

உலகில் இதுவரை எங்குமே பயணம் செய்யாத மனிதரென்று யாராவது இருக்க முடியுமா என்றால் நிச்சயம் சந்தேகம்தான். மனித வாழ்க்கை என்பதேகூட பயணங்களின் தொகுப்பாகத்தானே இருக்கிறது. ஒரே இடத்தில் தேங்கி நிற்கும் நீர் சாக்கடையாக மாறிவிடுவதைப் போலவே, எங்கும் பயணமே மேற்கொள்ளாத மனிதர்களின் வாழ்வும் சூம்பிப்போய்விடுகிறது. சில தனிமனிதர்களின் தீராத் தேடலும், எதையாவது புதிதாகச் செய்ய வேண்டுமென்கிற ஆசையுமே அவர்களைப் பயணத்தை நோக்கி வழிநடத்திய சக்தியாக இருந்திருக்கிறது. ஆதி முதல் கி.பி.1435 வரையில் உலகெங்கும் பயணித்த சிலரின் பயணங்களைப் பதிவு செய்துள்ளது இந்நூல். அலெக்ஸாண்டர், ஃபாஹியான், யுவான் சுவாங், மார்க்கோ போலோ, இபின் பதூதா போன்றவர்களின் பயணங்கள் நமக்குச் சிலிர்ப்பு ஏற்படுத்துகின்றன. நூலின் இடையிடையே இடம்பெற்றுள்ள படங்களும் வடிவமைப்பும் வாசிப்புக்கு வேகம் கூட்டுகின்றன. வரலாற்றுக் காலத்தில் இந்தியாவிலிருந்து குறிப்பிட்டுச் சொல்லத்தக்க பயணி ஒருவர்கூட வெளிதேசங்களுக்கு ஏன் செல்லவில்லை என்று நூலாசிரியர் எழுப்பியிருப்பது மிக முக்கியமான கேள்வி.
பயண சரித்திரம்
முருகு
விலை: ரூ. 333
சிக்ஸ்த்சென்ஸ்,
சென்னை-600017
போன் : 044-24342771