

புகழ்பெற்ற அறிவியல் புனைகதை எழுத்தாளர் ரே பிராட்பரி எழுதிய முக்கியமான நாவல் ‘ஃபாரென்ஹீட் 451’. ‘புத்தகங்கள் தடைசெய்யப்பட்ட எதிர்காலத்தில்' நடப்பதாக எழுதப்பட்ட அந்த நாவலின் நாயகன் தீயணைப்பு வீரன். யார்யாரெல்லாம் புத்தகங்களை வைத்திருக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடித்து, அவர்கள் வீட்டுக்குச் சென்று அந்தப் புத்தகங்களை எரிக்கும் பணியில் இருப்பவன். புத்தகத்தின் மேல் அவனுக்குக் காதல் ஏற்பட்டால் என்னவாகும்?
இதுதான் அந்த நாவலின் கதை. புத்தகங்களை எரிப்பதும், புத்தகங்களைத் தடைசெய்வதும் நம் சமூகத்திலும் இயல்பான ஒன்று. இந்தப் பின்னணியில் ஃபாரன்ஹீட்-451 நாவல் நம் சமூகத்துக்கு மிகவும் பொருத்தமாக இருக்குமல்லவா! ஆல்பெர் காம்யு, சார்த்ர், ழாக் பிரெவர், எக்சுபெரி போன்றோரின் படைப்புகளை பிரெஞ்சு மொழியிலிருந்து தமிழில் நேரடியாக மொழிபெயர்த்து, தமிழ்ப் படைப்புலகில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியவர் வெ. ஸ்ரீராம்.
தற்போது ‘ஃபாரன்ஹீட்-451’ நாவலை அவர் தமிழில் மொழிபெயர்த்துவருகிறார். இந்தப் புத்தகக் கண்காட்சியில் ‘ஃபாரன்ஹீட்-451’ நாவல் முக்கியமான வரவாக இருக்கும்!