தீபத்தின் இயல்பைக் கண்டறிந்த விட்டில் பூச்சி

தீபத்தின் இயல்பைக் கண்டறிந்த விட்டில் பூச்சி
Updated on
1 min read

விளக்கு-வெளிச்சம் நோக்கி விட்டில் பூச்சிகள் (பட்டாம்பூச்சிகள்-Moths) ஈர்க்கப்படுவதை காதல், தன்னிலை மாற்றம் அல்லது உண்மையை நோக்கிய பெருந்தேடல் ஆகியவற்றுக்கு உருவகமாக கவிஞர்கள், ஓவியர்கள், தத்துவச் சிந்தனையாளர்கள் காலம்காலமாகக் கூறி வந்துள்ளனர். ஃபரித் உத் தின் அத்தர் எழுதிய ‘மகாமத் உத் துயுர்' (பறவைகளின் மாநாடு) என்ற பெர்சிய உரைநடை காவியத்தில் பட்டாம்பூச்சிகளைப் பற்றிய கீழ்க்கண்ட கதை உள்ளது:

ஓர் இரவில் மெழுகுவர்த்தியின் உண்மையைக் கண்டறிய பட்டாம்பூச்சிகள் ஒன்றுகூடின. தங்களில் ஒருவர் அந்த விளக்கொளி குறித்து தீர ஆராய வேண்டும் என்று முடிவு செய்தன. ஓர் இளம் பட்டாம்பூச்சி அதற்காகப் பறந்து சென்றது. தொலைவில் ஓர் அரண்மனையில் ஒரு மெழுகுவர்த்தி எரிவதைத் தொலைவில் இருந்து பார்த்தது. தான் கண்டதைச் சொல்வதற்காக அது திரும்ப வந்தது. ஆனால், அது கண்டறிந்ததில் எந்த மதிப்பும் இல்லை என்று பட்டாம்பூச்சிகளின் வழிகாட்டியான ஒரு மூத்த பட்டாம்பூச்சி கூறிவிட்டது.

பிறகு மற்றொரு பட்டாம்பூச்சி மெழுகுவர்த்தி தீபத்தைக் காணச் சென்றது. அது தீபத்தைக் கண்டறிந்தவுடன் ஒளிவட்டத்தைச் சுற்றி வந்தது, பிறகு தனது அனுபவத்தைக் கூறுவதற்காக அது திரும்பியது. அதைக் கேட்ட வழிகாட்டி பட்டாம்பூச்சி தலையை ஆட்டி, தீபத்தினுடைய பிரகாசத்தின் ஆழத்தையும் உண்மையையும் அறிந்துகொண்டதற்கான எந்த அறிகுறியும் அதனிடம் தென்படவில்லை என்றது.

மூன்றாவதாக மற்றொரு பட்டாம்பூச்சி பறக்கத் தொடங்கியது. தீபத்தைச் சுற்றிப் பித்துப் பிடித்தது போல அது நடனமாடத் தொடங்கியது. எந்த அளவுக்குச் சென்றது அது என்றால், சீக்கிரத்திலேயே அதன் மொத்த உடலையும் அந்த தீப ஒளி சூழ்ந்து எரிக்கும் அளவுக்கு.

மெழுகுவர்த்தியின் சுடர் சட்டென்று கூடுதலாகப் பிரகாசித்ததைக் கண்ட வழிகாட்டி பட்டாம்பூச்சி, அந்த தீபத்துக்கு தன்னையே கொடுத்துவிட்டதன் மூலம், அவர்கள் தேடிய உண்மையை மூன்றாவது பட்டாம்பூச்சி கண்டடைந்துவிட்டது என்று கூறியது.

©: ப்ரண்ட்லைன்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in