

சீறாப்புராணத்தின் உரைநடை வடிவம்தான் இந்தச் சீறா வசன காவியம். இதை எழுதியிருப்பவர் காயல்பட்டணத்தைச் சேர்ந்த கண்ணகுமது மகுதூமுகம்மது புலவர். இது 125 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது. என்றாலும் அதில் கையாளப்பட்டுள்ள மொழியால் இந்நூல் இன்று உயிர்ப்புடன் இருக்கிறது. இந்தப் புத்தகம் சீறாப்புராணத்தின் பொழிப்புரையோ தெளிவுரையோ அல்ல. கண்ணகுமது மகுதூமுகம்மது புலவர் இதை ஒரு பருந்துப் பார்வையுடன் எழுதியிருக்கிறார். சீறாப்புராணத்தின் உரை வடிவம் என்றாலும்கூட புலவர் தனக்கே உரிய மொழித் திறன்களை எளிமையாக வெளிப்படுத்தியுள்ளார். அரபு, பாரசீக அருஞ்சொல் அகராதி, சொற்றொடரின் விளக்க அகராதி, சிறப்புப் பெயர் விளக்க அகராதி, பழமொழி அகராதி ஆகியவற்றைப் பின் இணைப்பாகத் தொகுத்துள்ளனர். இவை வாசிப்புத் தடைகளை நீக்குகின்றன. ராமாயணம், மகாபாரதம் போன்று சீறாப்புராணமும் கதாகாலட்சேபமாக நிகழ்த்தப்பட்டுள்ளது. அதற்கான ஆதாரமும் இந்நூலில் இணைக்கப்பட்டுள்ளது. வசன காவியம் என்னும் சொல்லைப் பயன்படுத்தித் தமிழுல் வெளிவந்த முதல் நூல் இதுதான். கல்தச்சன் பதிப்பகம் இந்நூலைச் சிறப்பாகத் தயாரித்திருக்கிறது.