Last Updated : 19 Oct, 2013 02:46 PM

 

Published : 19 Oct 2013 02:46 PM
Last Updated : 19 Oct 2013 02:46 PM

குழந்தைமையின் கவித்துவம்

முகுந்த் நாகராஜனின் கவிதைகள் கவித்துவம் நிரம்பியவை. கவித்துவத்தை வருணிப்பது சிரமம். இவருடைய கவிதைகளில் குழந்தைகள் அடிக்கடி வருகிறார்கள். குழந்தையின் பார்வையில் மற்றவை; மற்றும் மற்றவர்கள் குழந்தையையும், குழந்தை சம்பந்தப்பட்ட விஷயங்களையும் பார்க்கும் பார்வை எனக் கூறலாம். 'விளையாட்டாக' என்றொரு கவிதை

ஓடுவது, துரத்துவது

வீசி எறிவது

குறிபார்த்து அடிப்பது

பிடிப்பது, தப்பிப்பது

மறைந்து கொள்வது

சுற்றுவது, சறுக்குவது

மூச்சுவாங்குவது

விளையாடி வாழ்க்கைக்கு

தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்

சிறுவர், சிறுமியர்

இக்கவிதையில் சிறுவர்,சிறுமியர்களின் விளையாட்டை, வேடிக்கைகளை உருவகங்களாக மாற்றிவிடுகிறார் கவிஞர்.

''ஒன்றாம் வகுப்பு F செக்ஷனுக்கு வந்த போலீஸ் நாய்” என்ற கவிதை ஒரு கவித்துவச் சித்தரிப்பு. உள்ளூர கிண்டலைக் கொண்டிருக்கிறது. வெடிகுண்டு புரளியைத் தொடர்ந்து அந்தக் குழந்தைகள் பள்ளிக்குள் போலீஸ் நுழைகிறது. ஒன்றாம் வகுப்பு F செக்ஷனில் மோப்பநாய் சோதனை நடத்திய போது எடுத்த படம் மறுநாள் வெளியாகிறது. அடுத்து படத்தின் சித்தரிப்பைக் காட்டுகிறார். ஒரு கையில் நோட்டுப்புத்தகம், பென்சில், இன்னொரு கையில் பள்ளிக்கூடப் பையுடன் சிறுமி ஒருத்தி, பெஞ்ச் மேல் ஏறி குதூகலமாய் நின்று கொண்டிருக்கிறாள். அவள் எடுக்காமல் விட்ட ரப்பரையும், மூடாமல் விட்ட பென்சில் பெட்டியையும் வெடிகுண்டைத் தேடும் நாய் நெருங்கி முகர்ந்து கொண்டிருக்கிறது. அந்தச் சிறுமி முகத்தில் தோன்றும் பரபரப்பு போலீஸ்கார ரின் சலிப்பை பலமடங்கு ஈடுசெய்கிறது என்று கவிதையை முடிக்கிறார் கவிஞர். போலீஸ்காரரின் சலிப்பை பலமடங்கு ஈடுகட்டும் விதத் இருக்கிறது அந்தப் பரபரப்பு. உள்ளூரக் கிண்டல் தொனிக்கும் அருமையான சித்தரிப்பு.

உயிர்மை ஏப்ரல் 2012 இதழில் நான் படித்த முகுந்த் நாகராஜனின் 'ஒண்டிவீரன் பயணம்' என்ற கவிதையும், 'இருக்கை எண் 59.3' என்ற கவிதையும், படித்த நாள் முதல் என் கூடவே இருந்து கொண்டிருக்கிறது. இவ்விரு கவிதைகளும் எனக்குக் கவித்துவப் பரவசத்தை உருவாக்கியது. இனி ஒண்டிவீரன் கவிதையின் சாரம்:

கார்த்திகா, அப்போதுதான் எழுதப்படிக்க பழகியிருந்ததால் எழுத்துகளைப் பார்த்தால் வாய்விட்டுப் படிக்கத் தொடங்கி விடுகிறாள். கடை போர்டுகள், சுவரொட்டிகள், பேருந்து வழித்தடங்கள் இத்யாதி என உரக்கப் படித்துக்கொண்டே அப்பாவுடன் போகிறாள். அந்த நாளில் தாமிரபரணியில் குளிக்கப்போகும் போது படித்த 'கமல்ஹாசன் நடிக்கும் ஒண்டிவீரன்' சுவர் விளம்பரத்தை தற்போதைய கார்த்திகா 25 வருஷம் கழிது கணவனிடம் சொள்கிறாள். அப்படி ஒரு கமல் படமா என்று இணையத்தில் தேட, ஒண்டிவீரன் கமல் என்ற பெயரில் 'நெல்லை அப்பன்' என்கிற நெல்லையப்பனின் குழுமம் காணக்கிடைக்கிறது. கார்த்திகா, தீர்மானமாகச் சொல்கிறாள், 'எங்கள் கிளாஸ் 'நெல்' ஆகத்தான் இருக்கும் என்று. ராட்டினம் 25 வருஷம் சுற்றி ஒண்டிவீரன் விளம்பரம் எழுதியிருந்த சுவர் பக்கமாகத் திரும்பி நிற்கிறது. கவிதை முடிகிறது. சிறுவயதில் வகுப்பில் ஒன்றாகப் படித்த நெல்லையப்பனுக்கும் அவளுக்கும் இடையே கமலஹாசன் நடிக்கும் ஒண்டிவீரன் சுவர் விளம்பரம் ஏதோ ஒரு பாத்திரம் வகித்திருக்கிறது என்ற உட்பொருள் இக்கவிதையில் மறைந்திருக்கிறது. அந்தச் சுவர் விளம்பரத்தைக் கார்த்திகா 25 வருடங்களாக நினைவில் வைத்திருக்கிறாள். ராட்டினம் 25 வருஷம் சுற்றி அந்தச் சுவர் விளம்பரம் பக்கம் திரும்பி நிற்பதின் உட்பொருள் என்ன? இக்கவிதையின் உட்பொருள் எனக்குப் பரவசத்தை ஏற்படுத்தியது.

இனி 'இருக்கை எண் 59.3' என்ற கவிதை. மேல் பெர்த்தில் கட்டிய தூளியில் குழந்தை சிணுங்கிக் கொண்டிருக்கிறது. நள்ளிரவில் டிக்கெட் பரிசோதகர் 57,58,59 ஆம் இருக்கைகளைச் சரிபார்க்கிறார். தூளியில் குழந்தை சிணுங்குகிறது. சிணுங்கும் தூளியை பரிசோதகர் மெல்ல ஆட்டுகிறார். 59.1 ஆம் இருக்கையிலிருந்து 59.3 ஆம் இருக்கை வரை குழந்தை ஊசலாடுகிறது. நள்ளிரவில் வந்த டிக்கெட் பரிசோதகர், சிணுங்கும் தூளியை மெல்ல ஆட்டுவதில் இருக்கிறது கவித்துவம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x