

தமிழின் முதல் நாவலாகிய ‘பிரதாப முதலியார் சரித்திரத்தை’ எழுதிய மாயூரம் ச. வேதநாயகம் பிள்ளையின் வரலாற்றை விளக்கமாகவும் முழுமையாகவும் அறிவதற்குப் போதுமான நூல்கள் இல்லை. அவரது பெரியம்மா மகன் ச.ஞானப்பிரகாசம் பிள்ளை என்பவர் எழுதி 1890ஆம் ஆண்டு ‘வேதநாயக விற்பன்னர் சரித்திரம்’ என்னும் நூல் ஒன்று வெளியாகியுள்ளதாகத் தெரிகிறது. அதுவும் இப்போது இருக்கும் இடம் தெரியவில்லை. பின்னர் எழுதப்பட்டுள்ள சிறு நூல்கள் சில உள்ளன. அவை மிகக் குறைவான தகவல்களை ஊதிப் பெருக்கி நூலாக்க முயன்றவையே.
19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பலரைப் பற்றிய வரலாறுகளை நூல்களாகவும் கட்டுரைகளாகவும் எழுதியுள்ள உ.வே.சாமிநாதையர்கூட வேதநாயகம் பிள்ளையின் வரலாற்றை எழுதவில்லை என்பதற்கு என்ன காரணம் இருக்கக்கூடும்? இத்தனைக்கும் வேதநாயகம் பிள்ளையைப் பலமுறை சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றவர் அவர். எனினும் அவர் கொடுத்துள்ள குறிப்புகள் பெரிதும் பயனுடையவை.
இப்போது கிடைப்பவை கு.அருணாசலக் கவுண்டர் எழுதிய ‘மாயூரம் முனிசீப் வேதநாயகம் பிள்ளை வரலாறும் நூலாராய்ச்சியும்’, மா.சேசையா எழுதிய ‘நீதிபதி வேதநாயகர்’, அ.பாண்டுரங்கன் எழுதி இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் வெளியாகியுள்ள ‘வேதநாயகம் பிள்ளை’ ஆகியவையே. இவற்றிலிருந்து மிகக் குறைவான தகவல்களையே பெற முடிகிறது.
பெயரில் ‘மாயூரம்’ இருந்தாலும் அவர் பிறந்தது குளத்தூர் என்னும் சிற்றூரில்தான். அவர் தாத்தாவாகிய மதுரநாயகம் பிள்ளையின் காலத்திலேயே கிறித்தவ மதத்திற்கு மாறிய குடும்பப் பின்னணி. 11.10.1826ஆம் ஆண்டு வேதநாயகம் பிள்ளை பிறந்தார். அவர் எவ்விதம் கல்வி கற்றார் என்பது பற்றிய தகவல் போதுமான அளவுக்குக் கிடைக்கவில்லை. அப்போது அரசாங்கப் பள்ளிகள் உருவாகவில்லை. திண்ணைப் பள்ளியிலோ தனிநபர்களிடம் குருகுல வழியிலோ கல்வி கற்றிருக்க வேண்டும் எனத் தோன்றுகின்றது. அவரது கல்விக்குக் கிறித்தவ மதப் பின்னணியும் உதவியிருக்கக் கூடும்.
திருச்சிராப்பள்ளி நீதிமன்றத்தில் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்த தியாகப்பிள்ளை என்பவர் தமிழ் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் புலமை பெற்றிருந்தவர். அவரிடம் வேதநாயகம் பிள்ளை கற்றார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நீதிபதிகள் ஆங்கிலேயர்களாக இருந்தபோது அவர்களுக்கு மொழிபெயர்ப்பாளர்கள் தேவைப்பட்டுள்ளனர். அம்மொழிபெயர்ப்பாளர்கள் எவ்விதம் ஆங்கிலத்தைக் கற்றுக் கொண்டனர் என்பதற்கு ஆதாரப்பூர்வமான தகவல்கள் ஏதுமில்லை.
தமிழ் கற்ற ஆங்கிலேயர்கள்
அரசு ஊழியர்களாக இங்கிலாந்திலிருந்து இந்தியாவுக்குப் பணிபுரிய வரும் ஆங்கிலேயர்கள் இங்குள்ள உள்நாட்டு மொழிகளைக் கற்றுக்கொள்ளச் சில அமைப்புகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளை அவர்கள் கற்றுக்கொள்ள The College of Fort St. George (இதனைத் தமிழில் ‘சென்னைக் கல்விச் சங்கம்’ என மயிலை சீனி.வேங்கடசாமி மொழிபெயர்க்கிறார்.) என்னும் அமைப்பு 1812ஆம் ஆண்டு சென்னையில் தொடங்கப்பட்டு அது 1820ஆம் ஆண்டு முதல் செயல்பட்டது. 1854ஆம் ஆண்டு வரை அதன் செயல்பாடுகள் நடந்தன என அறிய முடிகிறது. அதற்கு முன் ஆங்கிலேயர்களும் தனிநபர்களிடம் இருந்தே உள்நாட்டு மொழிகளைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு இருந்தது.
வீரமா முனிவருக்குச் சுப்ரதீபக் கவிராயர், எல்லீசு துரைக்கு இராமச்சந்திர கவிராயர் எனத் தமிழைக் கற்றுக்கொள்ளத் தனிநபர்கள் கிடைத்ததைப் போலவே வேதநாயகம் பிள்ளை போன்றவர்களுக்கு ஆங்கிலத்தைக் கற்றுக் கொள்ளவும் வாய்ப்புக் கிடைத்திருக்கலாம். அவ்விதமே தியாகப்பிள்ளையிடம் வேதநாயகம் ஆங்கிலத்தையும் தமிழையும் ஒருசேரக் கற்றுக் கொண்டுள்ளார். இரு மொழிகளிலும் ஆழ்ந்த புலமை பெற்றிருந்தார். அதுவே அவருக்கு அரசுப் பணிகளில் பல்வேறு வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.
மரபும் நவீனமும்
தம் இருபத்திரண்டாம் வயதில் நீதிமன்ற ஆவணக் காப்பாளராகச் சேர்ந்தார். பின்னர் நீதிமன்ற மொழிபெயர்ப்பாளர் பணி. 1856ஆம் ஆண்டு தேர்வு ஒன்றை எழுதி நீதிபதியாகப் பணி நியமனம் பெற்றார். அப்பதவி ‘முன்ஷீப்’ என்றழைக்கப்பட்டது. தம் முப்பதாம் வயதில் இப்பதவியைப் பெற்றார். முதல் இந்திய நீதிபதி வேதநாயகம் பிள்ளைதான் என்று நூல்கள் தெரிவிக்கின்றன. தரங்கம்பாடி, சீர்காழி, மயிலாடுதுறை ஆகிய ஊர்களில் அவர் இப்பணியைச் செய்தார். சில நிர்ப்பந்தங்களின் காரணமாக 1832ஆம் ஆண்டு பணியிலிருந்து அவர் ஓய்வுபெற நேர்ந்தது. பின்னர் மயிலாடுதுறையின் நகரசபைத் தலைவராகச் சில ஆண்டுகள் பணி புரிந்தார். 21.07.1889ஆம் ஆண்டு தம் அறுபத்து மூன்றாம் வயதில் மறைந்தார்.
19ஆம் நூற்றாண்டுத் தமிழ்ச் சமூக வரலாறு முக்கியமானது. நவீன கால மாற்றங்களைப் படிப்படியாக உள்வாங்கியபடி மரபின் பிடியிலிருந்து வலுக்கட்டாயமாகத் தன்னை விடுவித்துக்கொள்ளும் முறைப்பாடு நடந்த நூற்றாண்டு அது. 1885ஆம் ஆண்டுக்குப் பின் இன்றைய நிறுவனக் கல்வி முறை உருவானது, நிர்வாகத்தில் இந்தியர்கள் பங்கு பெற்றது, அச்சுத் தொழில்நுட்பத்தை இந்தியர்களும் பயன்படுத்தலாம் எனச் சட்டம் நெகிழ்வு கொடுத்தது முதலானவை சமூகம் புற அளவிலும் பண்பாடு உள்ளிட்ட அக அளவிலும் நவீனத்தை நோக்கிச் செல்வதற்குக் காரணமாயின. மரபுக்கும் நவீனத்திற்கும் பெரும் போராட்டம் ஏற்பட்ட காலம். மரபில் கால் வைத்துக்கொண்டே நவீனத்தையும் ஏற்றுக் கொண்டவர்களை, அதனைத் தங்கள் துறை சார்ந்து பயன்படுத்த முனைந்தவர்களைக் காலம் கண்டெடுத்துத் தன்வயமாக்கிக்கொண்டது. அப்படிக் காலம் கண்டெடுத்த தலைமகன் வேதநாயகம் பிள்ளை.