Last Updated : 15 Apr, 2017 10:24 AM

 

Published : 15 Apr 2017 10:24 AM
Last Updated : 15 Apr 2017 10:24 AM

ஞானியின் உலகம்: என் நண்பர்கள்

நான் இவ்வளவு முயற்சிகளில் தனியனாக இருந்து ஈடுபடவில்லை. அருமையான நண்பர்கள் எனக்கு வாய்த்திருந்தனர். இவர்கள் பற்றி இங்கு சுருக்கமாகச் சொல்ல வேண்டும். 1968-70 வாக்கில் கோவையில் என்னைச் சூழ்ந்திருந்த நண்பர்கள் குறித்துச் சொல்கிறேன். மாலை நேரங்களில் என் வீட்டில் ஒரே கலகலப்பாக இருக்கும். அறிவன், ஆறுமுகம், அமரநாதன், வசந்தகுமார், சுகுமாரன், நிமல விசுவநாதன், இரத்தினம் ஆகியவர்களில் ஒருசிலர் நாள்தோறும் என்னைச் சந்தித்து உரையாட வருவார்கள்.

இந்த நண்பர்களைக் கொண்டுதான் ‘களம்’ என்ற அமைப்பு தோன்றியது. ஞாயிற்றுக்கிழமைதோறும் சிதம்பரம் பூங்காவில் ‘களம்’ கூட்டம் நடைபெறும். தமிழ் இலக்கியம் பற்றி, குறிப்பாக சிறுகதைகள், நாவல்கள் பற்றி விவாதங்கள் நடைபெறும். உண்மையில் இந்த நண்பர்கள் குழுதான் என்னையும் உருவாக்கியது என்று சொல்ல வேண்டும்.

1965 முதற்கொண்டே எஸ்.என். நாகராசன், எஸ்.வி. ராஜதுரை, புலவர் ஆதி ஆகியவர்களோடு எனக்கு ஆழமான உறவு ஏற்பட்டது. கூடவே நஞ்சப்பன், வேங்கடராமன் முதலியவர்களும் இந்தக் குழுவில் இருந்தனர். நாகராசன் மார்க்சியத்தில் தேர்ந்த அறிஞர், எங்களுக்கு வாய்த்தது பெரும்பேறு. மார்க்சியத்தை ஆழமாகக் கற்றுக்கொள்ளும் வாய்ப்புகள் அப்போதுதான் நேர்ந்தன. ‘புதிய தலைமுறை’ என்ற இதழ் நடத்தினோம். தமிழுக்கு முற்றிலும் புதிய ஒரு மார்க்சிய இதழ் இது. காவலரின் பார்வைக்கும் இந்த இதழ் உரியதாயிற்று. அதன் விளைவுகள் பல.

இதன் பிறகு ‘இலக்கு’ கலாச்சார இயக்கம் 1978 வாக்கில் இந்த இயக்கம் தோன்றியது. இதன் மூலவராக தமிழவன் இருந்தார். பெங்களூருவிலிருந்து வெளிவந்த ‘படிகள்’ என்ற இதழை தமிழவனும் ஜி.எஸ்.ஆர். கிருஷ்ணனும் ஜி.கே. இராமசாமியும் நடத்தினர். மார்க்சியத்தின் போதாமை குறித்தும் கட்டுரைகள் வெளியாயின. தமிழவன், அமைப்பியல்வாதத்தை முன்வைத்தார்.

இவர்களோடு இலக்கிய வெளிவட்டம் சார்பில் நடராசனும், ராஜ்கவுதமனும் இணைந்தனர். வணிகக் கலாச்சாரத்துக்கு எதிராக மக்கள் கலாச்சாரத்தை ஊக்குவிப்பது என்பது இயக்கத்தின் நோக்கம். இதில் கலந்துகொண்ட நண்பர்களின் வட்டம் பெரியது. திருச்சியிலிருந்து பூரணச்சந்திரன், ஆல்பர்ட் முதலியவர்கள். நிறைய கருத்தரங்குகள் நடைபெற்றன. உண்மையில் தமிழ்ச் சிந்தனை இந்த இயக்கத்தின் மூலம் பெரிதும் விரிவுபெற்றது. தமிழ் இலக்கிய வரலாற்றில் ‘இலக்கு’ இயக்கத்தை மறக்க இயலாது. இவர்களோடெல்லாம் எனக்கு ஆழ்ந்த நட்புறவு இருந்தது. மார்க்சியத்துக்கு அப்பாலும் என் படிப்பறிவு விரிவடைந்தது இவர்கள் மூலம்தான். என் வாழ்வின் உச்சம் என இக்காலத்தைத்தான் குறிப்பிட வேண்டும்.

‘தமிழ்நேயம்’ இதழை ஆரம்பித்தபோது புதிய நண்பர்கள் கூட்டம் சேர்ந்தது. இவர்கள்தான் இன்றும் எனக்கு உறவாக இருப்பவர்கள். இவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் பிலிப், சுதாகர் மற்றும் நளினிதேவி. இவர்களோடு முத்துக்குமார், ஜவகர் பற்றிச் சொல்ல வேண்டும்.தொடக்கத்தில் அதாவது 65 -70 காலகட்டத்தில் சி.சு. செல்லப்பா, க.நா.சு., சிட்டி ஆகியவர்களின் நட்பு எனக்கு வாய்த்தது. இவர்களோடு நான் கொண்ட நெருக்கம் மிக எளியது.

தொடக்கத்தில் வெங்கட் சாமிநாதன், பிரமிள் ஆகியவர்கள் என்னைக் கடுமையாக விமர்சனம் செய்தனர். சில ஆண்டுகள் கழிந்த பின்னர் இவர்களோடு எனக்கு நேரிடையான பழக்கம் ஏற்பட்டது. அப்போதுதான் அவர்களைப் பற்றிச் சரியான புரிதல் எனக்கு வாய்த்தது. கூர்மையான விமர்சனங்களுக்கு அடியில் அவர்களின் குழந்தை மனம் தென்பட்டது. நண்பர் என்ற முறையில் இவர்கள் என்னை ஆரத் தழுவிக்கொண்டனர். இவர்கள் அனைவரும் தமிழிலக்கியத்துக்கு வாய்த்த பெரும்பேறு என்று சொல்ல வேண்டும். தமிழுக்கு முற்றிலும் புதியதான பார்வையைத் தந்தவர்கள் இவர்கள். திறனாய்வு என்பதற்குச் சரியான பொருள் இவர்கள் மூலம்தான் தமிழுக்குக் கிடைத்தது. பல்கலைக்கழகப் படிப்பு இவர்களுக்கு இல்லை என்றாலும் பல்கலைக்கழகத்தில் பெரும் பதவி வகிக்கத்தக்க ஆளுமை உடையவர்கள். இவர்களை ஒதுக்கிவைத்துவிட்டு இன்று தமிழிலக்கியம் பற்றிப் பேச முடியாது.

இவர்களுக்கு அப்பால் எனக்கு வாய்த்த மரியாதைக்குரிய நண்பர் திரு எஸ்.பொ. (எஸ். பொன்னுத்துரை) பற்றிச் சொல்ல வேண்டும். ஈழத்தில் பிறந்து, இந்தியாவில் கல்வி கற்று, மார்க்சிய இயக்கத்தில் ஆழம் பெற்று, கட்சி மார்க்சியரால் ஒதுக்கப்பட்டு, அற்புதமான படைப்புகள் பலவற்றைப் படைத்தவர் எஸ்.பொ. ஆனால், கைலாசபதி முதலியவர்களைச் சரியான காரணத்தோடு விமர்சனம் செய்திருந்தாலும் கைலாசபதியின் நண்பர்கள் அவரைக் கடுமையாக ஒதுக்கி வைத்திருந்தனர்.

‘வரலாற்றில் வாழ்தல்’ என்பது அவர் தன் சரிதம் பற்றி எழுதிய 2,000 பக்க அளவிலான பெரிய நூல். இந்த நூலில் எஸ்.பொ.வின் தன் வரலாறு மட்டுமல்ல, ஈழத்தில் தமிழ் வரலாறு, இலங்கையில் அரசியல் வரலாறு, இந்தியாவில் காந்தி முதலியவர்களின் வரலாறு, மார்க்சியத்தின் வரலாறு எனப் பல பரிமாணங்களைக் கொண்டது இவரது நூல். எஸ்.பொ.வின் இந்த நூலுக்கு நிகராக இன்னொரு ‘தன் வரலாற்று’ நூலைக் குறிப்பிட முடியாது.

‘நட்பின் பெருந்தக்க யாவுள’ என்பது போல என் ஆளுமையின் வளர்ச்சிக்கு இவர்கள் எல்லாம் பங்களிப்பைத் தந்தவர்கள். இவர்கள் என்றும் என் நன்றிக்குரியவர்கள்.

(தொடரும்)
கோவை ஞானி, மூத்த எழுத்தாளர்,
மார்க்ஸிய அறிஞர்,
தொடர்புக்கு: kovaignani@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x