

சிறுகதைகள் அருகிவரும் சூழலில் ஜி. மீனாட்சி பெயரைப் புதிதாக அறிய நேர்ந்தது. நல்ல தமிழில் எழுதியிருப்பது மகிழ்ச்சி தருகிறது. கதைக் கருக்கள் எளிமையானவை. மிக நுட்பமான விஷயங்களைப் பேச அவ்வளவாக சிரமமற்ற சம்பவங்களை அவர் தேர்ந்திருப்பது ஆச்சரியம் தருகிறது. மாறியிருக்கிற சமூகச் சூழல் நம்மிடம் விட்டுச் செல்லும் பிரச்சினைகளைத் தகுந்த கோணத்தில் படைப்புகளாக்கியுள்ளார்.
கதைகள் முதலில் சம்பவ அடுக்குகளாக அமைகின்றன. கதை இன்ன விஷயத்தில்தான் இயங்குகிறது என்பதை அந்தச் சம்பவங்களின் ஊடாக முதலில் அறிய முடியவில்லை. கடைசிக் கட்டத்தில்தான் முடிச்சு அவிழ்கிறது. கதையின் கட்டுமானத்தை அதன் பிறகு சரியென்று நாம் ஒப்புக்கொள்கிறோம்.
தெளிவற்ற பாவனையில் இயங்கி ஒரு தெளிவைத் தருவதும் புதிய பாணியாகும். இது ஒருவகையான படைப்புத் தந்திரம். அவளுக்கென்று ஓர் மனம், கிராமத்து ராட்டினம் போன்ற கதைகள் இதற்கு எடுத்துக்காட்டுகள்.
கிராமத்து ராட்டினம் கதை நெடும்போக்காக வந்து இறுதியில் நகர - கிராம வாழ்க்கையின் ஒப்பீடாகிறது. அது நுட்பமான மன இயல்புகளை எடுத்துரைப்பதால் கதையுடன் நாம் ஒன்றுகிறோம்.
இதன் மறுபக்கம் என்னவெனில், பாத்திர வகைமைகளைக் கவனத்தில் எடுத்துக்கொள்ளாமலிருப்பது. ஆனால் சொல்லவரும் நேரடித் தன்மைக்குள் கதை பயணமாகும்போது அந்தக் குறை நேர்வதில்லை. சிறகொடிந்த பறவைகள் கதை இதற்கு நல்ல உதாரணம். நாகரிகச் சமூகம் பெற வேண்டிய உயரிய பண்புகளை, அந்த நாகரிகச் சமூகத்தின் கல்விமுறையே அழித்து எப்படிச் சின்னாபின்னப்படுத்துகிறது என்பதை ஒரு குடும்பத்தின் அன்றாடச் சம்பவங்களில் காட்டுகிறார்.
மதிப்பெண்களைக் குறிவைத்து மாணவப் பருவம் இயந்திரமயமாக்கப்படுவதைப் பிரச்சாரத் தன்மையில்லாமல் உணரவைக்கிறார்.
தாய் மனசு, காக்கைக்கும் தன்குஞ்சு கதைகள் இரண்டும் உளவியல் ரீதியிலானவை. அவரவர் மனநிலையைப் பிரதிபலிப்பதில் இன்னும் கொஞ்சம் கவனம் வைத்துச் செதுக்கியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.
நவீன காலத்தின் பிரச்சினைகளைக் கூர்ந்து கவனித்து அவற்றிற்குரிய கலை வடிவத்தை வழங்கியிருப்பதில் ஜி. மீனாட்சி கவனத்திற்குரிய இடத்தைப் பெற்றிருக்கிறார்.
கிராமத்து ராட்டினம் - ஜி. மீனாட்சி
வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்
41-B, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்
அம்பத்தூர், சென்னை - 600098
பக்கங்கள்: 118 விலை: ரூ.
தொடர்புக்கு: 044-26251968