Published : 10 Jun 2017 09:51 AM
Last Updated : 10 Jun 2017 09:51 AM

தமிழக வரலாற்றில் ஐயனாரும் ஆசீவகமும்

இளைய தலைமுறையினர் பலர் இன்று தென்னிந்திய வரலாற்றில் ஆர்வம் காட்டுவதும் கட்டுரை எழுதுவதும் வரவேற்க வேண்டியதுதான்.

ஆனால், பெருவாரியானோர் அரைத்த மாவையே அரைத்துக்கொண்டிருகின்றார்கள். அவர்களுக்குத் தமிழில் புலமை இல்லாதது இதற்கு அடிப்படைக் காரணம். இதனால் தமிழ்க் கல்வெட்டுகளை, தொல்லிலக்கியங்களை முதன்மை ஆதாரங்களாக அவர்களால் பயன்படுத்த முடிவதில்லை. ஆகவே, காலனியக் காலத்துப் பாரம்பரிய வரலாற்றியல் நோக்கிலிருந்து நாம் மாறவில்லை. குறிப்பாகச் சொல்லப்போனால் ழூவோ துப்ராயிலின் பாதையிலிருந்து விலகாமல் போய்க்கொண்டிருக்கின்றோம். அதிலும் 10-ம் நூற்றாண்டுக்கு முன்பு தென்னகத்தில் தழைத்தோங்கியிருந்த பெளத்தம், சமணம் போன்ற சிரமண மதங்களைப் பற்றி ஆய்வோ சொல்லோடலோ மிகக் குறைவு. இவை சார்ந்த தொல்லெச்சங்களையும் நாம் கவனிப்புக்கு உள்ளாக்குவதில்லை. இந்தப் பின்புலத்தில்தான் க. நெடுஞ்செழியனின் இந்த நூல் சிறப்பு பெறுகிறது. இத்தளத்தில் தனது ஆய்வின் ஆழத்தையும் அக்கறையையும் ‘சங்க கால தமிழர் சமயம்’, ‘சித்தன்னவாசல்’ போன்ற நூல்கள் மூலம் ஏற்கெனவே அவர் வெளிப்படுத்தியிருக்கிறார்.

ஆசீவகத்தைப் பற்றி ஏ.எல். பஷாம் தனது ‘வியத்தகு இந்தியா’ (த வொண்டர் தட் வாஸ் இந்தியா, 1954) என்ற நூலில் ‘மறைந்து போன இந்திய சமயம்’ என்று குறிப்பிட்டு, 14-ம் நூற்றாண்டு வரை இந்தச் சமயம் தமிழகத்தில் வேரூன்றி இருந்தது என்று எழுதியது கல்விப் புலத்தில் சிறிது ஆர்வத்தைத் தூண்டியது. பின்னர் ர. விஜயலட்சுமி ‘தமிழகத்தில் ஆசீவகர்கள்’ என்ற நூலை எழுதினார். ' யாதும் ஊரே யாவரும் கேளிர்’ பாடலை எழுதிய கணியன் பூங்குன்றனாரை, அக்கவி தையின் உள்ளடக்கத்தை வைத்து ஒரு ஆசீவகராக இவர் அடையாளம் காண்கிறார். கோவலனும் கண்ண கியும் மடிந்த பின்னர் கண்ணகியின் பெற்றோர்கள் ஆசீவகர்களானார்கள் என்கிறது சிலப்பதிகாரம்.

நெடுஞ்செழியனின் இந்த நூல், விரிவான கள ஆய்வு, நூலாய்வு அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. ‘மதுரைக்காஞ்சி’, ‘மணிமேகலை’ நூல்களிலிருந்து அரிய வரலாற்று விவரங்களை கண்டெடுக்கிறார். வெகுசில ஆய்வாளர்களால்தான் தொல் இலக்கியங்களை வரலாற்று மூலாதா ரங்களாக இனங்கண்டுகொள்ள முடிகிறது. தொல்லியல், நாட்டார் வழக்காற்றியல் எனப் பல வகையான தரவுகளையும் இவர் பயன்படுத்தியுள்ளார். கோயில் சிற்பங்களில் யானை, ஆமை இவற்றைக் குறியீடுகளாக அடை யாளம் காண்கிறார். ஆகவே, இந்நூல் மிகுந்த கவனிப்புக்கு உரியதாகிறது.

‘ஏரிக்கொரு ஐயனார், ஊருக்கொரு பிடாரி’ என்ற சொலவடைக்கேற்ப தமிழக நிலவிரிவில் ஐயனார் கோயில்கள் பரவலாகக் காணக்கிடைக்கின்றன. இந்தக் கோயில்கள் ஆசீவகம் விட்டுச்சென்ற அடையாளங்கள் என்கிறார் நெடுஞ்செழியன். இந்தப் புள்ளியிலிருந்து ஆசீவகம் தோன்றியது தமிழகத்தில்தான் போன்ற தன் வாதங்களை முன்வைக்கிறார். மகாவீரரின் சம காலத்தவரான மக்கலி கோசலரால் நிறுவப்பட்ட இந்த மதத்துக்கு இந்தியாவில் பரவலாக ஆதரவு இருந்தது. “ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழர் வாழ்வைச் செம்மைப்படுத்திய சமயம் ஆசீவகம். தமிழ் இலக்கிய வரலாற்றிலும் இந்திய சமய வரலாற்றிலும் இந்தச் சமயம் வழங்கிய கொடை மகத்தானது” என்கிறார் நூலாசிரியர். இங்கு உருவாகி இந்தியாவெங்கும் பரவிய இந்தச் சமயத்தின் வரலாற்றில் திருவெள்ளறை ஒரு முக்கியமான இடம். தமிழகத்தில் ஆசீவகத்தின் தொல்லெச்சங்கள் இன்னும் உயிர்த்துடிப்புடன் இருக்கின்றன. ஆகவே, அவை ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டும் என்பது ஆசிரியரின் நிலைப்பாடு. இன்று கற்படுக்கைகளுடன் கூடிய சமணக் குகைகள் என்று தொல்லியலாளர்களால் அறியப்படும் பல பாறைக் குடில்கள் ஆசீவகத் துறவிகள் இருந்த இடங்கள்தான் என்பது நெடுஞ்செழியனின் நிலைப்பாடு.

வண்ண ஒளிப்படங்களுடன், இப்புத்தகம் சீரிய முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. சொல்லடைவு கவனிப்புடன் தயாரிக்கப்பட்டிருந்தாலும், நூலடைவு இல்லாதது ஒரு குறை. ஆய்வுக்கு ஒரு புதிய சாளரத்தை இந்தப் புத்தகம் திறந்துவைக்கிறது.

- சு. தியடோர் பாஸ்கரன், சூழலியல் ஆர்வலர், ‘சோலை எனும் வாழிடம்’, ‘கல் மேல் நடந்த காலம்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: theodorebaskaran@gmail.com

சு. தியடோர் பாஸ்கரன்

ஆசீவகமும் ஐயனார் வரலாறும்

க.நெடுஞ்செழியன்

விலை: ரூ. 600

வெளியீடு: பாலம் பதிப்பகம், சென்னை- 600102.

கைபேசி: 98949 67911

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x