Last Updated : 27 May, 2017 09:05 AM

Published : 27 May 2017 09:05 AM
Last Updated : 27 May 2017 09:05 AM

பெரியாரைக் கசடறக் கற்க...

இந்த நூலின் பதிப்புரை இப்படித் தொடங்குகிறது: “தந்தை பெரியார் தமிழ்ச் சமூகத்தின் உட்கரு; மூலச் சிந்தனையாளர்; தமிழ்ச் சமூக இயங்கியலின் அடிப்படையைக் கண்டறிந்தவர் சமூகப் படிநிலை வளர்ச்சியில் அதன் அங்கமாகிவிட்டவர்.”

உலக அளவில் அதிக நாட்கள் உயிர் வாழ்ந்த சமூக சீர்திருத்தவாதிகளுள் பெரியாரும் ஒருவர். பல சமூக சீர்த்திருத்தவாதிகள் போல் குறிப்பிட்ட வயதுக்கு மேல் செயல்பாட்டை நிறுத்திக்கொள்ளாமல் மரணிக்கும் தருவாயில்கூட சமூகத்தினுடனான கருத்துப் பகிர்வை நிகழ்த்தியிருக்கிறார்.

இப்படிப்பட்ட ஒரு நபரை ஒரே ஒரு வாழ்க்கை வரலாற்று நூல் மூலமாகவோ அல்லது சில சுயசரிதை தொகுப்புகள் மூலமாகவோ அறிந்துகொள்வதும் விமர்சிப்பதும் சாத்தியமற்ற ஒன்று. இதை கருத்தில் கொண்டு, பெரியார் பல்வேறு காலகட்டங்களில் நிகழ்த்திய உரைகள், பகுத்தறிவு, குடியரசு, விடுதலை ஆகிய பத்திரிகைகளில் எழுதிய கட்டுரைகள் ஆகியவற்றிலிருந்து தலைப்பு வாரியாகப் பிரித்துத் தொகுத்திருக்கின்றனர் விடியல் பதிப்பகத்தினர். பெரியாரை முன்வைத்து இன்றளவும் பல்வேறு விவாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. அவற்றுக்கான விடையை (ஆதரித்தோ, எதிர்த்தோ) பெரியாரிடம் நேரடியாக கேட்கும் வகையில் தலைப்புகள் பிரிக்கப்பட்டுக் கட்டுரைகளும் உரைகளும் கொடுக்கப்பட்டுள்ளன. சமுதாயம், மதம், சாதி, கடவுள், தத்துவம், பெண்... இப்படி 21 தலைப்புகள்!

வெறும் கட்டுரைத் தொகுப்புகள் மட்டுமல்லாது குடிஅரசு, விடுதலை, வெறும் இரண்டு மாதங்கள் மட்டுமே நாளிதழாக வந்த ‘பகுத்தறிவு’ உள்ளிட்டவற்றில் பெரியார் எழுதிய உரையாடல் வடி விலான தொகுப்புகளையும் இந்த நூலில் வழங்கியுள்ளனர். பெரியார் என்ற பிம்பம் மிகவும் கடினமான ஒன்று என்று சித்தரிக்கப்படும் சூழலில் மிகுந்த நகைச்சுவை உணர்வுடன் அரசியல் சமூக, நையாண்டிகளைப் பெரியார் எழுதியிருப்பதை அறிந்துகொள்ள அந்தத் தொகுப்புகள் உதவுகின்றன. பிராமணிய எதிர்ப்பு தொடங்கி கடவுள் மறுப்பு வரை ஒவ்வொரு காலகட்டத்திலும் பெரியார் தனது உரையாடல்களை எப்படி முன்வைக்கிறார் என்பதையும், தத்துவப் போராட்டம் கால மாற்றத்துக்கு ஏற்பத் தேவைப்படும் தகவமைப்புகளைத் தன்னுள்ளே செய்துகொள்ள வேண்டும் என்பதை அறிந்துகொள்ளவும் ஒரே தலைப்பில் பெரியார் வெவ்வேறு காலகட்டத்தில் எப்படி உரையாற்றியிருக்கிறார், எழுதியிருக்கிறார் என்பதை ஒப்பிட்டுப் படிக்கும்போது நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.

மதம் குறித்த பெரியாரின் கருத்துக்கள் வெறுமனே இந்து மத எதிர்ப்பு என்று சுருக்கிப் பார்க்கப்பட்டு, விமர்சிக்கப்பட்டுவரும் சூழலில் ‘மதம்’ என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ள கட்டுரைகளை வாசிக்கும்போது மதம் என்ற அடையாளத்திற்குள் நடக்கும் அனைத்து மூடப்பழக்கங்களுக்கும் சுரண்டல் களுக்கும் எதிராகப் பெரியார் களமாடியிருக்கிறார் என்பது தெரியவருகிறது. அப்படி எதிர்வினையாற்றும் இடங்களில் குறிப்பிட்ட மதத்தின் நூல்களை நன்கு கற்று அதன் பின்னரே அவர் விமர்சனத்தை முன்னெடுப்பதும் புலனாகிறது.

தலைவர்கள் கருத்துக்களை மாற்றிக் கொள்வது என்பது மோசமான குற்றமாகப் பார்க்கப்படும் காலத்தில், ‘நான் மாறுவது ஏன்?’ (பக்கம் 814) என்ற தலைப்பில் 1931-ல் நாகப்பட்டினத்தில் பெரியார் ஆற்றிய உரை மூலம் நமக்கு அவருடைய மாற்றங்களைப் பற்றி விளக்கம் கிடைக்கிறது.

பெரியார் அடிப்படையில் மொழியை மிக இலகுவாக கையாண்டவர். அவரது பேச்சு எழுத்து எல்லாமே பாமரர் மொழியில்தான் இருக்கும். மொழியை வளைத்துக் குழைத்து முன்னும் பின்னும் இழுத்துக் கதைப்பதெல்லாம் பெரியாரிடம் இருக்காது. இந்தப் புத்தகத்தின் சிறப்பு பெரியாரின் மொழியை எந்த வகையிலும் மாற்றியமைக்காமல் அதை அப்படியே பதிப்பித்திருப்பதாகும்.

தொகுப்புக் கட்டுரைகளின் தேர்வில் உறுத்தும் ஒரு விஷயமும் உண்டு. காந்தியை விமர்சித்து பெரியார் எழுதிய கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்ததுபோல், காந்தி கொல்லப்பட்ட பிறகு காந்தியைப் புகழ்ந்து பெரியார் எழுதிய எழுத்துக்கள் இங்கே இடம்பெறாதது ஏன் என்ற கேள்வி நம்முள் எழுகிறது. காந்தியை விடுங்கள், அந்தக் கட்டுரைகளில் மதவாதத்துக்கு எதிரான பெரியாரின் பார்வை மிகவும் தீர்க்கமாகப் பதிவாகியிருக்கும். அதற்காகவாவது அந்தக் கட்டுரைகளைக் கொடுத்திருக்கலாமல்லவா?

புத்தகங்கள் பல வகைப்படும், ஒரே மூச்சில் படிப்பது, அவ்வப்போது குறிப்பு எடுத்துக்கொள்ளப் பயன்படுத்துவது; ஆனால் அகராதிகள் அப்படியல்ல. எப்போதாவதுதான் எடுத்துப் புரட்டிப்பார்க் கிறோம் என்றாலும் ஐயம் தெளிவதற்கு அவையே அடிப்படை. அப்படிப் பார்க்கும் போது ‘பெரியார் இன்றும் என்றும்’ நூல் ஒரு முக்கியமான அகராதியாகும்.

- தியாகச்செம்மல், தொடர்புக்கு: thiyagachemmel.st@thehindutamil.co.in

பெரியார் இன்றும் என்றும்
விலை: ரூ. 500
விடியல் பதிப்பகம், கோயம்பத்தூர்.
0422 2576772

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x