நூல் வெளி: சமநிலைச் சமூகத்தை வலியுறுத்திய இறைத்தூதர்

நூல் வெளி: சமநிலைச் சமூகத்தை வலியுறுத்திய இறைத்தூதர்
Updated on
1 min read

நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னர் இங்கிலாந்தில் வரலாற்று ஆசிரியர் தாமஸ் கார்லைல் ஆற்றிய சொற்பொழிவின் தமிழாக்கத்தை நூலாகத் தந்துள்ளார் ஏம்பல் தஜம்முல் முகம்மது. மேலும் ‘இஸ்லாமும் மேற்கு நாடுகளும்’ எனும் பெயரில் இளவரசர் சார்லஸ் ஆற்றிய உரையையும் இத்துடன் இணைத்துள்ளார்.

இறுதித் தூதரான முகம்மது நபி குறித்த இந்நூல் பல ஐயங்களைத் தெளிவுபடுத்துகிறது. “நபிகள் நாயகம் மக்களுக்குப் புரிந்த போதனைகள் அனைத்தும் உண்மை பொதிந்தவை; கருத்தாழம் மிக்கவை; விசுவாசம் கொள்ளத்தக்க வேதம் ஒன்றிருந்தால் அது நபிகள் நாயகத்துக்கு அருளப்பட்ட திருக்குர்-ஆனேயாகும்” என்கிறார் தாமஸ் கார்லைல்.

அவர் காலத்திய மக்கள் எவ்வளவு நெருக்கமாகக் அவரைக் காண முடிந்ததோ அவ்வளவு நெருக் கமாக பதினான்கு நூற்றாண்டுகள் கழிந்தபின்பும் நாமும் காண முடிகிறது. முகம்மது நபியை ‘சகோதரத்துவத்தை உலகிற்குக் கொணர்ந்த இறைத்தூதர்’ என்றார் விவேகானந்தர்.

முகம்மது நபி தன் சீடர்களை சூஃபிகளும் தர்வேசுகளுமாக மாற்றி சன்னியாசி மடத்துக்கு அனுப்ப வில்லை; அதிகாரத்தில் இருப்பவர் களை அச்சப்படுத்த அனுமதிக்க வில்லை. துறவுநெறி, நுகர்வு வெறி ஆகிய இரண்டையும் ஆதரிக்காத முகம்மது நபி சமநிலையான சமூக அமைப்பை வலியுறுத்தியவர். நேர்மை யின்மை என்பதே இறைத்தூதரிடம் இல்லை என்கிறார் தாமஸ் கார்லைல்.

மனிதருள் மிகச்சிறந்தவர் என்றால், மனித வரலாற்றிலே அந்தத் தகுதிக் குரியவர் முகம்மது அவர்களைத் தவிர வேறு எவருமிலர் என்கிறார் அவர்.

என்னிடம் யாரும் யார் குறித்தும் கூறாதீர்கள், நான் திறந்த மனதோடு மனிதர்களை அணுகுவேன் என்ற நபியின் கூற்று அவரது தனித்து வத்துக்குச் சிறந்த அடையாளம். சார்லஸின் கருத்துகள் இந்நூலின் மகுடம். மனிதனையும் இயற்கை யையும் பிரிப்பதை மதத்தையும் அறிவியலையும் பிரிப்பதை, மனதையும் பொருளையும் பிரிப்பதை இஸ்லாம் ஏற்பதில்லை என்கிறார் சார்லஸ். ஒருவரையொருவர் புரிந்து கொள்ளுதல் அற்புத விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை இந்நூல் சாட்சியப்படுத்துகிறது.

தூது வந்த வீரர்
பதிப்பாசிரியர் ஏம்பல் தஜம்முல் முகம்மது
வெளியீடு; நியூலைட் புக் சென்டர்
1504-A, MIG, மூன்றாம் முதன்மைச் சாலை, மாத்தூர்-M.M.D.A. சென்னை-68
தொடர்புக்கு: 9994405644. விலை: ரூ.200

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in