Published : 13 Aug 2016 09:33 AM
Last Updated : 13 Aug 2016 09:33 AM

நான் என்ன படிக்கிறேன்?- ஆர்.நல்லகண்ணு, மூத்த கம்யூனிஸ்ட் தலைவர்.

சிறுவயதிலேயே புத்தகங்கள் படிக்கிற ஆர்வம் எனக்கு ஏற்பட்டுவிட்டது. கதைப் புத்தகங்கள் படிப்பது, வார மாத இதழ்களில் வரும் கதைகளைப் படிப்பதென என் வாசிப்பு தொடர்ந்தது. வைகுண்டத்தில் நண்பர்களோடு சேர்ந்து ‘கலைத் தொண்டர் கழகம்’ எனும் அமைப்பை உருவாக்கினோம். அவரவர் வீட்டிலிருந்த நூல்களோடு, நாங்கள் காசு சேர்த்து சில புத்தகங்களையும் வாங்கி, சிறுநூலகமொன்றை அமைத்தோம்.

புதுமைப்பித்தன் கதைகளையும், வெ. சாமிநாத சர்மாவின் கட்டுரை நூல்களையும் விரும்பிப் படித்தேன். காண்டேகரின் கதைகளும், சுத்தானந்த பாரதியின் எழுத்துகளும் எனக்குப் பிடிக்கும். தி.ஜானகிராமன் தொடங்கி,ஜெயகாந்தன் வரை அனைவரது கதைகளையும் படித்திருக்கிறேன். ஜெயகாந்தனின் சில கதைகளைப் படித்துவிட்டு, அவரோடு அந்தக் கதைகள் பற்றி விவாதித்தும் இருக்கிறேன். ஜெயகாந்தனின் கதைகளில் வரும் அடித்தட்டு மக்கள் என் வாசிப்புக்கு மிகவும் நெருக்கமானவர்கள்.

கவிதைகளில் மகாகவி பாரதியாரும் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனும் எனக்குப் பிடித்தமானவர்கள். பாரதியின் கவிதைகளை எப்போது எனக்குத் தோன்றுகிறதோ அப்போ தெல்லாம் எடுத்துப் படிப்பேன். பாரதிதாசனும் அப்படித் தான். இவை தவிர, எனக்கு மிகவும் பிடித்த நூல் திருக் குறள். எனது பையில் எப்போதும் திருக்குறளோடு, பாரதி, பாரதிதாசன் கவிதை நூல்களையும் வைத்திருப்பேன். பயண நேரங்களிலும், ஓய்வாக இருக்கும்போதும் மறுபடிமறுபடி இந்த மூன்று நூல்களையும் படிக்கிறேன்.

புத்தகம் படிப்பதை எனது அன்றாடச் செயல்பாடுகளுள் ஒன்றாகவே நினைக்கிறேன். சுதந்திரத்துக்கு முந்தைய நாட்களில், தடை செய்யப்பட்ட கம்யூனிச நூல்களைத் தேடி போலீஸ் வரும். அவர்களிடமிருந்து காப்பாற்றுவதற்காகப் புத்தகங்களை அப்படியே கட்டாகக் கட்டி, வேறெங்காவது கொடுத்தனுப்பிவிடுவேன். பிறகு அந்த நூல்கள், என் கைக்கு வராமலேயே போய்விடும். இப்படியாக நான்குமுறை ஏராளமான புத்தகங்களை இழந்திருக்கிறேன். அதற்குப் பிறகு, வீடு மாறும்போதெல்லாம் எப்பாடுபட்டாவது புத்தகங்களையும் சேர்த்தே கொண்டுசென்றுவிடுவேன். சென்ற ஆண்டு சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் எங்கள் வீட்டு நூலகத்தின் பல நூறு புத்தகங்களும் அழிந்துபோயின.

எங்கள் வீட்டு நூலகத்தில் கம்யூனிச நூல்களோடு, அம்பேத்கர், காந்தி, பெரியார், பாரதிதாசன், ஜீவாவின் மொத்தத் தொகுதிகளையும் வைத்திருக்கிறேன்.

சமீபத்தில் மேன்மை வெளியீடாக வந்திருக்கும் கவிஞர் கே. ஜீவபாரதி எழுதிய ‘கண்ணோட்டம்’ என்கிற கட்டுரைப் புத்தகத்தைப் படித்தேன். கே. ஜீவபாரதியின் 100-வது நூலிது.

இந்நூலில், விடுதலைப் போராட்டத்தில் பாடப்பட்ட மகாகவி பாரதியின் ‘வந்தே மாதரம்’ என்ற பாடல் உருவான வரலாற்றையும், அந்தப் பாடலைப் பாடக் கூடாதென்ற பிரிட்டிஷ் ஆட்சியின் அடக்குமுறையையும் பற்றி ஒரு கட்டுரையில் சரியாகப் பதிவு செய்துள்ளார் ஜீவபாரதி. கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி.யின் மகன் வயிற்றுப் பேரனும் பேத்தியும் வீட்டுக்கு வாடகை கொடுக்க முடியாமல், மதுரையில் கோயில் வளாகத்தில் வசிக்கும் பரிதாபத்தைச் சுட்டும் கட்டுரை, 12 வயதில் கைது செய்யப்பட்ட நெல்லையைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட தியாகி அழகப்பிள்ளையின் மகள் கோதையம்மாள் 16 ஆண்டுகளாக தியாகி பென்ஷன் கிடைக்காமல் அல்லலுறும் நிலை போன்றவற்றைப் படிக்கும்போது மனம் கலங்குகிறது.

பல்வேறு இதழ்களில் வரும் கதை, கவிதைகளைத் தொடர்ந்து வாசித்துவருகிறேன். தற்காலச் சமூக நடப்பை இத்தகைய படைப்புகள் எவ்விதம் பதிவு செய்துள்ளன என்பதையும் கவனித்துவருகிறேன். நான் வாசிக்கும் புத்தகங்களும், தோழர்களுடனான உரையாடல்களுமே என்னை எப்போதும் உற்சாகத்தோடு இயங்கவைக்கின்றன.

- கேட்டு எழுதியவர்: மு.முருகேஷ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x