Last Updated : 07 Jun, 2016 11:43 AM

 

Published : 07 Jun 2016 11:43 AM
Last Updated : 07 Jun 2016 11:43 AM

கதாநதி 21: சந்திரா - பனி நீர் எழுத்து

‘இரவென்பது சந்திராவின் மொழி, சந்திராவுடையது. இறுக்கமும், வாசிப்பவரின் கவனத் தைச் சிதறவிடாமல் தமக்குள் ஈர்த்துக் கொள்ளும் பாணி அவருக்கு வாய்த்திருக் கிறது. அவர் அனுபவத்தை எழுதுகிறார். எல்லோரும் அனுபவத்தைத் தானே எழுதுகிறார்கள். ஆம் சரிதான்! தன் அனுபவத்தின் ரகசியத்தை அவர் எழுதுகிறார். அதாவது, வாழ்வின் மேல் அடுக்கை அல்ல; அதன் மடங்கிய உள் அடுக்கை, ரகசியமாக தட்டியவுடன் திறக்கத் தயாராக இருக்கும் ரகசியார்த் தங்களை எழுதுகிறார்.

அவரது முக்கிய மான கதை, ‘காட்டின் பெருங்கனவு’. ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பு படித்த கதை. ஒரு காதல் கதை போன்றது. வழக்கமான காதல் கதை அல்ல; தவிர்க்க முடியாத, நேர்ந்தே தீர்கிற மனித பந்தத்தைச் சொல்லும் கதை. அதைச் சொல்ல அவர் தேர்ந்தெடுத்த திணைகள் குறிஞ்சியும் முல்லையும். அதாவது, மலைப் பகுதியும் காடும். காட்டின் வாசனையை, இற்றுவிடும் ஒற்றை இலையின் பச்சை வாசனையை, ஒரு வாசகன் உணர முடிகிற விதமாகக் கதையை மண் தோய்ந்து எழுதுகிறார். அதே சமயம் பூடகமும் அவருக்கு இயல்பாக அமைகிறது.

அவள் தன் காது தோட்டைத் தொலைத்துவிடுகிறாள். எல்லோரும் தேடுகிறார்கள். யாரிடமும் அது கிடைக்கவில்லை. கடைசியாக அவன் கண்டுபிடித்து எடுத்துத் தருகிறான். காணாமல் போனது தோடும் இல்லை. அதைக் கண்டுபிடித்து அவன் திருப்பித் தருவதும் தோடு இல்லை என்பதை நல்ல வாசகர் உணரத் செய்யும் விதமாக அவர் எழுதுகிறார்.

‘கட் சொன்ன பின்னும் கேமரா ஓடிக் கொண்டிருக்கிறது’ என்ற தலைப்பில் ஒரு கதை. எனக்கு மிகவும் பிடித்த கதை. சினிமா என்ற பிரம்மாண்டத்தின் ஓரிழை இது. இதன் இருட்டுகளில் ஒன்று இது. இக்கதை அந்த இருட்டுக்குள் வெளிச்சம் கொண்டுவருகிறது. கடந்த பல பத்தாண்டுகளில் நம் சினிமாக்கள், பெண்ணின் உடம்பு மீது எழுப்பப்பட்ட கண்ணாடி மாளிகை. மானுட குலத்தின் விழுமியங்களின் மேல், சினிமா எனும் கலை நிர்மாணம் செய்யப்பட வேண்டிய அவசியத்தைச் சினிமாவின் மூத்த சகோதரக் கலை அல்லது சகோதரிக் கலையான இலக்கியம் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கிறது. பெண் உடம்பை மட்டுமல்லாது; திருநங்கையர் பற்றி அண்மைச் சித்தரிப்புகள் அறியாமை மற்றும் வக்கிர மற்றும் ஆபாச வெளிப்பாடுகள்.

‘கட் சொன்ன பின்னும் கேமரா ஓடிக் கொண்டிருக்கிறது’ கதை உள்ளில் பிரவேசிக்கலாம்:

படப்பிடிப்பு நடந்து கொண்டிருக் கிறது. கதை சொல்லியான துணை இயக்குநர் (பெண்) பார்வையில் கதை நிகழ்கிறது. அவர் பேச்சிலேயே கதையைக் கேட்போம். ஒரு காட்சியை படம் பிடிக்கும்போது, அடுத்த காட்சிக்குத் தயாராவோம். ஆனால், என் வேலையை மற்றொரு அசிஸ்டென்ட் பார்த்தார். ‘‘என்ன விஷயம்?” மேக்கப் மேனிடம் கேட்டேன். ‘‘இத்தனை நாளா காஞ்சிக் கிடந்த யூனிட்டுக்கே இன்னிக்குத்தான் ஏதோ கண்ணுக்கு நல்ல குளிர்ச்சியாகத் தட்டுப்படுது. உங்க டைரக்டர் அந்த பிராஸ்டிட்யூட் வர்ற சீனை எடுக்கப் போறாரு’' என்றார் மேக்கப் மேன். ‘‘அதுல என்ன அதிசயம்?’’ என்றேன். ‘‘அதில் நடிக்கப் போவது உண்மையான பிராஸ்டிட்யூட்’’ என்றார்.

எங்கள் இயக்குநர் ஆண், பெண் என்ற பாகுபாடெல்லாம் பார்க்கக் கூடியவர் இல்லை. வேடிக்கை பார்க்கும் கூட்டம் அதிகமாக இருந்தது. மக்கள் மட்டுமல்ல; யூனிட்டே வேடிக்கை பார்த்தது. நான் இயக்குநர் பக்கத்தில் இருக்கும் மானிட்டர் அருகே நின்று கொண்டிருந்தேன். அன்று காலையில்தான் இயக்குநர் திடீரென்று இந்தக் காட்சியைத் திட்ட மிட்டிருக்கிறார். சென்னையில் இருந்து நடிகை யாரையும் உடனடியாக வர வழைக்க முடியவில்லை. மேனேஜர் இந்த ஊரில் இருந்தே ஒரு நிஜ பாலியல் தொழிலாளியை வரவழைக்க ஏற்பாடு செய்துவிட்டார்.

முப்பது வயது மதிக்கத்தக்க அந்தப் பெண்மணி லாரியில் இருந்து கீழே இறங்கி வந்தார். சுற்றி நின்றவர்கள் அந்தப் பெண்ணைப் பார்த்த பார்வை யைச் சகிக்க முடியாத டைரக்டர், அந்தப் பெண்ணை அனுப்பி வைக்கச் சொல்லிவிட்டார். இரண்டு நாட்களுக்குப் பிறகு சென்னையில் இருந்து ஒரு நடிகை வந்து சேர்ந்தார். இப்போது யூனிட்காரர்கள் அந்த நடிகையைச் சாதாரணமாகவே பார்த்தார்கள். அந்தக் காட்சியை இயக்குநர் விளக்கியதும், அந்தப் பெண் சொன்னாள்: ‘‘சார், என் சேலைத் தலைப்பை விலக்கணும்னு யாரும் சொல்லலை சார். என்னால அப்படி நடிக்க முடியாது சார்...’’

அன்று இரவு தனியாக அந்தப் பெண் என்னிடம் சொன்னாள்: ‘‘எனக்கு அடுத்த மாதம் கல்யாணம். இந்த மாதிரி கேரக்டரில் நடிக்க முடியாது’’. அவள் குடும்ப நிலைமை அந்த அளவுக்கு பரிதாபமாக இருந்தது. நான் அவள் முடிவை ஆதரித்தேன்.

கடைசியாக ஒரு பெண் வந்தாள். அறைக்குள் சேலைத் தலைப்பை எடுக்கும் காட்சியை படமாக்கினார் டைரக்டர். கேமராமேன் மற்றும் நாலு பேர் மட்டுமே இருந்தோம். இயக்குநர் அறைக்கு வெளியே டி.வி மானிட்டர் முன் உட்கார்ந்து காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்தார். சேலைத் தலைப்பை எடுத்துவிட்டு பிளவ்ஸின் முதல் பின்னை அவிழ்ப்பது போல் பாவனை செய்யச் சொன்னார். அதற்குள் கட் சொல்லிவிடுவார் டைரக்டர்.

அறைக்குள் அந்தப் பெண் தலைப்பை எடுத்துவிட்டு முதல் பின்னை அவிழ்க்கத் தொடங்கினாள். தாளிடப்பட்ட அறைக்குள் காட்சி நடந்தது. டைரக்டர் அறைக்கு வெளியே இருந்ததால் அவர் ‘கட்' சொன்னது எங்களுக்குக் கேட்கவில்லை. இயக்குநர் ‘கட்’ சொல்லாதவரை கேமராமேன் கட் செய்ய மாட்டார். இயக்குநரிடம் ‘கட்’ வார்த்தைகள் கேட்காததால் கேமராமேன் யோசனையோடு படம் பிடித்துக்கொண்டிருந்தார். அந்தப் பெண் அவளுக்குச் சொல்லப்பட்ட ஆக் ஷனோடு நிற்காமல், பிளவ்ஸின் எல்லாப் பின்னையும் கழற்றி, அதைத் தனியாக கழற்றி எறிந்தாள். கேமரா ஓடிக்கொண்டே இருந்தது.

இந்தக் கதை இடம்பெற்ற ‘அழகம்மா’ என்ற தொகுப்பும், ‘காட்டின் பெருங்கனவு’ என்ற இரண்டு தொகுப்புகளையும் ‘உயிர் எழுத்து’ பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

‘பூனைகள் இல்லாத வீடு’ (உயிர்மை பதிப்பகம் வெளியிட்ட தொகுதி) ஆகிய மூன்று தொகுதிகள் 28 கதைகள் என் முன் இருக்கின்றன. மலையும் காடு சார்ந்த நிலப் பகுதிகளின், அவர் பால்யத்தின் நினைவுகள் கதை களாக வடிவம் கொள்கின்றன. இழப் பின் வலிகளால் ஆன உலக மாகவும் சந்திராவின் கதைகளைச் சொல்லலாம்.

மனித உறவுகளில் ஏற்படும் இழப்பு, பிரிவு, விலகல், தவறாகப் புரிந்து கொள்ளல் போன்றவைகளால் மனம் உலர்தல், புரிந்து கொள்ளக்கூடியது தான். ஒரு புளியம்காட்டை இழந்து வருந்தும், ஒரு ஆத்மாவைப் புளியம்பூ என்கிற கதை, ஒரு கவிதையின் உள்ளார்ந்த எழிலுடன் விவரிக்கிறது. வாங்கிய செவலைக் காட்டில் புளியம் கன்றை நட்டு, அண்டா அண்டாவாகச் சுமந்து வந்து தண்ணீர் ஊற்றி, ஒரு குழந்தையைப் போல புளியம் தோப்பை உருவாக்குகிறார் அப்பா. செடிகள் மரமாகி, மரங்கள் தோப்பாகின்றன. பார்த்துப் பூரிக்கிறார் அப்பா. அக்கா கல்யாணத்துக்குக் கடன், அண்ணன் வியாபாரத்துக்கு மூலதனம் என்று தோப்பு, கை மாறுகிறது.

கதை இப்படி முடிகிறது.

அப்பாவை வெகு நேரமாக வீட்டில் காணவில்லை. நிலா வீட்டு வாசலுக்கு வந்த நேரத்தில் அப்பா அமைதியாக வந்து உட்கார்ந்தார். ‘‘எங்கப்பா போயிருந்த?’’ என்ற கேள்விக்குப் பதில் இல்லை அவரிடம். அப்பாவின் சுவாசம் முழுவதும் புளியம் பூ வாசம்.

‘வானில் பறக்கும் புள் எலாம் நான்’ என்று நம் கவி சொல்வது இதைத்தான். இது ஓர் பேரனுபவம். எல்லாம் தாமாகவும், எல்லாவற்றிலும் தாமாகவும் ஆவது என்பதும் இதுதான். தி.ஜானகிராமனின் ஒரு பாத்திரம். எல்லோரையும் அணைத்துக்கொண்டு, அன்பே தானாய், தன்னைப் பனி நீராய் மாற்றிக்கொண்டு தெளிப்பாள்.

நம் கதைக்காரர் சந்திராவும் அப்படித்தான்!

- நதி நகரும்…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x