

நாடக ஆசிரியர் ஜார்ஜ் பெர்னார்ட் ஷா, நடிகை ஸ்டெல்லா கேம்ப்பெல் இருவருடைய காதல் உறவின் பல்வேறு பரிமாணங்களை மேடைக்குக் கொண்டுவந்திருந்தது ‘டியர் லயர்’ நாடகம். கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளாக பெர்னார்ட் ஷாவும், ஸ்டெல்லாவும் பகிர்ந்துகொண்ட கடிதங்களைப் பின்னணியாக வைத்து அமைக்கப்பட்ட நாடகம் இது. 1895-ம் ஆண்டிலிருந்து 1939-ம் ஆண்டு வரையான காலகட்டத்தில் நடந்த சம்பவங்களைக் கொண்டது இந்த நாடகம். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளையும் இந்த நாடகம் பதிவுசெய்கிறது.
நசீருத்தீன் ஷாவும், ரத்னா பதக் ஷாவும் தங்கள் நடிப்பால் பார்வையாளர்களைக் கடந்த நூற்றாண்டின் காதல் கடிதங்களின் உலகத்துக்கே அழைத்துச் சென்றார்கள். முதலில், நட்புடனும், நையாண்டியுடனும் தொடங்கிய இருவரின் கடித உரையாடல்கள் போகப்போக, மனித உறவுகளைப் பற்றிய தீவிரமான உரையாடலாக மாறிவிடுகின்றன. நசீருத்தீன் தன் அம்மாவின் இறுதிச் சடங்குகளை விளக்கும் காட்சியிலும், ரத்னா, ‘எலிஸா டூலிட்டில்’ கதாபாத்திரமாக நடிக்கும் காட்சியிலும் நடிப்பின் உச்சத்தை வெளிப்படுத்தியிருந்தனர் என்று சொல்லலாம்.
பெர்னார்ட் ஷா, ஸ்டெல்லா என்ற இருவரின் நாற்பது ஆண்டுகால வாழ்க்கையை மேடையில் இரண்டு மணி நேரம் நசீருத்தீனும், ரத்னாவும் அப்படியே வாழ்ந்திருந்தார்கள். இருவரும் உரையாடும் காட்சிகள் மட்டுமல்லாமல் கடிதங்களைத் தனித்தனியாக வாசிக்கும் காட்சிகளிலும் அவ்வளவு நேர்த்தி.
இரண்டு பேரின் உரையாடல் மட்டுமே நிரம்பியிருந்த இந்த நாடகத்தில் எந்தவொரு இடத்திலும் அலுப்பே ஏற்படவில்லை. அதற்குக் காரணம், இருவரும் மொழியைக் கையாண்டிருந்த விதம், நடிப்பை வெளிப்படுத்தியிருந்த விதம் என்று சொல்லலாம். ‘டியர் லயர்’ நாடகம் நாடகக் கலையின் வீரியத்தைப் பார்வையாளர்களை வலுவாக உணரச் செய்திருக்கிறது.
மேடையின் தோற்றம், நாடகத்தின் ஒளி அமைப்பு, இசை என எல்லா அம்சங்களும் ஒரு ‘கிளாசிக்’ நாடகத்துக்குப் பொருந்தும் வகையில் கச்சிதமாக அமைந்திருந்தன.
திருமணத்துக்கு வெளியிலும் ஓர் ஆண்-பெண்ணின் உறவுக் குள் இந்த அளவுக்கு நேர்த்தியான தோழமையும், புரிதலும், காதலும் இருக்க முடியும் என்பதை எண்ணற்ற உணர்வுகளுடன் இந்நாடகம் வெளிப்படுத்தியிருந்தது. இலக்கியத்தை நேசிக்கும் பார்வையாளர்களின் மனதை விட்டு இந்த நாடகம் அகலாது.
டியர் லயர் குழு
நாடக ஆசிரியர்: ஜெரோம் கில்டி
இயக்குநர்: மறைந்த சத்யதேவ் துபே
தயாரிப்பாளர்: ஜெய்ராஜ் பாட்டில்