது ஜெ.பார்த்தசாரதியின் குறிப்பு. இந்நூலின் முன்னுரையில் ‘இதற்கு முன் யானியற்றிய குணாகரம் எனுங்காவியம்’ என்று குறிப்பிட்டிருப்பதால் ‘குணாகரம்’ என்னும் நூல் ஒன்றையும் அவர் இயற்றி இருப்பதாகத் தெரிகிறது. அதைக் காவியம் என்று குறிப்பிடுவதோடு ‘முதிய தமிழும் புதிய கருத்தும்’ கொண்டது எனவும் தெரிவிக்கின்றார். காவியம் என்று குறிப்பிடுவதால் அதுவும் கதை தழுவிய நூலாகவே இருக்க வேண்டும்.

ஆதியூர் அவதானி சரிதத்தைச் சென்னை பிரசிடென்சிக் கல்லூரியின் முதல்வராக இருந்தவரும் கல்வி அதிகாரியாகப் பணியாற்றியவரும் அவரது ஆசிரியருமான ‘அயர்பர்ட்டன் பௌவல் துரை’ அவர்களுக்குச் சமர்ப்பணம் செய்துள்ளார். நூலின் கதையைப் பற்றி ‘இதிலடங்கிய சங்கதிகள் பல இந்துக் குடும்பங்களில் இக்காலத்தி லுள்ளவைகள்தாம். ஆதலால் இது பொய்ப்பெயர் பூண்டு மெய்ப்பொருள் காட்டும்’ என்கிறார்.

ஆதியூர் அவதானி சரிதத்தை ‘An original Tamil Novel’ என்று ஆங்கிலத்திலும் ‘நவீனமாகவியற்றிய கட்டுரைக் கதை’ எனத் தமிழிலும் ஆசிரியரே குறிப்பிட்டுள்ளார். ‘நானோவெனில் நமது வித்துவான்கள் வழக்கமாயிறங்குந் துறைகளை விட்டுக் காலத்தியற்கையைத் தழுவிப் புதுத்துறையில் காலிட்டேன்’ என்று தம் முயற்சி பற்றித் தெளிவுடன் கருத்துரைத்துள்ளார். பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் தோன்றிய நாவல்கள் பலவற்றிற்கு இரட்டைப் பெயர் சூட்டும் வழக்கம் இருந்துள்ளது. அதேபோல இந்நூலுக்கும் ஆங்கிலத்தில் ‘ATHIYUR AVADHANI OR THE SELF – MADE MAN’ என இரட்டைப் பெயர் காணப்படுகிறது.

நூலின் கதையைப் பற்றி ஜெ.பார்த்தசாரதி அவர்கள் தெரிவிக்கும் சுருக்கம் இது: ‘உறவினர்களின் ஓயாத தொல்லை; ஊரினரின் வம்புப் பேச்சுகள்; அண்டை அயலார் முட்டுக்கட்டைகள்; பொருந்தாத இல்லறத்தின் இன்னல்கள் – இவைகளைப் பின்னணியாகக் கொண்ட வாழ்க்கையில் பெருங்கசப்புற்று ஓர் அந்தணன் கலப்பு ஜாதி மணத்தை விரும்பி அதன் புனிதத்தை நாட்டுவது கதையின் சாராம்சம்.’

நூல் முழுவதும் பாடல் வடிவிலானது. நாவல் என்பது உரைநடை இலக்கிய வடிவம் என்பது பொதுப்புரிதல். ஆனால் இது பாடல் வடிவில் இருக்கிறதே என்று கேட்டால், 1986ஆம் ஆண்டு விக்ரம் சேட் எழுதிய The Golden Gate என்னும் நாவல் கவிதை வடிவில் எழுதப்பட்டதுதான். அதை நாவல் என்று ஏற்றுக்கொள்ளும்போது இதை ஏன் ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று சிட்டி, சிவபாதசுந்தரம் ஆகியோர் வினா எழுப்புகின்றனர். இதுதான் தமிழின் முதல் நாவல் என்பதில் அவர்களுக்கு எந்தச் சந்தேகமும் இல்லை.

வெளியாகிக் கிட்டத்தட்ட நூற்றிருபது ஆண்டுகளுக்குப் பிறகு மறு கண்டுபிடிப்புச் செய்யப்பட்டு மறுபதிப்பு வெளியிடப்பட்ட இந்நூலைத் தமிழ் கூறு நல்லுலகம் பொருட்படுத்தி ஆய்வுக்கு உட்படுத்தவில்லை. இதை முதல் நாவலாக ஏற்றுக்கொள்ளலாமா கூடாதா என்று விவாதிக்கவில்லை. வெகுசிலருக்கு மட்டுமே அறிமுகமான நூலாக இது இன்றுவரைக்கும் உள்ளது. பாடல் வடிவிலானதும் சமகால வாழ்வைப் பற்றியதுமான இந்நூலை நாவல் என்று சொல்லலாமா? இல்லை என்றால் வேறு என்னவென்று வகைப்படுத்துவது? எந்த வகைக்குள்ளும் சேராத காரணத்தால் இப்படி ஒரு நூல் வரவில்லை என்பது போல மௌனம் காத்துவிடலாமா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x