Last Updated : 05 Mar, 2017 11:28 AM

 

Published : 05 Mar 2017 11:28 AM
Last Updated : 05 Mar 2017 11:28 AM

காலத்தின் முன் சில அழுத்தமான கேள்விகள்

இங்கிலாந்திலிருந்து வெளியாகும் கார்டியன் பத்திரிகை அண்மையில் சுவாரஸ்யமான கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தது. அனைத்து மாணவ உலகமும் அவசியம் படித்தாக வேண்டிய பத்துப் புத்தககங்களைத் தேர்ந்தெடுக்கும்படி பிரபல எழுத்தாளர்கள் பலரிடம் கேட்டது. ஆங்கில உலகில் அறியப்படாத ஆசியப் புத்தகங்களைத் தேர்ந்தெடுக்கச் செய்தார்கள். அந்தப் பட்டியலில் குறிப்பிடப்பட்ட பத்துப் புத்தகங்களுள் ஒன்று கன்னட எழுத்தாளர் யூ.ஆர். அனந்தமூர்த்தியின் நாவலான ‘சம்ஸ்காரா’. இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் ஏ.கே.ராமானுஜம். புத்தகத்தைப் பரிந்துரைத்தவர், புக்கர் பரிசு வென்ற அரவிந்த் அடிகா.

ஆங்கில மொழிபெயர்ப்பு சென்ற நூற்றாண்டின் எழுபதுகளில் ‘தி இல்லஸ்டிரேடட் வீக்லி’யில் வாராவாரம் தொடராக வெளிவந்தபோது நான் படித்திருக்கிறேன். புத்தகம் வெளி வந்தவுடன் (1965) கர்நாடகத்து பிராம்மண வகுப்பினர் நாவலைக் கடுமையாக எதிர்த்தார்கள்.

ஆயுதமான இலக்கியம்

மிகுந்த சர்ச்சையையும் மதம், மானுட தர்மம் பற்றின அறிவார்த்த விவாதங்களையும் ஏற்படுத்திய நாவல் என்ற சிறப்பைப் பெற்றதால் யூ.ஆர்.அனந்தமூர்த்தி அவரது முதல் நாவலிலேயே ஆங்கில மொழி யாக்கத்தின் மூலமாக மேற்கு நாடுகளில் வெகுவாகப் பிரபலமானார். நாவலை அவர் இங்கிலாந்தில் ஆங்கில இலக்கிய பி.எச்டி மாணவராக இருந்த போது எழுதினார். இங்மார் பர்க் மெனின் ‘தி செவன்த் சீல்’ என்ற படத்தைப் பார்த்து மிகவும் பாதிப்புக்குள்ளானதாகவும் அதுவே பால்யத்திலிருந்து தன் அடி மனத்தைத் துன்புறுத்திய விஷயங்களைக் கேள்வி கேட்கும் வகையில் ஒரு நாவல் எழுதத் தூண்டியதாகவும், அனந்தமூர்த்தி சொல்லியிருக்கிறார். பார்ப்பனரும் ஆச்சாரமான குடும்பத்தில் வளர்ந்த வருமான அவருக்கு, சாதி என்ற பெயரில் அனுஷ்டிக்கப்படும் பாசாங்குத் தனங்களைப் பற்றி எடுத்துச் சொல்ல, இலக்கியம் ஆயுதமாயிற்று.

கார்டியன் கட்டுரையைப் படித்த பிறகு மீண்டும் அந்த நாவலை வாசித்தேன். புத்தகத்திலிருந்து பார்வையை எடுக்க முடியாமல் அனந்தமூர்த்தியின் அழுத்த மான தாக்கம் என்னை ஆட் கொண்டது. கதையோட்டம் புராண உபமானங்களை, மகாபாரதப் பாத்திரங் களை, சமகாலப் பாத்திரங்களின் நடவடிக்கைகளுடன் ஒப்பிட்டபடி நகர்ந்தாலும் மதம் சார்ந்த கேள்வி எழுப்பும் எழுத்தாக இருந்தாலும் கன்னட இலக்கிய நவீனத்துவத்தின் எழுத்தாகவே நாவல் முடிவில் வெளிப் படுகிறது.

1930, 40களில் நடக்கும் கதை. கற்பனை ஊர். கற்பனைக் கதாபாத்தி ரங்கள். பெயர்கள் நிகழ்வுகள், காலப் பரிமாணம் எல்லாமே குறியீடுகளாகத் தெரிகின்றன. ப்ளேக் என்னும் கொள்ளை நோய் பரவிய காலம். அது கொள்ளை நோய் என்று உணராமல் அது சாபக் கேடு, தண்டனை என்று மனிதன் பயப்படுவதும் குறியீடு. ஒரு பிராம்மண அக்ரஹாரத்தில் வாழும் பிராணே ஷாசார்யா ஆச்சார சீலர். எல்லோருக்கும் குரு. தன் சரீர சுகத்தையே நிராகரித்து வியாதிக்கார மனைவியுடன் வாழ் பவர். அதே தெருவில் வசிக்கும் நாரணப்பா, அநாச்சாரமானவன். சாஸ்திரம் சொல்வதற்கு நேர்மாறான பழக்கவழக்கங்களுடன் சந்த்ரி என்ற தாசியுடன் வாழ்ந்தவன். அவன் செத்துப்போகிறான். அதுதான் கதையின் ஆரம்பம்.

போலி நியமங்கள்

சாவின் அதிர்ச்சியைவிட அக்ர ஹாரம் மேற்கொள்ள வேண்டிய நியமம் தான் முக்கியமாகிப்போகிறது. அக்ர ஹாரத்தில் ஒரு சாவு நிகழ்ந்தால் சடலத்தை எடுத்துத் தகனம் செய்யும் வரையில் எவரும் உணவருந்தக் கூடாது. இறந்தவன் அநாச்சாரமானவன் என்று தகனம் செய்ய உறவினர்கள் மறுக்கிறார்கள். தகனம் செய்பவர்கள் செலவுக்கு இதை வைத்துக் கொள்ளலாம் என்று தனது நகைகளைத் தருகிறாள் சந்த்ரி. வீம்புடன் விலகியவர்கள் இப்போது தங்கம் கிடைப்பது தெரிந்ததும் பேச்சை எப்படி மாற்றிக்கொள்வது என்று சங்கடத் துடன் நெளிகிறார்கள்.

கடைசியில் பிராணேஷாசாரியாரிடம் பொறுப்பை விடுகிறார்கள். சாஸ்திரங் களை ஆராய்ந்து என்ன செய்யலாம் என்று சொல்லுங்கள். நாங்கள் காத்தி ருக்கிறோம் என்கிறார்கள்.

இந்தக் காத்திருப்பில் கதை பின்னு கிறது. எல்லோரும் கட்டிக் காத்துவந்த போலி நியமங்கள் பசியிலும் காற்று வேகத்தில் பரவிய தொற்று வியாதி யிலும் குலைந்து போகின்றன. ஆச்சாரியர் காத்துவந்த சுய கட்டுப்பாடு சந்த்ரியின் ஸ்பரிசத்தில் காணாமல் போகிறது. பசி பொறுக்க முடியாமல் வேறு மடத்துச் சாப்பாட்டைச் சாப்பிடு கிறார். தர்மத்தைப் பற்றிச் சொல்லத் தமக்கு இனி அருகதை இல்லை என்று வெட்கமேற்படுகிறது.

இதற்கிடையில் நாரணப்பாவின் சடலம் சந்த்ரியின் முஸ்லிம் நண்பர் களால் யாரும் அறியாமல் எரிக்கப் படுகிறது!

எது சரி, எது தப்பு என்ற கேள்வி ஒட்டுமொத்தச் சமூகத்தை ஆட்டிப்படைக்கிறது. உண்மையில் சமூகமே ஆளுக்கொரு திசைநோக்கி ஓடி ஒளிவதுபோல் இருக்கிறது. எது தர்மம், எது அதர்மம் என்ற கேள்வி முதல்முறையாக ஆச்சாரியரை அலைக் கழிக்கிறது. பயணம் நீள்கிறது. அடுத்து என்ன என்ற கேள்வியுடன் முடிகிறது நாவல். பல கேள்விகள் எழுப்பிவிட்டு. இத்தகைய கேள்விகளுக்குப் பதில் ஏதுமில்லை என்பதுபோல.

மரபும் சடங்கும் தேவையா?

நாவலில் பல பலவீனங்கள் உண்டு என்று விமர்சகர்கள் சுட்டிக்காட்டினார் கள். மது அருந்துவது, மாமிசம் சாப்பிடுவது, வேசியுடன் படுப்பது ஆகிய நடத்தைகளைக் கொண்டாடுவதான தோற்றத்தை நாவல் ஏற்படுத்துகிறது என்று சொல்லப்பட்டது.

தாழ்த்தப்பட்ட சாதிப் பெண்கள் உடல்ரீதியாக, அதிக காம உணர்ச்சியைத் தூண்டும் கவர்ச்சி உடையவர்கள் என்பது போன்ற வர்ணனை நெருடலாக இருக்கிறது என்றார்கள். அத்தனை பாண்டித்தியம் கொண்ட ஆச்சாரியருக்கு அநாச்சார மாக வாழ்ந்தவனின் சடலத்துக்குச் சின்ன பரிகாரம் செய்து ஈமக்கிரியை செய்யலாம் என்பது கூடவா தெரியாமல் போயிற்று என்று கேள்வி எழுப்பப்பட்டது. ப்ளேக் தொற்றுநோய் கண்ட எலியைக் கழுகு கொத்திக்கொண்டு போவதாகக் கதையில் வருகிறது. காகமோ கழுகோ அதைத் தொடவே தொடாது என்பது எந்தக் கிராமத்தானுக்கும் தெரியும், அனந்தமூர்த்திக்குத் தெரியாமல் போச்சா என்றார்கள்.

இவையெல்லாம் வாசிப்பு அனுபவத் துக்கு முக்கியமல்ல. புத்தகத்தின் மொழியும், அது எழுப்பும் கேள்வியும் படிப்பவருக்கு வலுவான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. நாவல் முன்வைக்கும் விசாரங்கள் இன்றும் சமகால சமூகத் தளத்திலும் எழுப்பப்பட வேண்டியவை என்பது முக்கியமானது. பாசாங்குத்தனங்களும் மூட நம்பிக்கைகளும் பரவலாக எல்லா வகுப்பினரிடையேயும் பல ரூபங்களில் பின்பற்றப்படும் நிலையில் ‘சஸ்காரா’ நாவல் முக்கியத்துவம் பெறுகிறது. மனித நேயத்தையும் புறந்தள்ளக்கூடிய சாதியக் கட்டுப்பாடுகளை உடைத் தெறியும் ஆவேசம் அனந்தமூர்த்தியின் நாவலில் இலக்கிய நயத்தோடு வெளிப் படுகிறது.

அது மிகச் சிறந்த இலக்கிய வெளிப்பாடாக மட்டுமில்லாமல் சமூக, சமயரீதியான மாற்றுக் கருத்துக்கான அவசியத்தைச் சொல்வதாகவும் (அவர் அந்த எண்ணத்துடன் எழுதாமல் இருந்திருந்தாலும்) கொள்ளலாம் என்ப தாலேயே அனைத்து உலக மாண வர்களும் படிக்க வேண்டிய புதினமாகத் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

வாஸந்தி, மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர் தொடர்புக்கு: vaasanthi.sundaram@gmail.com



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x