Last Updated : 11 Sep, 2016 11:32 AM

 

Published : 11 Sep 2016 11:32 AM
Last Updated : 11 Sep 2016 11:32 AM

கவியின் கனவு

செப்டம்பர் 11 - பாரதியின் நினைவு நாள்

பாரதி கவியரசராக மட்டுமே விளங்காமல், மிகச் சிறந்த பத்திரிகையாளராகவும் தன்னிகரற்று விளங்கினார். பாரதியின் பத்திரிகை உலகத் தொடர்புகள் பரந்துபட்டவை; விதந்து பேசுவதற்கும் உரியவை.

எட்டயபுர வாழ்வில் ‘நியூஸ் பேப்பர் ரீடர்’ என்று அறிமுகமான பாரதி, பின்பு நெல்லை ‘சர்வ ஜன மித்திர’னிலும் மதுரை ‘விவேகபாநு’விலும் கட்டுரையும் கவிதையும் எழுதிப் பத்திரிகை உலகில் பிரவேசித்தார். 1904, நவம்பர் மாத இறுதிப் பகுதியில் சென்னைக்கு வருகை புரிந்த நிலையில், ‘சுதேசமித்திரன்’, ‘சக்ரவர்த்தினி’, ‘இந்தியா’, ‘Bala Bharat’, ‘Bala Bharata or young India’ ஆகிய தமிழ் ஆங்கிலப் பத்திரிகைகளில் துணை ஆசிரியர், ஆசிரியர் என்று பொறுப்புகளை வகித்து 1908, செப்டம்பர் மாத முற்பகுதி வரை பணிபுரிந்தார்.

சென்னை மாகாண அரசின் கெடுபிடி காரணமாக, சென்னையை விட்டுப் புதுச்சேரிக்கு அடைக்கலம் புகுந்த நிலையிலும், ‘இந்தியா’, ‘விஜயா’, ‘கர்மயோகி’, ‘Bala Bharata’, ‘தர்மம்’, ‘சூரியோதயம்’ போன்ற பல்வேறு பத்திரிகைகளில் ஏராளமாக எழுதினார்.

‘ராஜ்ய சாஸ்திரத்தில் வாளைக் காட்டிலும், எழுத்துக்கு மகிமை அதிகம்’ என்பதைப் பாரதி தாம் தொடர்புகொண்டிருந்த பத்திரிகைகள் எல்லாவற்றிலும் எழுதினார்.

ஒரு கட்டத்தில், பாரதியின் எழுத்துக்களில் ‘ராஜத்துரோக’க் கருத்துகள் இருப்பதாகக் கொண்டு, பிரிட்டிஷ் அரசு பத்திரிகைகளின் குரல்வளையை நெரிக்கப் பத்திரிகை அச்சுச் சட்டத்தை நடைமுறைப்படுத்தியது. இந்தச் சட்டத்தால், பாரதியின் பத்திரிகைப் பணிகள் 1910-ம் ஆண்டின் முற்பகுதியோடு முடக்கப்பட்டுவிட்டன.

சுமார் மூன்று ஆண்டு இடைவெளிக்குப் பின்னர், 1913-ம் ஆண்டு தொடங்கி, பத்திரிகைகளில் எழுத வாய்ப்புக் கிடைத்தது. அதுமுதல் ‘ஞானபாநு’, ‘The Hindu’, ‘New India’, ‘The Commonweal’, ‘ARYA’, ‘சுதேச மித்திரன்’, ‘கதாரத்னா கரம்’ ஆகிய பத்திரிகைகளின் மூலம் தம் எழுத்துப் பணிகளைப் பாரதி தொடர்ந்தார்.

1918 நவம்பர் 20 அன்று பாரதி புதுச்சேரியை விட்டுக் கிளம்பி, பிரிட்டிஷ் எல்லையில் நுழைந்தவுடன் கைதுசெய்யப்பட்டார்; சில நாட்கள் சிறையில் இருந்தார்; பின் விடுதலை பெற்று, மனைவியின் ஊரான கடையம் சென்று அங்கே சில காலம் வாசம் செய்தார்.1920 செப்டம்பர் மாதம் மீண்டும் ‘சுதேசிமித்திர’னில் சேர்ந்து, சென்னைவாசியாகிவிட்டார். இதனிடையில் ‘தேசபக்தன்’, ‘தனவைசிய ஊழியன்’- ஆகிய இரு பத்திரிகைகளிலும் பாரதியின் படைப்புகள் அணிசெய்தன.

இதழியலின் புதுமை நாயகன்

தமக்கு முன்பின் பழக்கமே இல்லாத பத்திரிகை உலகில் காலடி பதித்த பாரதி, தாம் பொறுப்பு வகித்த பத்திரிகைகள் எல்லாவற்றிலும் புதுமைகளைப் புகுத்தினார்; புதிய உத்திகளைக் கையாண்டு, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார். மேனாட்டுப் பத்திரிகைகளுக்கு இணைசொல்லும்படி தமிழ்ப் பத்திரிகைகள் சிறந்து விளங்க வேண்டும் என்று பேராசை கொண்டிருந்தார் பாரதி. அதன் விளைவாகப் புதுச்சேரி வாழ்வில் உதயமான ‘சித்ராவனி’ மற்றும், கடைய வாசத்தின்போது உதயமான ‘அமிர்தம்’ என்ற பாரதியின் பத்திரிகை முயற்சிகள் ‘பொய்யாய்ப் பழங்கதையாய்க் கனவாய்’ முடிந்துவிட்டன.

புதுச்சேரி வாழ்வில் தொடங்க ஆசைப்பட்ட பத்திரி கையின் பெயர்தான் ‘சித்ராவனி’. இதை 1909-ம் ஆண்டின் பிற்பகுதியிலிருந்து ‘இந்தியா’ பத்திரிகை அலவலகத் திலிருந்தே தொடங்கப் பாரதி விரும்பினார். ‘இந்தியா’ பத்திரிகையில் பிரசுரமான ‘சித்ராவனி’ பற்றிய விளம்பரம் வருமாறு:

சித்ராவனி

சீக்கிரத்தில் வெளியாகும்!

சீக்கிரத்தில் வெளியாகும்!

தங்கள் பெயரை ரூபாய் அனுப்பி,

சீக்கிரத்தில் பதிவு செய்துகொள்ளுங்கள்.

சித்திரத் தொகுதியால் உதாகரிக்கப்பட்ட

மாதாந்தரப் பத்திரிகை.

இங்கிலீஷிலும் அடங்கி உள்ளது

ரொம்பவும் குறைந்த சந்தா:

வருஷம் 1க்கு ..... ரூ. 3-0-0

தனிப்பிரதி ..... ரூ. 0-4-0

வேண்டியவர்கள் கீழ்கண்ட விலாசத்திற்கு எழுதிப் பெற்றுக் கொள்ளலாம். மாதிரி காப்பி வேண்டுவோர் நாலணா ஸ்டாம்ப் அனுப்பிப் பெற்றுக்கொள்ளலாம்.

மானேஜர்

‘இந்தியா’ ஆபீஸ்

புதுவை.

இந்த விளம்பரத்தில் தெரிவித்தபடி பத்திரிகை வெளிப் படவில்லை. அடுத்து, கடைய வாழ்விலும் - பாரதியால் பத்திரிகை ஆசையை அடக்க முடியவில்லை. பத்திரிகை தொடங்குவதற்கான முன்னேற்பாடுகளில் மிகவும் தீவிரமாக ஈடுபட்டார்.

‘அமிர்தம்’ பத்திரிகை 1920 செப்டம்பர் முதல் தேதியில் வெளியாகும் என்னும் விளம்பரத்தின் மூலம் பாரதி அறிவிக்கவும் முற்பட்டார்.

‘சுதேசமித்திர’னின் 2-8-1920-ம் தேதியிட்ட பத்திரிகை யில் வெளியான விளம்பர விவரம் தெரிவிக்கும் ‘அமிர்தம்’ பத்திரிகையின் அமைப்பு முறைத்திட்டம் வருமாறு:

அமிர்தம்

1. இது ஒரு பக்ஷாந்த பத்திரிகை; இரண்டு வாரத்துக்கொருமுறை பிரசுரமாகும்.

2. இதன் பத்திராதிபர் மஹா கீர்த்திபெற்ற மான் சி. சுப்பிரமணிய பாரதி.

3. இதில் எழுதப்போகிற விஷயங்கள்:

1. உலக முழுதிலும் அப்போதப்போது நடக்கும் செய்திகள் தெளிவான விளங்கங்களுடனும், சித்திரங்களுடனும் வெளியிடப்படும்.

2. ஐரோப்பிய, ஆசிய, ஆப்ரிக, ஆஸ்திரேலியப் பத்திரிகைகளிலே வெளிவரும் ஆச்சரியங்கள் எடுத்துக் காட்டப்படும்.

3. விநோத வார்த்தைகள்

4. ஆச்சரியமான கதைகள்

5. நீதி

6. இனிய பாட்டுக்கள்

7. ஸ்தோத்ரங்கள்

8. வியாபாரச் செய்திகள்

9. கைத்தொழில் செய்திகள்

10. மாதர்களுக்கும் குழந்தைகளுக்கும் வேணடிய ஸமாசாரங்கள்

11. சரீர சௌக்யம், கிராம சுத்தி முதலியனவற்றைக் குறித்த விஷயங்கள்

12. தெய்வ பக்தி, ஜீவகாருண்யம் - இவற்றை மிகுதிப்படுத்தக்கூடிய விஷயங்கள் - முதலியன ஒவ்வொரு பதிப்பிலும் தவறாமல், படிப்போருக்கு மேன்மேலும் அற்புதமும், ஆவலும் தோன்றும்படி வெளியிடப்படும்.

4. விசேஷ குணங்கள்:

* நல்ல தாள்

* தெளிவாக யாரும் எளிதில் வாசிக்கக்கூடிய எழுத்து

* தவறில்லாத பதப் பிரிவு

* பிழையில்லாத அச்சு

* உண்மை தவறாத செய்திகள்

* ஸர்வ ஜன ரஞ்சனை

* மிகவும் நன்றாகக் குழந்தைகளுக்கும் பொருள் விளங்கக்கூடிய இனிய செந்தமிழ் நடை

* எப்போதும் வற்றாத இன்பந் தருதல்

* எக்காலமும் அழியாத உடைமையாதல்

இவை இந்தப் பத்திரிகையின் புதிய விசேஷ குணங்களிலே சிலவாம்.

5. நோக்கங்கள்:

1. ஐரோப்பா, அமெரிக்கா முதலிய இடங்களில் பத்திரிகை படிப்போருக்குக் கிடைக்கும் உலக ஞானமும், செய்தித் தொகையும், அறிவுப் பயிற்சியும், மன இன்பமும் தமிழ்நாட்டில் பத்திரிகை படிப்போருக்குக் கிடைக்கும்படி ஏற்பாடு செய்தல்.

2. உலகத்தாருக்குள்ளே ஒற்றுமையும், அன்பும் விளை வித்தல்.

3. தேவ பக்தியால் இஹலோக வாழ்க்கையில் அமரப் பயனெய்த வழிகாட்டுதல்.

இப்பத்திரிகை 10 பக்கங்களுடையது

இதன் வருஷ சந்தா ரூ. 4-0-0

ஆறு மாஸத்துக்கு முன்பணம் ரூ. 2-0-0

மூன்று மாஸத்துக்கு ரூ. 1-0-0

இது செப்டம்பர் (1920) முதல் தேதி தொடங்கி ப்ரசுரம் செய்யப்படும் வேண்டுவோர் உடனே பின்வரும் விலாஸத்துக்கு உத்தரவும் முன் பணமும் அனுப்ப வேண்டும்.

கார்யதரிசி,

‘அமிர்த’ ஸ்தானம்

கடையம் (திருநெல்வேலி ஜில்லா)

கைகூடாத கனவு

நம் அருமை நண்பரான சீனிவார வரதன் என் பாருக்குப் பாரதி இரண்டு கடிதங்கள் எழுதினார். அவற்றில், இயன்றவரை சந்தாக்கள், நன்கொடை, கடன் பணம், கையிலுள்ள பொருள், சொத்தை விற்றும் மூலதனத் துக்குரிய தொகை எல்லாவற்றையும் சேர்த்துக்கொண்டும் கடையத்துக்கு நேரில் வரும்படியும் எழுதியிருந்தார்.

ஆனால், சீனிவாச வரதனிடமிருந்து எந்த அளவுக்கு உதவி கிடைத்தது என்பதற்கான செய்தியை அறிய முடியவில்லை. ஆனால், பாரதி தாமே தன் நண்பர்களையும், தெரிந்தவர்களையும் அணுகிப் பண வசூலில் ஈடுபட்டார். “அமிர்தம் - நன்கொடையாள் பதிவு” என்பதாகக் குறிப்பிட்டு வசூலில் ஈடுபட்டதற்கும் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை.

பாரதியே தம்கைப்பட எழுதி, வசூல்செய்த தொகைக்கான விவரத்தையும், நண்பர்கள் - தெரிந்தவர்களுக்கான விவரத்தையும் பதிவுசெய்துள்ளார். நன்கொடை தருவதாகப் பதினெட்டு பேர் வாக்குறுதியளித்தனர். ஆனால், எட்டு நபர்களே தொகை வழங்கினர். வசூலான தொகை ரூ. 14-9-0 மட்டுந்தான்.

பாரதி ஆசையாகத் திட்டமிட்டுத் தொடங்கிய ‘அமிர்தம்’ பத்திரிகையின் முயற்சி நிராசையாகவே முடிந்துவிட்டது. இம்முயற்சி பாரதிக்கு ஏற்பட்ட தனிப்பட்ட நஷ்டம் என்று சொல்வதைவிடப் பத்திரிகை உலகுக்கு ஏற்பட்ட மகத்தான நஷ்டம் என்றே சொல்ல வேண்டும்.

பாரதியே தம்கைப்பட எழுதி, வசூல்செய்த தொகைக்கான விவரத்தையும், நண்பர்கள் - தெரிந்தவர்களுக்கான விவரத்தையும் பதிவுசெய்துள்ளார். நன்கொடை தருவதாகப் பதினெட்டு பேர் வாக்குறுதியளித்தனர். ஆனால், எட்டு நபர்களே தொகை வழங்கினர். வசூலான தொகை ரூ. 14-9-0 மட்டுந்தான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x